தீம்களைப் புதுப்பித்தல்
Shopify Theme Store இல் தாங்கள் வெளியிட்டுள்ள தீம்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை, Shopify மற்றும் பிற தீம் வடிவமைப்பாளர்கள் அவ்வப்போது வெளியிடுகின்றனர். இந்தப் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளில் பொதுவாகப் புதிய அம்சங்கள், வடிவமைப்பு மேம்பாடுகள், பிழைத்திருத்தங்கள் ஆகியவை இருக்கும்.
Shopify Theme Store இலிருந்து ஏதேனும் இலவச அல்லது கட்டணத் தீமை நிறுவினால், தீமின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியாகும் போது, புதுப்பிக்கப்பட்ட பதிப்பை உங்கள் வரைவுத் தீம்களில் இலவசமாகச் சேர்க்கலாம். Shopify Theme Store இற்கு வெளியே வாங்கப்பட்ட மூன்றாம் தரப்புத் தீம்களுக்குப் புதுப்பிப்புகள் ஆதரிக்கப்படாது.
தீமின் அளவு மற்றும் உங்கள் இணைய இணைப்பைப் பொறுத்து, சில தீம்களுக்குப் புதுப்பிப்பை முடிக்கச் சில நிமிடங்கள் ஆகலாம்.
எல்லாத் தீம்களுக்கும் புதுப்பிப்புகள் வராது. உதாரணமாக, Theme Store இல் பட்டியலிடப்படாத பழைய தீம் உங்களிடம் இருந்தால், உங்கள் தீமிற்கு எவ்விதப் புதுப்பிப்புகளும் வராது.
எல்லா அம்சங்களும் உங்கள் தற்போதைய தீமில் பயன்படுத்தப்படாது. எடுத்துக்காட்டாக, புதுப்பிக்கப்பட்ட தீம் கட்டமைப்பு தேவைப்படும் அம்சம் வெளியானால், உங்கள் தற்போதைய தீமில் அந்தப் புதிய அம்சம் பயன்படுத்தப்படாது.
புதிய அம்சங்களை நீங்கள் அணுக விரும்பினால், அதற்குப் பதிலாக அந்த அம்சங்களை ஆதரிக்கும் புதிய தீமைச் சேர்க்கலாம். தீம் கட்டமைப்புப் பதிப்புகளுக்குக் கிடைக்கும் அம்சங்கள் மற்றும் உங்கள் தீமை மாற்றுவது குறித்து மேலும் அறிக.
இந்தப் பக்கத்தில்
தீம் புதுப்பிப்பதில் கவனிக்க வேண்டியவை
உங்கள் தீமைப் புதுப்பிப்பதற்கு, கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- உங்கள் தீமை மேம்படுத்துவது ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கலாம். உங்கள் தீமைப் புதுப்பிக்க அல்லது புதிய தீமுக்கு மாற முடிவெடுக்கும் முன், தற்போதைய தீம் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
- சில செயலிகள் புதிய தீமுடன் இணக்கமாக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், உங்கள் செயலியின் ஆவணங்களைப் பார்க்கவும் அல்லது செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.
- உங்கள் தீமை வெளியிடுவதற்கு முன், வரைவுத் தீம்களில் நீங்கள் அதில் வேலை செய்யலாம். உங்கள் வரைவுத் தீம்களில் புதிய தீமைச் சேர்ப்பது உங்களின் தற்போதைய தீம் அல்லது வேறு எந்தத் தீம்களையும் பாதிக்காது.
- உங்கள் தீமில் மாற்றங்களைச் செய்யும்போது அல்லது புதிய தீமிற்கு மாறும்போது, அது உங்கள் கணக்கின் பிற பகுதிகளைப் பாதிக்காது. உங்கள் நிர்வாகியில் உள்ள மீதமுள்ள உள்ளடக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், வெவ்வேறு தீம் பாணிகள் மற்றும் அமைப்புகளை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
உங்கள் தீம் பதிப்பைச் சரிபார்க்கவும்
உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து ஆன்லைன் ஸ்டோர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சரிபார்க்க விரும்பும் தீமின் பதிப்பு எண்ணைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தீமின் நிலையைச் சரிபார்க்கலாம். உங்கள் வெளியிடப்பட்ட தீம் மற்றும் வரைவுத் தீம்கள் பிரிவில் நிறுவப்பட்டுள்ள அனைத்துத் தீம்களிலும் பதிப்பு எண்கள் கிடைக்கும்.
உங்கள் தீம் கிடைக்கும் சமீபத்திய பதிப்பில் இருக்கும்போது, இந்தத் தீம் புதுப்பித்த நிலையில் உள்ளது என்ற நிலைச் செய்தி காட்டப்படும்.

தீமிற்கான புதுப்பிப்பு கிடைக்கும்போது, உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள தீம் பதிப்பு எண்ணுக்குப் பதிலாக ஓர் அறிவிப்பு தோன்றும். தீம் பதிப்புகள் குறித்து மேலும் அறிக.
உங்கள் தீமை மேனுவலாகப் புதுப்பிக்கவும்
உங்கள் தீமின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை உங்கள் வரைவுத் தீம்களில் சேர்க்க, விவரங்கள் உரையாடலைத் திறக்க அறிவிப்பைக் கிளிக் செய்து, வரைவுத் தீம்களில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய தீம் வெளியீடு பற்றிப் படிக்க, வெளியீட்டுக் குறிப்புகளைக் காட்டு என்பதையும் நீங்கள் கிளிக் செய்யலாம்.

தீம் எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் தீமில் செய்யப்பட்ட ஏதேனும் தனிப்பயனாக்கங்கள் நகலெடுக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தீமிற்குப் பயன்படுத்தப்படும். இவற்றில் பின்வரும் திருத்தங்கள் அடங்கும்:
- தீம் அமைப்புகளை மாற்றுதல்.
- பிரிவுகள் அல்லது பிளாக்குகளைச் சேர்த்தல், மறுவரிசைப்படுத்தல், அகற்றுதல் அல்லது மறைத்தல் போன்ற பக்கத் தளவமைப்புகளை மாற்றுதல்.
- படங்கள், வீடியோக்கள், உரை மற்றும் தரவு மூலங்களைச் சேர்ப்பது உட்படப் பிரிவு அல்லது பிளாக் அமைப்புகளை மாற்றுதல்.
- புதிய வார்ப்புருக்களை உருவாக்குதல்.
- செயலி உட்பொதிவுகள் அல்லது செயலி நீட்டிப்புகளின் அமைப்புகளைச் சேர்த்தல், அகற்றுதல் அல்லது மாற்றுதல்.
- தீம் உள்ளடக்க எடிட்டரைப் பயன்படுத்தி, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள வார்த்தைகளில் மாற்றங்களைச் செய்தல்.
நீங்களோ அல்லது நிறுவப்பட்ட செயலியோ உங்கள் தீமில் ஏதேனும் குறியீட்டு மாற்றங்களைச் செய்திருந்து, உங்கள் குறியீட்டுத் திருத்தங்கள் புதுப்பிப்புடன் முரண்படவில்லை எனில், உங்களின் குறியீட்டுத் திருத்தங்கள் புதுப்பிப்புடன் சேர்க்கப்படும்.

புதுப்பிக்கப்பட்ட தீம் உங்கள் வரைவுத் தீம்களில் சேர்க்கப்பட்ட பிறகு, குறியீட்டுத் திருத்தங்கள் புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறிக்க தீம் கார்டில் ஒரு செய்தி காட்டப்படும்.
குறியீட்டுத் திருத்தங்கள் புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டிருந்தால், "தீம் சேர்க்கப்பட்டது: குறியீட்டுத் திருத்தங்கள் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டன" என்ற செய்தி காட்டப்படும்:

குறியீட்டுத் திருத்தங்கள் புதுப்பிப்பில் சேர்க்கப்படாவிட்டால், "தீம் சேர்க்கப்பட்டது: குறியீட்டுத் திருத்தங்களைச் சேர்க்க முடியவில்லை" என்ற செய்தி காட்டப்படும்:

உங்கள் குறியீட்டு மாற்றங்கள் சேர்க்கப்படாமல், அவற்றை நீங்கள் வைத்திருக்க விரும்பினால், அவற்றை உங்கள் தீமின் புதிய பதிப்பிற்கு நகலெடுக்க வேண்டும். உங்கள் தீமில் செய்யப்பட்டுள்ள குறியீட்டு மாற்றங்களைக் கண்டறிய, Shopify App Store-இல் உள்ள ஒரு செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் தீமைப் புதுப்பிப்பதற்கு முன், தனிப்பயனாக்கப்பட்ட எந்தவொரு குறியீட்டின் நகலையும் எப்போதும் சேமிக்க வேண்டும்.
குறியீட்டு மாற்றங்கள் பின்வரும் ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வரலாம்:
- Templates கோப்புறையில் உள்ள கோப்புகள் மற்றும் Config கோப்புறையில் உள்ள
settings_data.jsonகோப்பைத் தவிர, குறியீட்டு எடிட்டரில் உள்ள உங்கள் தீம் கோப்புகளில் மேனுவலாகச் செய்யப்பட்டுள்ள குறியீட்டு மாற்றங்கள். - உங்கள் ஸ்டோரில் நீங்கள் நிறுவிய ஒரு செயலி உங்கள் சார்பாக உங்களின் தீம் கோப்புகளில் செய்துள்ள தானியங்கு குறியீட்டு மாற்றங்கள்.
உங்கள் வரைவுத் தீம்களில் தீமின் புதிய பதிப்பைச் சேர்க்கும்போது, அதன் பெயரின் முன்னொட்டாக இதன் புதுப்பிக்கப்பட்ட நகல் என்பது சேர்க்கப்படும். பிறகு, நீங்கள் பின்வரும் செயல்களை மேற்கொள்ளலாம்:
- சமீபத்திய தீம் பதிப்பிற்கான வெளியீட்டுக் குறிப்புகளைப் பார்க்க, வெளியீட்டுக் குறிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தீமின் புதிய பதிப்பு நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் காட்டப்படுவதையும் செயல்படுவதையும் உறுதிசெய்ய, மதிப்பாய்வு செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் நேரலை ஆன்லைன் ஸ்டோரைப் புதிய தீம் பதிப்பைக் கொண்டு புதுப்பிக்க நீங்கள் தயாராக இருக்கும்போது, வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் உங்கள் தீமில் தனிப்பயன் CSS-ஐச் சேர்த்திருந்தால், நீங்கள் குறிவைத்த செலக்டர்கள் உங்கள் தீமின் சமீபத்திய பதிப்பிலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், உங்களின் CSS எதிர்பார்த்தபடி பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
Shopify Theme Store-இல் கிடைக்கும் ஒரு தீமிற்கு வரைவுத் தீம்களில் சேர் என்ற விருப்பம் காட்டப்படாவிட்டால், நிலையான புதுப்பிப்புச் செயல்முறையைப் பயன்படுத்தி உங்களால் உங்கள் தீமைப் புதுப்பிக்க முடியாது. Shopify Theme Store-இலிருந்து உங்கள் தீமின் புதிய நகலை நிறுவி, அதன் பிறகு உங்கள் அமைப்புகள் மற்றும் தனிப்பயனாக்கங்களை மேனுவலாகப் பயன்படுத்துவதன் மூலம் சமீபத்திய பதிப்பின் பலனைப் பெறலாம்.
உங்கள் தீமிற்கான தானியங்குப் புதுப்பிப்புகள்
Shopify மூலம் உங்கள் தீமிற்குத் தானியங்குப் புதுப்பிப்பு பயன்படுத்தப்படும்போது, உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள தீம் பதிப்பு எண்ணுக்குப் பதிலாக ஓர் அறிவிப்பு தோன்றும்.
உங்கள் தீமில் உள்ள பிழைகள் அல்லது பாதுகாப்புச் சிக்கல்களைச் சரிசெய்வதற்கானவை இந்தத் தானியங்குப் புதுப்பிப்புகள். இந்தப் புதுப்பிப்புகள் உங்கள் தீமின் தோற்றத்தையும் உணர்வையும் மாற்றாது அல்லது உங்கள் உள்ளடக்கம் அல்லது அமைப்புகளில் எந்த மாற்றங்களையும் செய்யாது. தீமின் நிலை உரையாடலில் வெளியீட்டுக் குறிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், இந்தப் புதுப்பிப்புகளுக்கான வெளியீட்டுக் குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் தீமிற்குப் புதுப்பிப்புகள் ஆதரிக்கப்படவில்லை
Shopify Theme Store-இலிருந்து நிறுவப்பட்ட தீம்களுக்கு மட்டுமே உங்களால் புதுப்பிப்புகளைப் பெற முடியும். பதிவேற்றப்பட்ட தீம்களுக்குத் தானியங்குப் புதுப்பிப்புகள் ஆதரிக்கப்படாது என்பதால், பதிவேற்றப்பட்ட ஒரு தீமைப் புதுப்பிக்க, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும்:
- நீங்கள் Shopify Theme Store-இலிருந்து ஒரு தீமை வாங்கி அதை வேறொரு ஸ்டோரில் பதிவேற்றியிருந்தால், அந்தப் பதிவேற்றப்பட்ட தீம் உரிமம் இல்லாததாகும். எனவே, புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான தகுதியைப் பெற, அதை மீண்டும் Theme Store-இலிருந்து வாங்க வேண்டும். Shopify Theme Store-இலிருந்து வாங்கப்பட்ட தீம்கள், நீங்கள் முதலில் வாங்கிய ஸ்டோருக்கு மட்டுமே உரிமம் பெற்றவை ஆகும். Shopify-இல் தீம்களை உரிமமளிப்பது மற்றும் மாற்றுவது குறித்து மேலும் அறிக.
- Shopify Theme Store-க்கு வெளியே, மூன்றாம் தரப்புத் தீம் வடிவமைப்பாளரிடமிருந்து நீங்கள் ஒரு தீமை வாங்கியிருந்தால், புதுப்பிப்புகளுக்கு அந்த வடிவமைப்பாளரைத் தொடர்புகொள்ளவும்.

நீங்கள் விண்டேஜ் Shopify தீமைப் பயன்படுத்தினால், அது நிறுத்தப்பட்டுவிட்டது மற்றும் இனி Shopify-ஆல் புதுப்பிக்கப்படாது. சமீபத்திய Shopify அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள, புதிய தீமிற்கு மேம்படுத்தவும் அல்லது Shopify பார்ட்னர் ஒருவரின் உதவியைப் பெறவும்.

நீங்கள் விண்டேஜ் கட்டண தீமைப் பயன்படுத்தினால், உங்கள் தீமை மேம்படுத்தி உங்கள் Shopify நிர்வாகியில் தீம் புதுப்பிப்புகளுக்கான தகுதியைப் பெற, Shopify பார்ட்னருடன் இணைந்து பணியாற்றலாம்.