CSV கோப்புகளைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புகளைச் சேர்த்தல்

உங்கள் ஸ்டோரின் உள்ளடக்கத்தை ஒரு CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்து, உங்கள் மொழிபெயர்ப்புகளைச் சேர்த்து, பின்னர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க அந்தக் கோப்பை இறக்குமதி செய்யலாம். CSV கோப்புகள் மூலம், மொழிபெயர்ப்புச் செயலி இல்லாமலேயே உங்கள் மொழிபெயர்ப்புகளை நிர்வகிக்கலாம்.

CSV கோப்புகளைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மொழிபெயர்ப்பைச் சேர்க்க CSV கோப்பைப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • குறிச்சொற்களை மொழிபெயர்க்க முடியாது.
  • நீங்கள் ஒரு தயாரிப்பின் ஹேண்டிலை மாற்றினால், குறிப்பிட்ட மொழி URLகளுக்கு அந்தத் தயாரிப்புக்கான URL திசைதிருப்பல்கள் ஆதரிக்கப்படாது.

படி 1: உங்கள் CSV கோப்பை ஏற்றுமதி செய்தல்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிகளுக்கான தற்போதைய மொழிபெயர்ப்புகளின் பட்டியலைக் கொண்ட CSV கோப்பை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஏற்றுமதி செய்யலாம். CSV கோப்பு உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும்.

CSV கோப்பில் பின்வரும் நெடுவரிசைகள் உள்ளன:

  • வகை: தயாரிப்புகள், கட்டுரைகள், தொகுப்புகள், பக்கங்கள் அல்லது வலைப்பதிவுகள் போன்ற ஆதார வகை.
  • அடையாளம்: ஆதார ID.
  • புலம்: title, body_html அல்லது meta_title போன்ற புலம்.
  • வட்டாரம்: உள்ளடக்கம் எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழி.
  • சந்தை: உள்ளடக்கம் எந்த சந்தைக்காக உருவாக்கப்பட்டதோ அந்த சந்தை.
  • நிலை: மொழிபெயர்ப்பு காலாவதியானதா என்பதை அடையாளம் காணும்.
  • இயல்புநிலை உள்ளடக்கம்: மொழிபெயர்க்கப்பட வேண்டிய அசல் உள்ளடக்கம்.
  • மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம்: மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம். உங்களின் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஆதரிக்கும் அனைத்து மொழிகளுக்கான மொழிபெயர்ப்புகளையும் ஏற்றுமதி செய்ய, அனைத்து மொழிகளும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

  4. பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • அனைத்து மொழிபெயர்ப்புகளையும் ஏற்றுமதி செய்ய அனைத்து உள்ளடக்கமும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் ஸ்டோரில் உள்ளடக்கத்தைச் சேர்க்க மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தினால், மெட்டாஃபீல்டுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் ஸ்டோரில் ஏற்கனவே மொழிபெயர்ப்புகளைச் சேர்த்திருந்து, உங்கள் இயல்புநிலை மொழியுடன் ஒப்பிடுகையில் காலாவதியான மொழிபெயர்ப்புகளை ஏற்றுமதி செய்ய விரும்பினால், காலாவதியானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தற்போது மொழிபெயர்க்கப்படாத உள்ளடக்கத்தை மட்டும் ஏற்றுமதி செய்ய, மொழிபெயர்க்கப்படாத உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்றுமதி செய்யப்பட்ட CSV கோப்பு உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும்.

படி 2: உங்கள் மொழிபெயர்ப்புகளைச் சேர்த்தல்

ஏற்றுமதி செய்யப்பட்ட CSV கோப்பின் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் நெடுவரிசையில் உங்கள் மொழிபெயர்ப்புகளை நேரடியாகச் சேர்த்து, உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும். CSV கோப்பில் உள்ள மற்ற எந்த நெடுவரிசைகளிலும் உள்ள மதிப்புகளை நீங்கள் மாற்றத் தேவையில்லை.

உங்கள் CSV கோப்பைத் திருத்த ஒரு விரிதாள் நிரலைப் பயன்படுத்தினால், உங்கள் இயல்புநிலை பிரிப்பான் அரைப்புள்ளிகளுக்குப் பதிலாக காற்புள்ளிகளாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். சில சந்தர்ப்பங்களில், அரைப்புள்ளிகளைக் கொண்ட HTML குறியீடுகள் உங்கள் CSV ஏற்றுமதிக் கோப்பில் சேர்க்கப்பட்டிருக்கும், இது உங்கள் விரிதாள் நிரலில் நெடுவரிசைகள் தவறாக வழங்கப்படுவதற்கு காரணமாகலாம்.

படி 3: உங்கள் CSV கோப்பை இறக்குமதி செய்தல்

உங்கள் மொழிபெயர்ப்புகளின் CSV கோப்பை ஏற்றுமதி செய்து திருத்திய பிறகு, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க, அதை உங்கள் Shopify நிர்வாகிக்குள் இறக்குமதி செய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > மொழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் உங்கள் மொழிபெயர்ப்புகளின் CSV கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்புகளை மேலெழுத வேண்டுமா என்பதை உறுதிப்படுத்தவும்:

    • உங்கள் CSV கோப்பில் உள்ள மொழிபெயர்க்கப்பட்ட மொழி உள்ளடக்கம் ஏற்கனவே உள்ள ஏதேனும் மொழிபெயர்ப்புகளை மாற்றியமைக்க வேண்டுமெனில், ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்புகளை மேலெழுது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • புதியதாக மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை மட்டும் இறக்குமதி செய்து, ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்புகளை மாற்றியமைக்கக் கூடாது எனில், ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்புகளை மேலெழுது என்பதைத் தேர்வுநீக்கவும்.

    இந்தத் தேர்வு ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய, இறக்குமதியால் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைப் பார்க்கவும்.

  5. பதிவேற்றித் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. CSV மூலம் மொழியை இறக்குமதி செய் தகவலை மதிப்பாய்வு செய்து, இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் CSV கோப்பில் பிழைகள் இருந்தால், இறக்குமதி நிறுத்தப்பட்டு, CSV மூலம் மொழியை இறக்குமதி செய் பக்கத்தில் பிழைகள் பட்டியலிடப்படும்.

  7. தோல்வியடைந்த அல்லது தவிர்க்கப்பட்ட மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தின் பட்டியலைக் கொண்ட உறுதிப்படுத்தல் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். உங்கள் ஸ்டோரில் உள்ள மொழிபெயர்ப்புடன் ஏற்கனவே பொருந்தும் வரிசைகள் தவிர்க்கப்பட்டதாகக் கணக்கிடப்படும், ஆனால் அவை பட்டியலிடப்படாது.

இறக்குமதியால் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

நீங்கள் ஒரு CSV கோப்பை இறக்குமதி செய்யும்போது, ஒவ்வொரு வரியும் உங்கள் ஸ்டோரில் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புடன் ஒப்பிடப்படும்:

  • ஒரு வரியில் உள்ள மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புடன் பொருந்தினால், அந்த வரி தவிர்க்கப்படும். மொழிபெயர்ப்பில் மாற்றம் ஏற்படாது. அதன் நிலையும் மாறாது. எனவே, அதே மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை மீண்டும் இறக்குமதி செய்தாலும், புதுப்பிக்கப்படாத மொழிபெயர்ப்பு புதுப்பிக்கப்பட்டதாகக் குறிக்கப்படாது. ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்பு Translate & Adapt செயலியின் தானியங்கி மொழிபெயர்ப்பு மூலம் சேர்க்கப்பட்டிருந்தால், அது புதுப்பிக்கப்படாத நிலையில் இருக்கும்போது தானியங்கி மொழிபெயர்ப்பால் அதைத் தொடர்ந்து புதுப்பிக்க முடியும்.
  • அந்த வரி ஒரு புதிய மொழிபெயர்ப்பைச் சேர்த்தாலோ, நீங்கள் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புகளை மேலெழுது என்பதைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்பை மாற்றியமைத்தாலோ, இறக்குமதி செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நீங்கள் கைமுறையாகச் சேர்த்த மொழிபெயர்ப்பாகக் கருதப்படும். நீங்கள் கைமுறையாகச் சேர்த்த மொழிபெயர்ப்புகள் புதுப்பிக்கப்படாத நிலையில் இருந்தாலும், Translate & Adapt செயலியின் தானியங்கி மொழிபெயர்ப்பு அவற்றை மாற்றாது.

CSV மொழிபெயர்ப்பு இறக்குமதிகள் தொடர்பான சிக்கல் தீர்த்தல்

CSV-ஐ இறக்குமதி செய்யும்போது தோன்றும் "Your Shop Does Not Support this Language" பிழையைச் சரிசெய்தல்

மொழி CSV கோப்பை இறக்குமதி செய்ய முயற்சிக்கும்போது இந்தப் பிழையைப் பெற்றால், உங்கள் CSV-இல் உள்ள மொழியானது உங்கள் ஸ்டோரின் தற்போதைய இயல்புநிலை மொழியுடன் பொருந்தக்கூடும்.

CSV இறக்குமதி அம்சமானது, அமைப்புகள் > மொழிகள் என்பதில் அமைந்துள்ள உங்கள் இயல்புநிலை மொழிக்கு அல்லாமல், இரண்டாம் நிலை மொழிகளுக்கு மட்டுமே மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தும்.

எடுத்துக்காட்டுச் சூழல்

  1. உங்கள் ஸ்டோரின் நிர்வாகிக்கு உள்ளே இருக்கும் அனைத்து உள்ளடக்கங்களும் துருக்கிய மொழியில் இருக்க, அது இயல்புநிலை மொழியாகத் துருக்கியைக் கொண்டிருந்தது.
  2. உங்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒரு CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளீர்கள்.
  3. அமைப்புகள் > மொழிகள் என்பதில் உங்கள் இயல்புநிலை மொழியைத் துருக்கிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றினீர்கள்.
  4. உங்கள் ஸ்டோர் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க ஆங்கில CSV-ஐ இறக்குமதி செய்ய முயன்றீர்கள், ஆனால் பிழையைப் பெற்றீர்கள்.

CSV ஆனது ஆங்கில உள்ளடக்கத்தை ஒரு மொழிபெயர்ப்பாக இறக்குமதி செய்ய முயல்வதால் இறக்குமதி தோல்வியடைகிறது, ஆனால் ஆங்கிலம் இப்போது உங்கள் இயல்புநிலை மொழியாகும், இரண்டாம் நிலை மொழியல்ல.

இதைத் தீர்க்க, உங்கள் CSV-இல் இருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து, அதைச் சரியான பக்கங்களில் ஒட்டுவதன் மூலம் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள உள்ளடக்கத்தை நீங்களே புதுப்பிக்கலாம். மொத்தமாகத் திருத்தும் செயலியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

அல்லது, இயல்புநிலை மொழியை மாற்ற நீங்கள் சந்தைகளைப் பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் இயல்புநிலை மொழியை மாற்ற சந்தைகளைப் பயன்படுத்தவும்

இயல்புநிலை மொழியை மாற்ற சந்தைகளைப் பயன்படுத்த, பின்வரும் படிகளைப் பார்க்கவும்:

  1. உங்கள் இயல்புநிலை மொழி மாற்றத்தை மீட்டமைக்கவும்.
  2. இரண்டாம் நிலை மொழியை மீண்டும் சேர்க்கவும்.
  3. CSV-ஐ மீண்டும் இறக்குமதி செய்யவும்.
  4. சந்தைகள் என்பதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கான இயல்புநிலை மொழியை மாற்றவும். சந்தைகள் மூலம் இயல்புநிலை மொழியை மாற்றினால், உங்கள் ஸ்டோர் உள்ளடக்கத்தை நீங்கள் சரிசெய்ய வேண்டியதில்லை.