உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தீமின் சிக்கலைத் தீர்த்தல்

காட்சிச் சிக்கல்கள், விடுபட்ட கூறுகள், செயல்பாட்டுச் சிக்கல்கள் உட்பட, உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தீமில் உள்ள பொதுவான சிக்கல்களைத் தீர்க்க இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட சிக்கலுக்கான தீர்விற்குச் செல்லும் முன், பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளை முதலில் நிறைவுசெய்யுங்கள். இந்த வழிகாட்டியைப் பின்பற்றிய பிறகும் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், உங்கள் தீமின் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

படி 1: பொதுவான சிக்கல் தீர்த்தல்

உங்கள் தீமில் உள்ள சிக்கலின் மூலத்தைக் கண்டறிய இந்தப் படிகளை நிறைவுசெய்யுங்கள்:

  1. இந்தச் சிக்கல் உங்கள் சாதனத்தில் மட்டுமே இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்: சாதன அளவிலான சிக்கல்கள் பொதுவாகச் சாதனம் அல்லது உலாவி அமைப்புகள் அல்லது இணைய இணைப்புச் சிக்கல்களின் விளைவாக ஏற்படும். பின்வரும் படிகளை முயன்று பார்க்கவும்:
    • உங்கள் உலாவி கேச் மற்றும் குக்கீகளை அழிக்கவும். நீங்கள் உங்கள் Shopify கணக்கைப் பயன்படுத்தி Shopify உதவி மையத்தில் உள்நுழைந்திருந்தால், உலாவி கேச் மற்றும் குக்கீகளை அழிப்பதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.
    • மறைநிலைப் பயன்முறை, வேறொரு சாதனம் அல்லது Shopify செயலி ஆகியவற்றைப் பயன்படுத்த முயலவும்.
    • மொபைல் தரவு அல்லது வேறொரு இணைய இணைப்பைப் பயன்படுத்த முயலவும்.
    • உங்கள் உலாவி புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
    • அனைத்துக் குக்கீகளையும் தடுக்கும்படி உலாவி அமைக்கப்படவில்லை என்பதைச் சரிபார்க்கவும், ஏனெனில் குக்கீகள் இல்லாமல் சில செயலிகள் சரியாகக் காட்டப்படாமல் போகலாம்.
    • விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) பயன்படுத்தப்படவில்லை என்பதையும், Shopify ஐத் தடுக்கும் ஃபயர்வால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் சரிபார்க்கவும்.
  2. வேறொரு தீமில் சிக்கலைச் சோதித்துப் பார்க்கவும்: பிற சாதனங்கள், உலாவிகள் அல்லது இணைய இணைப்புகளிலும் நீங்கள் தொடர்ந்து இந்தச் சிக்கலை எதிர்கொண்டால், இந்தச் சிக்கலானது சாதன அளவில் ஏற்படுவதல்ல, இதை எங்கிருந்தும் மீண்டும் உருவாக்க முடியும். இதைப் பார்வையிடவும்: Theme Store மேலும், தீமின் புதிய பதிப்பை நிறுவி, அதன் சமீபத்திய பதிப்பிலும் இதே சிக்கல் தொடர்கிறதா எனச் சோதிக்கவும். ஒரு இலவச Shopify தீம்போன்ற வேறு ஒரு தீமை நிறுவிப் பார்ப்பதும் ஒரு நல்ல நடைமுறையாகும். ஏனெனில், குறிப்பிட்ட அந்தத் தீமினால் சிக்கல் ஏற்படுகிறதா அல்லது எல்லா தீம்களிலும் இதே சிக்கல் ஏற்படுகிறதா என்பதை இதன் மூலம் நீங்கள் தீர்மானிக்கலாம். பிற தீம்களைச் சோதித்த பிறகு:
    • உங்கள் தற்போதைய தீமிலும், தனிப்பயனாக்கப்படாத புதுப்பிக்கப்பட்ட தீம் பதிப்பிலும் மட்டுமே இந்தச் சிக்கல் இருந்தால், உங்கள் தீமிற்கான ஆதரவைப் பெற வேண்டியிருக்கலாம்.
    • உங்கள் தற்போதைய தீமில் மட்டுமே சிக்கல் இருந்தால், தீம் குறியீட்டில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். எந்தத் தீம் கோப்பு மாற்றப்பட்டது எனத் தெரிந்தால் அல்லது பாதிக்கப்பட்ட கோப்பைக் கண்டறிய முடிந்தால், குறியீடு எடிட்டரின் காலவரிசை பார்வையில் அக்கோப்பின் முந்தைய பதிப்பை மீட்டெடுக்கலாம். முந்தைய பதிப்பை மீட்டெடுக்கும்போது கோப்பின் உள்ளடக்கங்கள் முழுமையாக மாற்றப்படும் என்பதால், மாற்றங்கள் எதையும் வைத்திருக்க விரும்பினால், தற்போதைய கோப்பின் உள்ளடக்கங்களை முதலில் பாதுகாப்பான இடத்தில் நகலெடுத்து வைக்கவும். தீம் குறியீட்டில் நீங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை எனில், உங்கள் தீம் அமைப்புகளைச் சரிபார்க்கலாம். எடுத்துக்காட்டாக, கார்ட்டில் சேர் பொத்தான் காட்டப்படவில்லை எனில், உங்கள் தீம் அமைப்புகளில் பொத்தான்களுக்கான நிறங்களைச் சரிபார்த்து, அவை வெவ்வேறான மற்றும் முரண்பட்ட நிறங்களில் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
    • இந்தச் சிக்கல் எல்லா தீம்களிலும் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகி அமைப்புகள், செயலிகள் அல்லது பிற சிக்கல்களால் இது ஏற்பட்டிருக்கலாம்.
  3. செயலியால் சிக்கல் ஏற்பட்டுள்ளதா எனச் சோதித்தல்: உங்கள் ஸ்டோர்ஃபிரண்டைப் பாதிக்கும் ஏதேனும் செயலிகளைச் சமீபத்தில் நிறுவியிருந்தாலோ புதுப்பித்திருந்தாலோ, அந்தச் செயலியைத் தற்காலிகமாக நிறுவல் நீக்கலாம். செயலியை நிறுவல் நீக்கிய பிறகு சிக்கல் இல்லை என்றால், ஸ்டோர்ஃபிரண்டில் சரியாகக் காட்டப்படுவதற்குச் செயலி டெவலப்பரின் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொண்டு கூடுதல் உதவி பெறலாம். உங்கள் செயலிகள் தொடர்பான உதவியைப் பெறுவது பற்றி மேலும் அறிக. செயலியை நிறுவல் நீக்கிய பிறகும் சிக்கல் இருந்தால், இந்தச் சிக்கல் செயலியால் ஏற்படவில்லை என்பதை அறியலாம்.

படி 2: தீம் சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்

படம் காட்டப்படுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

உங்கள் தீமில் படத்தைப் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப படத்தின் பரிமாணங்களோ தோற்ற விகிதமோ பொருந்தவில்லை எனில், நீங்கள் எதிர்பார்த்ததில் இருந்து படங்கள் வேறுபட்டு காட்டப்படலாம். நீங்கள் பயன்படுத்தும் படத்திற்கான படத்தின் பரிமாணங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து, பின்வரும் பொதுவான காட்சிச் சிக்கல்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • லோகோ மிகச் சிறியதாக இருத்தல்: உங்கள் லோகோ படம் நீங்கள் எதிர்பார்த்ததைவிடச் சிறியதாகவும் உங்கள் ஹெடர் பெரியதாகவும் இருந்தால், லோகோ படக் கோப்பில் உள்ள வெற்றிடத்தால் அவ்வாறு இருக்கலாம். லோகோவைச் சுற்றிப் படம் செதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் வெற்றிடம் எதுவும் இல்லை என்பதையும் சரிபார்க்க, படக் கோப்பைத் திருத்தவும்.
  • ஸ்லைடுஷோ அல்லது பேனர் படம் செதுக்கப்பட்டிருத்தல்: ஸ்லைடுஷோ, படப் பேனர் அல்லது முழு அகலப் பிரிவில் உள்ள ஒரு படம் செதுக்கப்பட்டிருந்தால், அந்தப் படத்தின் தோற்ற விகிதமானது அப்பிரிவின் படப் பகுதியின் வடிவத்திலிருந்து வேறுபட்டுள்ளது என்று அர்த்தம். ஃப்ரேமுக்குள் இருக்க வேண்டிய படத்தின் பகுதியை அமைக்க, நீங்கள் குவியப் புள்ளியைச் சேர்க்கலாம். பிற விருப்பத்தேர்வுகள் பற்றி அறிய, படம் செதுக்கப்படுவதைக் குறைப்பதற்கான விருப்பத்தேர்வுகளைப் பார்க்கவும்.
  • GIF சரியாகக் காட்டப்படாமல் இருத்தல்: GIF படம் சரியாகக் காட்டப்படாமல், அது தயாரிப்பு விளக்கம் அல்லது வலைப்பதிவு இடுகை போன்ற இடங்களில் ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் சேர்க்கப்பட்டிருந்தால், படத்தின் அளவால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். இதைச் சரிசெய்ய, ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள GIF-ஐக் கிளிக் செய்து, படத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். படத்தின் அளவு கீழ்தோன்றும் மெனுவில், அசல் அளவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், படத்தின் மூலைகளைக் கிளிக் செய்து, உட்புறமாக இழுத்துச் சிறியதாகவோ வெளிப்புறமாக இழுத்துப் பெரியதாகவோ மாற்றுவதன் மூலம் GIF-இன் அளவை மாற்றலாம்.
  • படத்தின் நிறங்கள் மாறியிருத்தல்: அசல் படத்தில் இருப்பதற்கும் உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் இருப்பதற்கும் நிறங்களில் பெரிய மாற்றம் இருந்தால், உங்கள் படங்கள் நிலையான Red Green Blue (sRBG) நிறங்களில் இல்லாமல் இருக்கலாம். இந்த நிற மாற்றத்தைச் சரிசெய்ய, புகைப்படத்தைத் திருத்தும் செயலியில் உங்கள் கோப்பை sRBG-ஆகச் சேமிக்கவும். இதற்குப் பொதுவாக Web optimize, Adjust image for Web அல்லது Save for Web போன்ற சொற்கள் பயன்படுத்தப்படும். நிறப் புரொஃபைல்கள் பற்றி மேலும் அறிக.
  • தயாரிப்புப் படங்கள் சீரமைக்கப்படாமல் இருத்தல்: உங்கள் சேகரிப்புப் பக்கங்களில் தயாரிப்புப் படங்கள் சீரமைக்கப்படாமல் இருந்தால், தயாரிப்புப் படக் கோப்புகளின் உயரமும் அகலமும் ஒரே விகிதத்தில் இருக்கும்படி அதன் தோற்ற விகிதத்தைச் சரிசெய்து, அதன் பிறகு தயாரிப்புப் படங்களை மீண்டும் பதிவேற்ற வேண்டியிருக்கலாம். நீங்கள் Shopify App Store-இல் இருந்து படத்தைத் திருத்தும் செயலி ஒன்றையும் பயன்படுத்தலாம்.
தயாரிப்பு அல்லது சேகரிப்பு காட்டப்படுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

உங்கள் குறிப்பிட்ட சிக்கலுக்கான பின்வரும் சிக்கல்களையும் அவற்றைச் சரிசெய்வதற்கான படிகளையும் மதிப்பாய்வு செய்யவும்:

  • தயாரிப்புகள் இல்லாமல் இருத்தல்: உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் தயாரிப்புகள் காட்டப்படவில்லை எனில், Shopify நிர்வாகியில் தயாரிப்பின் வெளியிடுதல் பிரிவில் உள்ள நிலை மற்றும் விற்பனைச் சேனல்கள் ஆகியவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கலாம். தயாரிப்பின் நிலை செயலில் உள்ளது என்பதிலும், தயாரிப்பானது ஆன்லைன் ஸ்டோருக்குக் கிடைக்கிறது என்பதிலும் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • சேகரிப்புகள் இல்லாமல் இருத்தல்: உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் சேகரிப்புகள் காட்டப்படவில்லை எனில், Shopify நிர்வாகியில் சேகரிப்பின் வெளியிடுதல் பிரிவில் உள்ள விற்பனைச் சேனல்கள் என்பதை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கலாம். சேகரிப்பானது ஆன்லைன் ஸ்டோருக்குக் கிடைக்கிறது என்பதையும் உங்கள் சேகரிப்பு உங்களின் மெனுக்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தவும்.
  • சேகரிப்புகள் காட்டப்பட்டு, தயாரிப்புகள் இல்லாமல் இருத்தல்: உங்கள் சேகரிப்புகள் காட்டப்பட்டும் தயாரிப்புகள் காட்டப்படாமல் இருந்தால், உங்கள் மெனுக்கள் அமைப்புகளில் சேகரிப்புக்கான ஏதேனும் டேக் வடிப்பான்கள் உள்ளதா என மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கலாம். தயாரிப்புகளைக் காட்டாமல் தடுக்கும் டேக்குகள் எதுவும் டேக்குகளைக் கொண்டு சேகரிப்பை வடிகட்டு புலத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • நாணயம் தவறாக இருத்தல்: தயாரிப்புகளுக்கோ உங்கள் சேகரிப்புகளிலோ நாணயம் சரியாகக் காட்டப்படவில்லை எனில், கூடுதல் குறியீடு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, அமைப்புகள் > பொது என்பதில் உள்ள ஸ்டோர் இயல்புநிலைகள் பிரிவில் நாணயம் காட்டப்படுதல் என்பதை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாணயம் காட்டப்படும் விதத்தை வடிவமைப்பது பற்றி மேலும் அறிக.
  • சில தயாரிப்புகள் வித்தியாசமாகக் காட்டப்படுதல்: சில தயாரிப்புகளோ சேகரிப்புகளோ மற்றவற்றை விட வித்தியாசமாகக் காட்டப்பட்டால், உங்கள் Shopify நிர்வாகியில் அந்தத் தயாரிப்புகளுக்கோ சேகரிப்புகளுக்கோ ஒதுக்கப்பட்டுள்ள தீம் வார்ப்புருவை மதிப்பாய்வு செய்யவும்.
  • தயாரிப்பு அல்லது சேகரிப்பு வார்ப்புருக்களைத் திருத்த முடியவில்லை: தீம் எடிட்டரில் இயல்புநிலைத் தயாரிப்பு அல்லது சேகரிப்பு வார்ப்புருக்கள் மங்கலாகத் தோன்றித் தேர்ந்தெடுக்க முடியாமல் இருந்தால், ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனலுக்குக் குறைந்தபட்சம் 1 தயாரிப்பையோ சேகரிப்பையோ கிடைக்கச் செய்ய வேண்டும். மாற்றங்களை முன்னோட்டமிடுவதற்குத் தயாரிப்புகளோ சேகரிப்புகளோ கிடைக்காமல், இந்த இயல்புநிலை வார்ப்புருக்களை நீங்கள் திருத்த முடியாது. சேகரிப்புக் கிடைக்கும் தன்மையை மாற்றுவது மற்றும் உங்கள் விற்பனைச் சேனல்களில் தயாரிப்புக் கிடைக்கும் தன்மையை அமைப்பது பற்றி மேலும் அறிக.
மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் காட்டப்படுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

மொழிபெயர்க்கப்பட்ட உங்கள் உள்ளடக்கம் சரியாகக் காட்டப்படவில்லை என்றாலோ உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் இல்லை என்றாலோ, அந்த உள்ளடக்கத்திற்கான மொழிபெயர்ப்புகள் காலாவதியாகியிருக்கலாம் அல்லது விடுபட்டிருக்கலாம். உள்ளடக்கமானது ஒரு சந்தைக்கான குறிப்பிட்ட வார்ப்புருவிலும் இருக்கலாம். இயல்புநிலை மொழியில் ஏதேனும் புதிய உள்ளடக்கத்தைச் சேர்க்கும்போதெல்லாம், தானியங்கு மொழிபெயர்ப்பை மீண்டும் இயக்கவும் அல்லது புதிய மொழிபெயர்ப்புகளை மேனுவலாகச் சேர்க்கவும் நினைவில் கொள்ளவும்.

மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்திற்குப் பின்வரும் நிலைகள் பொருந்தக்கூடும்:

  • மொழிபெயர்க்கப்பட்டது: உள்ளடக்கத்திற்கு மொழிபெயர்ப்புகள் உள்ளன.
  • காலாவதியானது: இயல்புநிலை மொழியில் உள்ள உள்ளடக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான மொழிபெயர்ப்புகளில் எந்தப் புதுப்பிப்பும் செய்யப்படவில்லை.
  • மொழிபெயர்க்கப்படாதவை: இந்த உள்ளடக்க வகைக்கு எந்த மொழிபெயர்ப்பும் இல்லை.

மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்யும்போது, மொழிபெயர்க்கப்படாத அல்லது காலாவதியான உள்ளடக்கத்தைப் புதுப்பிக்கவும், அதன் பிறகு மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் சரியாகக் காட்டப்படும்.

உங்கள் ஸ்டோரை மொழிபெயர்ப்பது மற்றும் உள்ளூர்மயமாக்குவது பற்றி மேலும் அறிக.

தீம் எடிட்டர் மற்றும் ஸ்டோர்ஃபிரண்ட் வேறுபாடுகளைச் சரிசெய்தல்

உங்கள் ஸ்டோர்ஃபிரண்டிலும் தீம் எடிட்டரிலும் ஒரே தகவல் காட்டப்படவில்லை எனில், நீங்கள் திருத்துகின்ற தீம் வார்ப்புருவை மதிப்பாய்வு செய்யவும். சரியான தகவல் காட்டப்படுவதற்கு, உங்கள் தீம் வார்ப்புருக்களில் நீங்கள் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கலாம்.

வெவ்வேறு சந்தைகளுக்கு வெவ்வேறு ஸ்டோர்ஃபிரண்டுகளை உருவாக்கவும் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காட்டவும் மார்க்கெட் ஓவர்ரைடுகள் உங்களை அனுமதிக்கின்றன. புதுப்பிப்புகளைச் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சந்தையிலோ B2B-இலோ நீங்கள் கவனக்குறைவாகப் பணிபுரிந்திருக்கலாம். சரியான சந்தைகளில்தான் உள்ளடக்கம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் தீம் எடிட்டரில் உள்ள சந்தை கீழ்தோன்றும் மெனு மூலமாக உள்ளடக்கத்தைக் கண்டறியவும்.

மார்க்கெட் ஓவர்ரைடுகள் பற்றி மேலும் அறிக.

மொபைல் மற்றும் டெஸ்க்டாப் காட்சி வேறுபாடுகளைச் சரிசெய்தல்

Shopify Theme ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து தீம்களும் ரெஸ்பான்சிவ் தீம்கள் ஆகும், அதாவது தீம் திரையின் அளவிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். உங்கள் பக்கங்களும் படங்களும் சரியாகக் காட்டப்படுவதைச் சரிபார்க்க, தீம் எடிட்டரில் தீமைத் திருத்தும்போது திரை அளவுப் பார்வையை மாற்றிக்கொள்ளலாம். தீம் எடிட்டரில் வெவ்வேறு திரை அளவுகளைப் பார்ப்பது குறித்து மேலும் அறிக.

பல பிரிவுகள் மற்றும் பிளாக்குகளில், நீங்கள் தனிப்பயனாக்கக்கூடிய மொபைல் அமைப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தொடர்புடைய தயாரிப்புகள் பிரிவில் மொபைலில் உள்ள நெடுவரிசைகளின் எண்ணிக்கையை அமைக்கலாம். மொபைல் திரை அளவுகளில் உள்ள ஏதேனும் காட்சிச் சிக்கல்களைச் சரிசெய்ய, ஒவ்வொரு வார்ப்புருவுக்குமான மொபைல் தொடர்பான பிரிவு அமைப்புகளை மதிப்பாய்வு செய்யலாம்.

அனைத்து திரை அளவுகளிலும் தீம் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய, சில தீம் அம்சங்கள் டெஸ்க்டாப்பை விட மொபைலில் வித்தியாசமாகக் காட்டப்படலாம். எடுத்துக்காட்டாக, டெஸ்க்டாப் திரை அளவில், உங்கள் ஸ்லைடுஷோவில் உரை மேலடுக்கு இருக்கலாம், அங்கு உரை பெரும்பாலும் பட நிற ஒளிபுகாமையிலோ அல்லது உரை நிழலுடனோ படத்திற்கு மேல் காட்டப்படும். இருப்பினும், மொபைல் திரை அளவுகளில், உரை ஸ்லைடுஷோவிற்குக் கீழே காட்டப்படலாம். எந்தத் திரை அளவிலும் உரையைப் படிக்கும் வகையில், இது அணுகல்தன்மை அம்சமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உரை மேலடுக்காக இருந்தால், அது மொபைலில் மிகவும் சிறியதாகக் காட்டப்படும், இதனால் அதைப் படிப்பது கடினமாக இருக்கும்.

மொபைலில் உங்கள் ஸ்டோர்ஃபிரண்டைப் பார்க்கும்போது, உங்கள் சிறப்புத் தொகுப்புப் பிரிவு அல்லது சேகரிப்புப் பக்கங்கள் சீரற்ற அளவுகளில் காட்டப்பட்டாலோ சரியாகச் சீரமைக்கப்படாமல் இருந்தாலோ, அது சீரற்ற காட்சி விகிதங்களால் (aspect ratios) இருக்கலாம். ஒரு சேகரிப்பு அல்லது சிறப்புத் தொகுப்பிற்குள் காட்டப்படும் தயாரிப்புப் படங்கள் போன்ற படக் கட்டங்கள், திரை அளவிற்கேற்ப ரெஸ்பான்சிவ்வாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. படக் கட்டத்தில் உங்கள் படங்களுக்குச் சீரற்ற காட்சி விகிதங்கள் இருந்தால், அவை திரை அளவைப் பொறுத்து வித்தியாசமாகக் காட்டப்படலாம். பொதுவாக தயாரிப்புப் கட்டங்களில் 2048 pxக்கு 2048 px என்ற அளவிலான சதுரத் தயாரிப்புப் படங்கள் சிறப்பாகச் செயல்படும். அனைத்து திரை அளவுகளிலும் உகந்தவாறு செயல்பட, சீரான காட்சி விகிதம் கொண்டிருக்குமாறு உங்கள் படங்களைப் புதுப்பிக்கவும். படக் காட்சி விகிதம் குறித்து மேலும் அறிக.

ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் சிக்கல்களைச் சரிசெய்தல்

சில நேரங்களில் உங்கள் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் சேர்க்கப்படும் HTML குறியீடு உங்கள் தீம் குறியீட்டுடன் முரண்படலாம். தயாரிப்புப் பக்கம், பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகை போன்ற ஒற்றைப் பக்கத்தில் சிக்கல் இருந்தால், அதற்குக் கூடுதலான HTML காரணமாக இருக்கலாம். வேறு தளத்திலிருந்து உரையை நகலெடுத்து ஒட்டுவதால் சில சமயங்களில் இது சேர்க்கப்படலாம்.

HTML குறியீட்டை மதிப்பாய்வு செய்தல்

ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் HTML குறியீட்டை மதிப்பாய்வு செய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் நிர்வாகியில் உள்ள பக்கத்திற்குச் செல்லவும்.
  2. HTML குறியீட்டை மதிப்பாய்வு செய்ய, Edit code HTMLஐக் காட்டு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  3. காட்சியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் HTML குறியீட்டைக் கண்டறிந்து அதை அகற்றவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வடிவமைப்பை அழித்தல்

நீங்கள் உரையின் ஒரு பகுதியைத் தனிப்படுத்திக் காட்டிவிட்டு HTML வடிவமைப்பை அழிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் நிர்வாகியில் உள்ள பக்கத்திற்குச் செல்லவும்.
  2. வடிவமைப்புச் சிக்கல்கள் உள்ள உரையைத் தனிப்படுத்திக் காட்டவும்.
  3. 🚫 பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் குறித்து மேலும் அறிக.

ஆதரிக்கப்படாத URLக்கான திசைதிருப்பலைச் சரிசெய்தல்

உங்கள் ஸ்டோருடன் இணைக்கப்படாத URLகளுக்குப் பயனர்களைத் திசைதிருப்பும் குறியீடு உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் இருந்தால், நீங்கள் தீம் எடிட்டரைப் பார்க்கும்போது திசைதிருப்பல் முடக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து அவர்களை வெவ்வேறு Shopify ஸ்டோர்களுக்குத் திசைதிருப்ப ஸ்டோர்ஃபிரண்டில் இந்த வகையான திசைதிருப்பல் சேர்க்கப்படலாம். இந்த வகையான திசைதிருப்பல் குறியீடு உங்கள் தீமிலோ அல்லது நீங்கள் நிறுவிய செயலியிலோ இருக்கலாம்.

உங்கள் திசைதிருப்பல் எடிட்டர் அனுபவத்தில் தலையிடவில்லை என்பதைச் சரிபார்க்க, நீங்கள் தீம் எடிட்டரைப் பார்க்கும்போது திசைதிருப்பலை முடக்க JavaScriptஇல் window.Shopify.designMode மாறியின் குறிப்பைப் பயன்படுத்தவும். இந்த மாறி எடிட்டரில் ஸ்டோர்ஃபிரண்ட் ஏற்றப்படும்போது true எனவும், இல்லாதபோது false எனவும் அமைக்கப்படும்.

தீம் பிளாக்குகளில் இயங்குநிலை உள்ளடக்கத்தைச் சரிசெய்தல்

மடிக்கக்கூடிய பிளாக்குகள் அல்லது பிற தீம் பிளாக்குகள் அனைத்து தயாரிப்புப் பக்கங்களிலும் ஒரே உள்ளடக்கத்தைக் காட்டினால், நீங்கள் மெட்டாஃபீல்டுகளுடன் இயங்குநிலை மூலங்களை அமைக்க வேண்டும். வணிகர்கள் உட்பொருள்கள் அல்லது பராமரிப்பு வழிமுறைகள் போன்ற தயாரிப்பு சார்ந்த தகவலை ஒரு தயாரிப்பில் சேர்க்கும்போதும், ஆனால் அது அனைத்து தயாரிப்புகளிலும் காட்டப்படும்போதும், இது பொதுவாக நிகழும்.

மடிக்கக்கூடிய பிளாக்குகள் அனைத்து தயாரிப்புகளிலும் ஒரே உரையைக் காட்டுகின்றன

உங்கள் தீம் எடிட்டரில் மடிக்கக்கூடிய பிளாக்கில் உள்ளடக்கத்தை நேரடியாகச் சேர்க்கும்போது, அந்த உள்ளடக்கம் அனைத்து தயாரிப்புப் பக்கங்களிலும் காட்டப்படும். தயாரிப்பு சார்ந்த உள்ளடக்கத்தைக் காட்ட, நீங்கள் மெட்டாஃபீல்டுகளுடன் இயங்குநிலை மூலங்களைப் பயன்படுத்த வேண்டும்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > மெட்டாஃபீல்டுகள் > தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. வரையறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் மெட்டாஃபீல்டுக்கான ஒரு பெயரை உள்ளிட்டு, உள்ளடக்க வகையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உரை மற்றும் பலவரி உரை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் நிர்வாகியில் உள்ள தயாரிப்புப் பக்கத்திற்குச் சென்று, பக்கத்தின் கீழே உள்ள மெட்டாஃபீல்டுகள் பிரிவுக்கு ஸ்க்ரோல் செய்யவும்.
  7. நீங்கள் உருவாக்கிய மெட்டாஃபீல்டில் உங்கள் தயாரிப்பு சார்ந்த உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்.
  8. உங்கள் தீம் எடிட்டரில், தயாரிப்பு வார்ப்புருவிற்குச் சென்று உங்கள் மடிக்கக்கூடிய வரிசை பிரிவைக் கண்டறியவும்.
  9. வரிசை உள்ளடக்கம் அமைப்பில், Connect dynamic source பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  10. கிடைக்கும் விருப்பங்களிலிருந்து உங்கள் மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  11. நீங்கள் செய்த மாற்றங்களைச் சேமிக்கவும்.

இப்போது மெட்டாஃபீல்டை நிரப்பும்போது ஒவ்வொரு தயாரிப்பும் அதற்கென உள்ளடக்கத்தைக் காண்பிக்கும், மேலும் அந்தத் தயாரிப்பிற்கான மெட்டாஃபீல்டு காலியாக இருந்தால் எந்த உள்ளடக்கமும் காட்டப்படாது.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மெட்டாஃபீல்டுகளைக் காட்டுவது மற்றும் இயங்குநிலை மூலங்களுடன் மெட்டாஃபீல்டுகளையும் மெட்டாஆப்ஜெக்ட்களையும் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

குறியீட்டுப் பிழைச் செய்திகளைச் சரிசெய்தல்

உங்கள் தீம் குறியீட்டில் தொடரியல் பிழை (syntax error) இருந்தால், உங்கள் தீம் எடிட்டரில் HTML error found அல்லது Theme error என்ற எச்சரிக்கைச் செய்தி காட்டப்படும். பிழைச் செய்தி, பிழையைக் கொண்டுள்ள Liquid கோப்பைக் காண்பிக்கும்.

ஏதேனும் உடைந்த HTML இருக்கும்போது The theme you're looking for couldn't be found என்ற எச்சரிக்கைச் செய்தி காட்டப்படலாம். பின்வரும் காரணங்கள் போன்ற பல காரணங்களால் தீம் எடிட்டரில் ஒரு பக்கம் ஏற்றப்படாமல் போகலாம்:

  • வலையமைப்பு இணைப்புச் சிக்கல்கள்
  • உங்கள் தீமில் தவறான Liquid குறியீடு

உங்கள் தீம் குறியீட்டில் குறியீடு மாற்றங்களைக் கண்டறிந்து குறியீட்டைத் திருத்தலாம். பாதிக்கப்பட்ட தற்போதைய கோப்பினை உங்களால் கண்டறிய முடிந்தால், குறியீட்டு எடிட்டரின் காலவரிசை பார்வையில் கிடைக்கும் அதன் முந்தைய பதிப்பிற்கு அதை மீட்டெடுக்கலாம்.

படிகள்:

  1. பிழைச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள .liquid பிரிவுக் கோப்பைக் கிளிக் செய்யவும் அல்லது சமீபத்திய மாற்றங்களுக்கான கோப்புகளை மதிப்பாய்வு செய்யவும். இது உங்களை HTML/அடுக்கு ஸ்டைல் தாள்கள் (CSS) பக்கத்தைத் திருத்து பகுதிக்கு அழைத்துச்செல்லும், மேலும் கோப்பு குறியீட்டு எடிட்டரில் திறக்கும்.
  2. கோப்பில் உள்ள குறியீட்டை உலாவி, தவறான HTML அல்லது Liquidஐக் கண்டறிய முயற்சிக்கவும். குறியீட்டு எடிட்டரானது சாத்தியமான தொடரியல் பிழைகளைச் சிவப்பில் காண்பிக்கும். பொதுவான சிக்கல்களில் பின்வருவன அடங்கும்:
    • கூடுதல் மூடும் HTML டேக்குகள், எடுத்துக்காட்டாக, திறக்கும் <div> இல்லாமல் இருக்கும் மூடும் </div>
    • மூடப்படாத கூடுதல் HTML டேக்குகள், எடுத்துக்காட்டாக, மூடும் </div> இல்லாமல் இருக்கும் திறக்கும் <div>
    • தவறான வடிவமைப்பிலுள்ள HTML டேக்குகள், எடுத்துக்காட்டாக, > இல்லாமல் இருக்கும் <div class="my-class"
    • சிதைந்த Liquid குறியீடு
    • சேர்க்கப்பட்டுள்ள தீம் துணுக்குக் கோப்பில் சிதைந்த HTML
  3. சிக்கலைக் கண்டறிந்த பிறகு, உங்கள் தீம் கோப்பில் உள்ள குறியீட்டைச் சரிசெய்யவும். குறியீட்டு எடிட்டரின் காலவரிசை (Timeline) காட்சியைப் பயன்படுத்தி முந்தைய பதிப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளடக்கங்களை மீட்டெடு என்பதைக் கிளிக் செய்தால், கோப்பின் முழு உள்ளடக்கங்களும் மாற்றப்படும். ஏதேனும் மாற்றங்களை நீங்கள் வைத்திருக்க விரும்பினால், முதலில் தற்போதைய கோப்பின் உள்ளடக்கங்களைப் பாதுகாப்பான இடத்தில் நகலெடுத்து வைக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தீம் எடிட்டருக்குத் திரும்ப, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்து, பிழைச் செய்தி நீங்கிவிட்டதை உறுதிப்படுத்தவும்.
  6. எதிர்பார்த்தபடி இது காட்டப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க உங்கள் ஸ்டோர்ஃபிரண்டிற்குச் செல்லவும்.

"தனித்துவமான ஹேண்டில்களின் அதிகபட்ச எண்ணிக்கையை மீறிவிட்டது" பிழை

உங்கள் முகப்புப்பக்கத்தில் "all_products என்பதற்கான தனித்துவமான ஹேண்டில்களின் அதிகபட்ச எண்ணிக்கையை மீறிவிட்டது" என்பது போன்ற Liquid பிழைச் செய்தியைக் காட்டினால், உங்கள் முகப்புப்பக்கத்தில் அதிகப்படியான சிறப்புத் தயாரிப்புப் பிரிவுகளைச் சேர்த்துள்ளீர்கள் (பெரும்பாலான தீம்களில் வழக்கமாக 20 பிரிவுகளுக்கும் மேல்) என்று அர்த்தமாகும்.

இதைத் தீர்க்க:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
  2. உங்களின் தற்போதைய தீமைக் கண்டறிந்து தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் முகப்புப்பக்கத்திற்குச் செல்லவும்.
  4. தீமின் வரம்புகளுக்குள் இருக்க, சில சிறப்புத் தயாரிப்புப் பிரிவுகளை அகற்றவும்.
  5. அதற்குப் பதிலாகச் சிறப்புத் தொகுப்புப் பிரிவுகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும், இவை பல தயாரிப்புகளை மிகவும் திறமையாகக் காட்டவும் உங்கள் ஸ்டோரின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.
அடிப்பகுதியில் பேமெண்ட் ஐகான்கள் காட்டப்படாதது தொடர்பான சிக்கலைத் தீர்த்தல்

நீங்கள் ஏற்கும் கட்டண முறைகளை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட, பெரும்பாலான தீம்களின் அடிப்பகுதிகளில் பேமெண்ட் ஐகான்கள் இயல்பாகவே சேர்க்கப்பட்டிருக்கும். உங்கள் தீமின் அடிப்பகுதியில் பேமெண்ட் ஐகான்கள் தோன்றவில்லை எனில், நீங்கள் பின்வருவனவற்றைச் சரிபார்க்கலாம்:

  1. உங்கள் தீம் எடிட்டரில், அடிப்பகுதி பிரிவிற்குச் சென்று, பேமெண்ட் ஐகான்களைக் காட்டு அமைப்பு இயக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  2. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் சென்று குறைந்தபட்சம் ஒரு கட்டண முறையாவது செயலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். சில கட்டண முறைகளில் அவற்றின் ஐகான்கள் காட்டப்படுவதற்கு முன்பு, கணக்கு அமைவை நிறைவு செய்வது அவசியமாகலாம்.
  3. நீங்கள் மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தினால், பிளாட்ஃபார்ம் வரம்புகள் காரணமாக பேமெண்ட் ஐகான்கள் காட்டப்படாமல் போகலாம்.

இந்த அமைப்புகளை நீங்கள் சரிபார்த்த பிறகும் பேமெண்ட் ஐகான்கள் காட்டப்படவில்லையெனில், நீங்கள் உங்கள் தீமிற்கான ஆதரவைப் பெற வேண்டியிருக்கலாம்.

படி 3: ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளவும்

இந்த வழிகாட்டியில் உள்ள சிக்கல் தீர்க்கும் படிகளை நிறைவுசெய்த பிறகும் உங்கள் தீமில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் தீமிற்கான ஆதரவைப் பெறலாம்.