ஈர்க்கக்கூடிய தயாரிப்பு விளக்கங்களை எழுதுதல்
ஈர்க்கக்கூடிய தயாரிப்பு விளக்கங்களை எழுத, பின்வரும் சில அல்லது எல்லா உத்திகளையும் செயல்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
உங்கள் சிறந்த வாடிக்கையாளரைக் கவனித்தல்
உங்கள் தயாரிப்பு விளக்கங்களை எழுதும்போது, உங்கள் சிறந்த வாடிக்கையாளர் அல்லது உங்கள் இலக்கு பார்வையாளர்களைக் கற்பனை செய்துகொண்டு, அவர்களை நேரடியாக அழைத்துப் பேசுங்கள். பொதுவாக ஒருவரைக் குறிப்பிட்டு எழுதாமல், உங்கள் சிறந்த வாடிக்கையாளருடன் நீங்கள் உரையாடுவது போல் கேள்விகளைக் கேட்டு அவற்றுக்குப் பதிலளியுங்கள்.
கீழே உள்ள கேள்விகளில் சிலவற்றை நீங்களே கேட்டுக்கொள்வதைக் கருத்தில் கொள்ளவும்:
- உங்கள் வாடிக்கையாளர்கள், ஏதேனும் குறிப்பிட்ட நகைச்சுவை உணர்வை விரும்புவார்களா?
- உங்கள் வாடிக்கையாளர்கள் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்? அவர்கள் எந்த வார்த்தைகளை வெறுக்கிறார்கள்?
- நீங்கள் பதிலளிக்க வேண்டிய, உங்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகள் எவை?
அந்த மொழியை உங்கள் ஸ்டோரில் இணைக்க முயற்சிப்பதன் மூலம், ஆன்லைனிலும் யதார்த்தமான மற்றும் உண்மையான ஒரு உரையாடலை நீங்கள் நிகழ்த்த முடியும்.
பலன்களைக் கூறி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்தல்
உங்கள் தயாரிப்பின் பலன்களை முன்னிலைப்படுத்திக் காட்டுங்கள். இதன் மூலம், அது அவர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை உங்கள் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வார்கள். உங்கள் தயாரிப்பு அம்சங்கள் மற்றும் பலன்களை புல்லட் பட்டியலில் தொகுத்து, தொழில்நுட்ப விவரங்களையும் அதில் நீங்கள் சேர்க்கலாம்.
பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளவும்:
- உங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக அல்லது அதிகத் திறனுடன் செயல்பட உங்கள் தயாரிப்பு எவ்வாறு உதவுகிறது?
- எந்தப் பிரச்சனைகள், குறைகள் மற்றும் இடையூறுகளைத் தீர்க்க உங்கள் தயாரிப்பு உதவுகிறது?
- உங்கள் தயாரிப்பின் அடிப்படை அம்சங்கள் யாவை? நீங்கள் ஆடைகளை விற்பனை செய்தால் அளவுகள், பொருள்கள், செயல்பாடுகள், பராமரிப்பு வழிமுறைகள் மற்றும் ஆடை பொருத்தம் பற்றிய விவரங்களை எழுதவும்.
- தயாரிப்பை எப்போது சிறப்பாகப் பயன்படுத்தலாம்? உங்களின் போர்வை, குளிர் கால இரவுகளில் ஃபயர்பிளேஸ் அருகே சூடான கோகோ குடித்துக்கொண்டிருக்கும்போது பயன்படுத்துவதற்கு ஏற்றதா? அல்லது சூரியன் மறையும் இளவேனிற்கால மாலை நேரத்திற்கு ஏற்றதா? வாடிக்கையாளர் உங்கள் தயாரிப்பை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை முன்னிலைப்படுத்திக் காட்டுங்கள்.
- உங்கள் தயாரிப்பைச் சிறப்பானதாக்குவது எது? உங்கள் தயாரிப்பின் தனித்துவமான பலன்கள் மற்றும் அது ஏன் உங்கள் போட்டியாளர்களின் தயாரிப்பை விடச் சிறந்ததாக இருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.
பொதுவான கூற்றுகளைத் தவிர்த்தல்
உங்கள் தயாரிப்பு விளக்கங்களில் துல்லியமாக இருக்கவும். தயாரிப்பு விவரங்கள் நம்பகத்தன்மையைச் சேர்ப்பதோடு, உங்கள் தயாரிப்பை விற்கவும் உதவுகின்றன. “சிறந்த தயாரிப்புத் தரம்” என்று தெளிவற்றதாக எழுதுவது, உங்கள் வாடிக்கையாளருக்குப் பெரிதாக எதையும் தெரிவிக்காது. மேலும், நீங்கள் அதற்கான சான்றுகளை வழங்காவிட்டால், அது அவர்களுக்குச் சந்தேகத்தையும் ஏற்படுத்தலாம்.
நீங்கள் மறுவிற்பனையாளராக இருந்தால், உற்பத்தியாளரின் சரியான விளக்கத்தை நகலெடுக்க வேண்டாம். உங்கள் சொந்த விளக்கத்தை எழுதுவது, உங்கள் தயாரிப்புப் பக்கத்தைத் தேடுபொறிகளுக்குத் தனித்துவமாக வைத்திருக்க உதவுகிறது.
தயாரிப்புப் பலன்களுக்குச் சான்றளித்தல்
உங்கள் தயாரிப்புகளைப் பற்றி நீங்கள் கூறும் எந்தவொரு விஷயமும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வகையில் உங்கள் தயாரிப்பு சிறந்தது என்றால், அது ஏன் உண்மை என்பதற்கான சான்றுகளை வழங்கவும். இல்லையெனில், உங்கள் தயாரிப்பு உள்ளடக்கத்தின் தொனியை மென்மையாக்குங்கள் அல்லது தாங்கள் பயன்படுத்தியதிலேயே உங்கள் தயாரிப்புதான் மிகவும் சிறந்தது என்று கூறும் ஒரு வாடிக்கையாளரின் கருத்தை மேற்கோள் காட்டுங்கள்.
உங்கள் வாடிக்கையாளர்களின் கற்பனையைக் கவருதல்
உங்கள் ஸ்டோர் ஆன்லைனில் இருந்தால், வாடிக்கையாளர்களால் தயாரிப்பைக் கைகளில் தொட்டு உணர முடியாது. உங்கள் தயாரிப்பை வாங்குவது எப்படி இருக்கும் என்பதை உங்கள் வாடிக்கையாளர் கற்பனை செய்ய உதவுங்கள். ஒரு வாக்கியத்தை "கற்பனை செய்து பாருங்கள்" என்று தொடங்கி, உங்கள் தயாரிப்பை வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் உங்கள் வாடிக்கையாளர் எவ்வாறு உணருவார்கள் என்பதை விவரிப்பதன் மூலம் உங்கள் வாக்கியத்தை அல்லது பத்தியை முடித்துப் பாருங்கள்.
வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளச் சிறு கதைகளைப் பயன்படுத்துதல்
உங்கள் தயாரிப்பு விளக்கங்களில் சிறு கதைகளைச் சேர்க்கவும். உங்கள் பிராண்டுடன் வாடிக்கையாளர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளவும் தயாரிப்புடன் இணையவும் கதைகள் அனுமதிக்கின்றன.
உங்கள் தயாரிப்புகளைப் பற்றி ஒரு கதை சொல்லும்போது, பின்வரும் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
- தயாரிப்பை உருவாக்குவது யார்?
- தயாரிப்பை உருவாக்குவதற்கான உத்வேகம் என்ன?
- தயாரிப்பை உருவாக்க நீங்கள் என்னென்ன தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது?
- தயாரிப்பு எவ்வாறு சோதிக்கப்பட்டது?
உணர்வுப்பூர்வமான வார்த்தைகளைச் சேர்த்தல்
துல்லியமான தயாரிப்பு விளக்கங்கள் மூலம் உங்கள் வாசகர்களை ஈர்க்கவும். தயாரிப்புடனான ஒருவரின் உணர்வுப்பூர்வத் தொடர்பை விவரிக்கும் உரிச்சொற்கள், தயாரிப்பை உங்கள் வாடிக்கையாளர்கள் படிக்கும்போதே அனுபவிக்க உதவும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உணவுத் தயாரிப்புகளை விற்கிறீர்கள் என்றால், "வெல்வெட்டி," "ஸ்மூத்," "கிரிஸ்ப்," மற்றும் "பிரைட்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
சமூகச் சான்றுடன் நம்பிக்கையை வளர்த்தல்
வாடிக்கையாளர் சான்றளிப்புகள் அல்லது சமூக ஊடக ஊட்டத்தைச் சேர்க்கவும். இதன் மூலம் உங்கள் தயாரிப்புகளுடன் முந்தைய வாடிக்கையாளர்கள் பெற்ற அனுபவங்கள் குறித்துப் புதிய வாடிக்கையாளர்கள் படிக்கலாம். நீங்கள் வாடிக்கையாளர்களின் சான்றளிப்புகளைச் சேர்த்தால், நம்பகத்தன்மையைச் சேர்க்க வாடிக்கையாளர் அந்தத் தயாரிப்பைப் பயன்படுத்தும் படம் ஒன்றையும் சேர்க்க முயற்சிக்கவும். உண்மையான நபர்கள் உங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகளைப் பகிரும்போது, புதிய வாடிக்கையாளர்கள் தங்களின் தயாரிப்புத் தேர்வுகள் குறித்து அதிக நம்பிக்கை கொள்ளலாம்.
உங்கள் இணையதளத்தில் தயாரிப்பு மதிப்பாய்வுகளைப் பெறவும், Google அல்லது Facebook போன்ற மூன்றாம் தரப்புத் தளங்களில் உள்ளவற்றை ஒருங்கிணைக்கவும் நீங்கள் ஒரு வாடிக்கையாளர் மதிப்பாய்வுகள் செயலியைப் பயன்படுத்தலாம்.
உங்கள் விளக்கத்தை எளிதாகப் படிக்கும் வகையில் உருவாக்குதல்
சாத்தியமான வாடிக்கையாளர்களுக்குப் படிக்க எளிதாகவும் மேலும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்க, உங்கள் தயாரிப்பு விளக்கங்கள் தெளிவாகவும் ஸ்கேன் செய்யக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும். தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் உள்ள விளக்கம் புலமானது ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்துகிறது, எனவே நீங்கள் உரைக்கு வடிவமைப்பளிக்கலாம்.
உங்களின் தயாரிப்பு விளக்கங்களை எழுதும்போது கவனம் செலுத்த வேண்டிய பின்வரும் பகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:
- உங்கள் இணையதளப் பார்வையாளரைத் தலைப்புகள் மூலம் ஈர்க்கவும்.
- பட்டியல்களுக்குப் புல்லட் பாயிண்டுகளைப் பயன்படுத்தவும்.
- நிறைய காலி இடங்களைச் சேர்க்கவும்.
- வாசிப்புத்திறனை மேம்படுத்த உங்கள் எழுத்துரு அளவை அதிகரிக்கவும்.
- உயர்தரத் தயாரிப்புப் படங்களைப் பயன்படுத்தவும்.
வெற்றியை அளவிடுவதற்கான இலக்குகளை அமைத்தல்
உங்கள் தயாரிப்பு விளக்கங்கள் அதிக விற்பனைக்கு வழிவகுக்கின்றனவா என்பதைப் புரிந்துகொள்ள, உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் தடமறிய வேண்டிய அளவீடுகளின் தொகுப்பைத் தீர்மானியுங்கள். எந்தத் தயாரிப்பு விளக்கங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும், அதன்பிறகு குறைவான செயல்திறன் கொண்டவற்றை மேம்படுத்தவும் இந்த அளவீடுகளை வரையறுப்பது உங்களுக்கு உதவுகிறது.
கண்காணிக்க வேண்டிய சில பொதுவான அளவீடுகள்:
- மாற்று வீதம்
- கார்ட் கைவிடப்படுதல்
- ரிட்டர்ன் வீதம்
- ஆதரவு விசாரணைகள்
- இயல்பான தேடல் தரவரிசைகள்
Shopify App Store இலிருந்து ஒரு A/B சோதனைச் செயலியைப் பயன்படுத்தி நீங்கள் வெவ்வேறு A/B சோதனைகளை இயக்கலாம், இதன் விளைவாக உங்கள் இ-காமர்ஸ் இணையதளத்தில் அதிக மாற்றங்கள் மற்றும் அதிக விற்பனை ஏற்படக்கூடும்.