டிராப்ஷிப்பிங்கின் அம்சங்கள்

டிராப்ஷிப்பிங் அமைப்பது எளிது என்பதாலும் தொடங்குவதற்கு அதிக செலவாகாது என்பதாலும் சில நேரங்களில் இது வணிகம் தொடங்கும் தொடக்கநிலையாளர்களுக்கான வழியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல பெரிய மற்றும் வெற்றிகரமான வணிகங்களுக்குத் தயாரிப்புகளைப் பெறுவதற்கான பொதுவான முறையாக டிராப்ஷிப்பிங் உள்ளது.

டிராப்ஷிப்பிங்கில் பல நன்மைகள் உள்ளன, ஆனால் சாத்தியமான குறைபாடுகளையும் அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் அறிந்துகொள்வது உங்கள் வணிகம் வெற்றியடைய உதவும். டிராப்ஷிப்பிங்கின் அம்சங்களை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள், அதன் மூலம் நீங்கள் சரியான வணிக முடிவுகளை எடுக்கலாம்.

டிராப்ஷிப்பிங்கின் அம்சங்கள்

டிராப்ஷிப்பிங் அம்சங்களின் நன்மைகளும் குறைபாடுகளும்
அம்சம்நன்மைகள்குறைபாடுகள்
தொடங்குவது எளிது

தொடங்குவதற்கு குறைந்த நேரமே செலவாகிறது

உங்களுக்கு வழிகாட்ட பல ஆதாரங்கள் உள்ளன

அதிகப் போட்டி

தொடக்கச் செலவுகள் குறைவு

கிடங்கு, சரக்கு இருப்பு அல்லது ஆராய்ச்சிச் செலவுகள் இல்லை

உங்கள் வணிகத்தைச் சந்தைப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் அதிக நிதி கிடைக்கும்

அதிகப் போட்டி

பரந்த அளவிலான தயாரிப்புத் தேர்வுகள்

நீங்கள் விற்க விரும்புவதைக் கண்டறிவது எளிது

நீங்கள் வழங்கும் தயாரிப்புகளை மாற்றுவது எளிது

உங்கள் வணிகத்திற்கான முக்கிய நோக்கத்தைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம்

கையிருப்பில் சரக்கு இல்லை

சேமிப்பு அல்லது கிடங்குச் செலவுகள் இல்லை

குறைந்த தரக் கட்டுப்பாடு

பிராண்டிங்கின் மீதான கட்டுப்பாடு குறைவு

தயாரிப்புகளை நீங்களே ஷிப்பிங் செய்யத் தேவையில்லை

பொதியாக்கம் அல்லது லேபிள்களை அச்சிடுவதில் நேரம் செலவழிக்கப்படுவதில்லை

பல சப்ளையர்களிடமிருந்து பெறப்படும் தயாரிப்புகளைக் கொண்ட ஆர்டர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்து சேரும்

தொடங்குவது எளிது

டிராப்ஷிப்பிங் ஈர்ப்புடையதாக இருப்பதற்குக் காரணம் அதை எளிதாக அமைக்க முடியும் என்பதுதான். ஆரம்பத்தில், நீங்கள் தயாரிப்புகளைத் தேர்வுசெய்து, அவற்றை எங்கு விற்கலாம் மற்றும் சந்தைப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்து, வாடிக்கையாளரை ஆர்டர் செய்ய வைத்தால் மட்டும் போதும். நீங்கள் விற்பனை செய்த பிறகு, மீதமுள்ளவற்றை உங்கள் சப்ளையர் பார்த்துக்கொள்வார்.

டிராப்ஷிப்பிங் வணிகத்தைத் தொடங்குவது எளிது என்பதால், அதில் போட்டியும் எளிதாக உருவாகிவிடும். வணிகங்கள் பெரும்பாலும் குறைந்த விலையை வழங்கப் போட்டியிடுவதால், அதிகப் போட்டியானது வழக்கமாகக் குறைந்த லாப வரம்புகளுக்கே வழிவகுக்கிறது.

கூடுதல் தகவலுக்கு, உங்கள் ஆதாயத்திற்கு நிதியளியுங்கள் என்பதைப் பார்க்கவும்.

தொடக்கச் செலவுகள் குறைவு

டிராப்ஷிப்பிங் வணிகத்தின் தொடக்கச் செலவுகள் வழக்கமாகக் குறைவாக இருக்கும். சரக்கு இருப்பு, கிடங்கில் சேமிப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது சில்லறை வணிக இடத்துக்கு என எந்தவொரு செலவுகளும் இல்லை. இது மார்க்கெட்டிங்கிலும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாங்கும் அனுபவத்தை உருவாக்குவதிலும் உங்கள் முயற்சிகளைக் குவிக்க அனுமதிக்கிறது.

குறைந்த தொடக்கச் செலவுகள் அதிகப் போட்டிக்கும் வழிவகுக்கும். அதிகப் போட்டி இருக்கும்போது, உங்களுக்குக் குறைவான ஆர்டர்களே கிடைக்கும் என்பதோடு போட்டியைச் சமாளிக்க அடிக்கடி உங்கள் விலைகளைக் குறைக்க வேண்டியிருக்கும்.

கூடுதல் தகவலுக்கு, உங்கள் ஆதாயத்திற்கு நிதியளியுங்கள் என்பதைப் பார்க்கவும்.

பரந்த அளவிலான தயாரிப்புத் தேர்வுகள்

டிராப்ஷிப்பிங் சேவைகள் மூலம், உங்கள் ஸ்டோரில் சேர்ப்பதற்கான ஆயிரக்கணக்கான தயாரிப்புகளுக்கான அணுகல் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் விற்கத் தேர்ந்தெடுக்கும் தயாரிப்புகள் உங்களின் தயாரிப்பு வரிசை என அழைக்கப்படுகிறது. பரந்த அளவிலான தயாரிப்புத் தேர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்போது, உங்கள் தயாரிப்பு வரிசையை எந்த நேரத்திலும் எளிதாக மாற்ற முடியும். இது சந்தைப் போக்குகளுக்கும் வாடிக்கையாளரின் கருத்துகளுக்கும் விரைவாக எதிர்வினையாற்ற உங்களை அனுமதிக்கிறது.

இருப்பினும், உங்கள் தயாரிப்பு வரிசையில் பல்வேறு தயாரிப்புகளைச் சேர்ப்பது உங்கள் வணிகத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் விற்கத் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பு வகைகளுக்கு என ஒரு முக்கிய நோக்கத்தை அல்லது இலக்கைக் கொண்டிருப்பது சிறந்தது.

கூடுதல் தகவலுக்கு, தயாரிப்புகளைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள் என்பதைப் பார்க்கவும்.

கையிருப்பில் சரக்கு இல்லை

நீங்களே சரக்கு இருப்பை ஆர்டர் செய்து, ஸ்டாக் செய்ய வேண்டியதில்லை என்பதால், கிடங்குச் செலவுகளைச் சேமிப்பதோடு, உடனடியாக விற்கவும் தொடங்கலாம். கிடங்குகளுக்கான கணக்குகளை நீங்கள் அமைக்கவோ உங்கள் தயாரிப்புகளை எப்படிப் பேக்கேஜ் செய்ய வேண்டும் என முடிவெடுக்கவோ வேண்டியதில்லை. உங்களுக்கான சேமிப்பு, பொதியாக்கம் ஆகிய அனைத்தையும் சப்ளையர்களே செய்துவிடுவார்கள்.

இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், தயாரிப்புகளின் தரம், பேக்கேஜிங்கின் பிராண்டிங் அல்லது ஆர்டரைச் செயல்படுத்துவதற்கான வேகம் ஆகியவற்றின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்காது. உங்கள் பிசினஸுக்கு முக்கியமான நேர்மறையான கருத்துகளையும் மீண்டும் வரும் வாடிக்கையாளர்களையும் பெற இவை உதவுகின்றன.

மேலும் தகவலுக்கு, சப்ளையர்களைக் கவனமாகத் தேர்வுசெய்யவும் என்பதைப் பார்க்கவும்.

தயாரிப்புகளை நீங்களே ஷிப்பிங் செய்ய வேண்டியதில்லை

பிசினஸை நடத்துவதில் ஷிப்பிங் என்பது சிக்கலான பகுதியாக இருக்கலாம். தயாரிப்புகளை நீங்களே ஷிப்பிங் செய்வதற்குப் பதிலாக சப்ளையரைப் பயன்படுத்துவதன் மூலம், பெருமளவு நேரத்தைச் சேமிக்கலாம். ஷிப்பிங் கேரியர்களிடம் பேசி உங்கள் சப்ளையர்கள் வாங்கியிருக்கும் ஷிப்பிங் தள்ளுபடிகளில் இருந்தும் நீங்கள் பயனடையலாம்.

எனினும், பெரிய ஆர்டர்களைக் கையாள முயலும்போது நீங்கள் சேமிக்கும் நேரமும் பணமும் வீணாகலாம். எடுத்துக்காட்டாக, வெவ்வேறான சப்ளையர்களின் தயாரிப்புகளைக் கொண்ட ஆர்டரைப் பெற்றால், ஒவ்வொரு தயாரிப்புக்குமான ஷிப்பிங் செலவை ஒவ்வொரு சப்ளையருக்கும் நீங்கள் செலுத்த வேண்டும். மாறாக, தயாரிப்புகள் உங்கள் கையிருப்பிலேயே இருந்தால், அனைத்தையும் ஒரே பெட்டியில் பேக்கேஜ் செய்து ஒரேயொரு ஷிப்பிங் செலவை மட்டும் செலுத்தலாம்.

மேலும் தகவலுக்கு, உங்கள் சொந்த இடத்திற்குத் தயாரிப்புகளை ஆர்டர் செய்யவும் என்பதைப் பார்க்கவும்.

பலன்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்

டிராப்ஷிப்பிங் பிசினஸைத் தொடங்கும் எவருக்கும் இந்தப் பலன்கள் கிடைக்கும், என்றாலும் இந்தப் பலன்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யப் பல வழிகள் உள்ளன.

உங்கள் பிசினஸை விரைவாக அறிமுகப்படுத்தவும்

வாடிக்கையாளர்களிடம் உங்கள் பிசினஸைக் காட்டுவதற்கு முன்பு, அது கச்சிதமாக இருக்கும்வரை காத்திருக்க வேண்டும் என நினைப்பது வழக்கமானதுதான். எனினும், ஒரு பிசினஸை எவ்வளவு விரைவாக அமைக்கலாம் என்பதுதான் டிராப்ஷிப்பிங்கின் முக்கியப் பலனாகும்.

உங்கள் பிசினஸை வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு விரைவாகக் காட்டுகிறீர்களோ, அவ்வளவு விரைவாக அவர்களின் கருத்துகளைப் பெற்று, தவறுகளில் இருந்து திருத்திக்கொண்டு, உங்கள் பிசினஸை மேம்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தயாரிப்புச் சேகரிப்புகளையும் பிரதான மெனுவையும் அமைப்பதற்கு நீண்ட நேரம் செலவிடலாம், ஆனால் வாடிக்கையாளர்கள் முற்றிலும் மாறுபட்ட வழியில் உங்கள் தயாரிப்புகளை உலாவுவதை அறிந்து அனைத்தையும் முதலில் இருந்து மீண்டும் செய்ய நேரிடலாம்.

உங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகள் இல்லாமல் உங்கள் பிசினஸுக்கு எது சிறந்தது என்பதை அறிவது கடினம். உங்கள் பிசினஸை விரைவாக அறிமுகப்படுத்தினால், வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களையும் கருத்தில்கொண்டு பிசினஸை வளர்க்கலாம்.

உங்கள் அனுகூலத்திற்காகச் செலவிடவும்

உங்கள் பிசினஸைத் தொடங்கக் குறைவான செலவுதான் ஆகிறது என்றால், நீங்கள் சேமித்த நிதியில் ஒரு பகுதியை உங்கள் போட்டியாளர்களை விடச் சிறந்த பிசினஸை உருவாக்குவதற்குச் செலவிடலாம். "போட்டியாளர்களிடம் இருந்து என்னை வேறுபடுத்திக் காட்டுவது எது?" என உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது. இதைப் பற்றி நீங்கள் முன்பு யோசித்திருக்காவிட்டால் பதிலளிப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் உங்கள் போட்டியாளர்களை விட அனுகூலத்தைப் பெறப் பல வழிகள் உள்ளன:

  • கூடுதல் உள்ளடக்கம் - வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில் உங்கள் தயாரிப்புகளைப் பற்றிய வலைப்பதிவு இடுகைகளை நீங்களே எழுதலாம் அல்லது அதற்கு உள்ளடக்கத்தை உருவாக்குபவருக்குப் பணம் செலுத்தலாம். அவை உங்கள் தயாரிப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளாகவோ உங்கள் தயாரிப்புகளின் மதிப்பாய்வுகளாகவோ உங்கள் தயாரிப்புகள் இருக்கும் சந்தை குறித்த பொதுவான தகவல்களாகவோ கூட இருக்கலாம்.

    எடுத்துக்காட்டாக, நீங்கள் காபி மெஷின்களை விற்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு காபி மெஷின் குறித்த மதிப்பாய்வுகளும் எந்த வகையான மெஷின் யாருக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதுமே ஒரு சிறந்த வலைப்பதிவுத் தொடராக இருக்கும். நம்பகத்தன்மை, மதிப்பு, அளவு, ஒரு மணிநேரத்தில் அது வழங்கக்கூடிய காபிகளின் எண்ணிக்கை போன்ற உங்கள் சொந்த அளவுகோல்களை உருவாக்குவது, உங்கள் பிசினஸில் இருந்து தயாரிப்புகளை வாங்குவதற்கான நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். பல்கலைக்கழக மாணவர் ஒருவர், விரைவாக அதிக காபிகளை வழங்கக்கூடிய மலிவான மெஷினை விரும்பலாம். ஆனால் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தனது சிறிய அலுவலகத்தில் வேலையைத் தொடங்க ஒரேயொரு அருமையான காபியை மட்டுமே விரும்பலாம்.

  • சப்ளையர்களுக்கான பிரத்யேக அணுகல் - போட்டிகளைக் குறைப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், சில பிசினஸ்கள் மட்டுமே கொள்முதல் செய்யக்கூடிய சப்ளையர்களையோ, சில பிசினஸ்கள் மட்டுமே விற்கக்கூடிய வர்த்தக முத்திரை பெற்ற தயாரிப்புகளையோ அணுகுவதாகும். வாடிக்கையாளர்கள் அந்தத் தயாரிப்புகளை வாங்கக்கூடிய சில இடங்களில் உங்களுடையதும் ஒன்று என்பதால், மீண்டும் வரும் வாடிக்கையாளர்களைப் பெற இது உதவும்.

    எடுத்துக்காட்டாக, சிறியளவிலானது என்றாலும் விசுவாசமான ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரு டிவி ஷோவின் உள்ளடக்கம் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் விற்க விரும்பினால், அதன் கதாபாத்திரங்களைக் கொண்ட தயாரிப்புகளை விற்க அந்த டிவி ஷோவிடம் இருந்து உரிமம் பெறலாம். இந்த உரிமத்தைப் பெறுவது கடினமாக இருக்கலாம், ஆனால் இதைப் பெற்றுவிட்டால் உங்களுக்கு அதிகப் போட்டியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பதோடு சந்தையின் மீதும் உங்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடு இருக்கும்.

  • சிறந்த வாங்கும் அனுபவம் - வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவது உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து உங்களைத் தனித்துக்காட்ட உதவும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் ஸ்டோரில் தங்களுக்கு வேண்டியதை ஒரு வாடிக்கையாளர் கண்டறிந்து, உங்களிடம் இருந்து வாங்கும் அனுபவத்தை ரசித்தால், அவர் மீண்டும் உங்களிடமே வாங்குவதோடு மற்றவர்களுடனும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புள்ளது.

    உங்களை நீங்களே கேட்டுக்கொள்வதற்கான சில நல்ல கேள்விகள்:

    • வாடிக்கையாளர்கள் தாங்கள் தேடும் தயாரிப்புகளை எளிதாகக் கண்டறிய முடிகிறதா?
    • பிசினஸைத் தொடர்புகொள்வது எளிதாக உள்ளதா?
    • தயாரிப்பு விவரங்கள், தயாரிப்பு மதிப்பாய்வுகள், டெலிவரி நேரங்கள், ஷிப்பிங் செலவுகள், ஸ்டோர் கொள்கைகள் ஆகியவற்றை எளிதாகக் கண்டறிய முடிகிறதா?
    • பல்வேறு வகையான பேமெண்ட் விருப்பங்கள் உள்ளனவா?
    • தடமறிவதற்கான எண் வழங்கப்பட்டுள்ளதா?
    • வழங்கப்பட்ட டெலிவரி நேரத்திற்குள் தயாரிப்பு வந்துசேருமா?
    • வாடிக்கையாளர் லாயல்டி திட்டம் உள்ளதா?

சந்தைப்படுத்தலில் கவனம் செலுத்தவும்

இரண்டு பிசினஸ்கள் ஒரே மாதிரியான தயாரிப்புகளை விற்கலாம், ஆனால் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துபவர்களே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. உங்கள் பிசினஸின் ஆன்லைன் இருப்பை நீங்கள் உருவாக்கிய பிறகு, சந்தைப்படுத்தலில் கவனம் செலுத்த டிராப்ஷிப்பிங் பிசினஸ் உங்களை அனுமதிக்கிறது.

உங்கள் வாடிக்கையாளர்களைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம், அதனால்தான் பல வகையான சந்தைப்படுத்தல் வழிகளை முயன்று பார்ப்பது முக்கியம். உங்களுக்கு உதவுவதற்குப் பல ஆதாரங்களை Shopify வழங்குகிறது, மேலும் உங்கள் வாடிக்கையாளர்களைக் கண்டறிய உதவும் பல செயலிகள் Shopify App Store-இல் உள்ளன:

குறைபாடுகளைத் தவிர்க்கவும்

டிராப்ஷிப்பிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை பெரும்பாலும் தவிர்க்க முடியும். இந்தக் குறைபாடுகளைத் தவிர்க்க உதவும் பின்வரும் உத்திகளை மதிப்பாய்வு செய்யவும்.

தயாரிப்புகளைக் கவனமாகத் தேர்வுசெய்யவும்

உங்கள் தயாரிப்பு வரிசைக்கான தயாரிப்புகளைத் தேர்வுசெய்வது கடினமாக இருக்கலாம், இது சில பிசினஸ்கள் தங்களால் முடிந்தவரை பல விதமான தயாரிப்புகளை விற்க வழிவகுக்கிறது. இந்த உத்தி கைகொடுக்கலாம், ஆனால் பெரும்பாலான சமயங்களில் இது ஒரு பிசினஸுக்கு உதவுவதை விடக் கூடுதல் தீமையையே விளைவிக்கிறது.

சாத்தியமான ஒவ்வொரு தயாரிப்பையும் விற்பதை மையமாகக் கொண்டு ஒரு பிசினஸ் பிராண்டை உருவாக்குவது கடினம். இணையத்தில் ஏற்கனவே நன்கு நிறுவப்பட்ட சந்தைகள் இருப்பதாலும், அவற்றில் பல விதமான தயாரிப்புகளைக் கண்டறிய முடியும் என்பதாலும் உங்களால் ஒவ்வொரு வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்வது சாத்தியமில்லை.

மேலும், பயனர்களுக்கு உங்கள் பிசினஸை எப்போது காட்ட வேண்டும் என்பதை இணையத் தேடுபொறிகள் அறிவதும் கடினம். தங்களுக்கிடையே தொடர்புபடுத்தும் மையக்கருத்தோ முக்கியச் சொல்லோ இல்லாத 100 வெவ்வேறு தயாரிப்புகளை நீங்கள் வைத்திருந்தால், வாடிக்கையாளர்களுக்கு எப்போது உங்கள் பிசினஸைக் காட்ட வேண்டும் எனத் தேடுபொறிக்குத் தெரியாது.

தேடலுடன் பொருந்தக்கூடிய ஓரிரு தயாரிப்புகள் உங்களிடம் இருந்தாலும், மற்றொரு பிசினஸ் அந்த முக்கியச் சொற்களையே முழுமையாக மையப்படுத்தியிருக்கக்கூடும், அதனால் உங்கள் பிசினஸுக்கு முன்பாக அவர்களின் பிசினஸ் காட்டப்படும். நீங்கள் கவனம் செலுத்தும் மூன்று அல்லது நான்கு முக்கியச் சொற்கள் மட்டுமே உங்களிடம் இருந்தால், உங்கள் ஸ்டோரில் சரியாக என்ன விற்கப்படுகிறது என்பதைத் தேடுபொறிகள் அறிந்திருக்கும், எனவே யாரேனும் அந்த முக்கியச் சொற்களைத் தேடும்போது உங்கள் பிசினஸைக் காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எடுத்துக்காட்டாக, கல்லூரி விடுதி அறையை அலங்கரிக்க வேண்டிய மாணவர்களுக்கான பலதரப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் வைத்திருக்கலாம். அவர்களுக்குச் சமையலறைப் பாத்திரங்கள், எளிய ஃபர்னிச்சர்கள், சுவர் அலங்காரங்கள் மற்றும் கல்விக்குத் தேவையான பொருட்களும் தேவைப்படலாம். இந்த வகையான தயாரிப்புகளைத் தேடும்போது அதிகம் தேடப்படும் முக்கியச் சொற்கள் எவை என்பதைக் கண்டறிய, Google Trends போன்ற பிரபலமான முக்கியச் சொல் கருவியை நீங்கள் பயன்படுத்தலாம்.

சப்ளையர்களைக் கவனமாகத் தேர்வுசெய்யவும்

உங்கள் பிசினஸின் பெரும்பகுதியைச் சப்ளையர்களே கையாளுகின்றனர். அதாவது, சப்ளையரின் தரம் உங்கள் பிசினஸின் தரத்தையும் பாதிக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டால், அதற்குக் காரணம் நீங்களாக இல்லாமல் உங்கள் சப்ளையராக இருந்தாலும், அந்த வாடிக்கையாளர் மீண்டும் உங்கள் பிசினஸில் இருந்து ஆர்டர் செய்ய வாய்ப்பில்லை.

சிறந்த சப்ளையர்களின் மதிப்பாய்வுகளைப் படித்தல், அவர்களின் கொள்கைகளைப் படித்தல், அவர்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு அவர்களுடன் பேசுதல் ஆகியவற்றை நீங்கள் செய்ய வேண்டும். புகழ்பெற்ற சப்ளையர்களுடன் பணியாற்றுவது, நீங்கள் நல்ல தரமான தயாரிப்புகளை வழங்குவதையும், உங்கள் ஆர்டர்களில் கூடுதல் பிராண்டிங் சேர்க்கப்படாமல் இருப்பதையும், உங்கள் ஆர்டர்கள் விரைவாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்கிறது.

உங்கள் சொந்த இடத்திற்குத் தயாரிப்புகளை ஆர்டர் செய்யவும்

டிராப்ஷிப்பிங்கின் ஒரு நன்மை, உங்கள் சப்ளையர் சரக்கு இருப்பை நிர்வகிப்பதாகும் என்றாலும், உங்கள் சொந்த இடத்திற்குச் சில தயாரிப்புகளை ஆர்டர் செய்ய நீங்கள் கருத்தில் கொள்வதற்குச் சில காரணங்கள் உள்ளன:

  • தயாரிப்புகளின் தரத்தை நீங்களே மதிப்பிடுங்கள்: தயாரிப்பு மதிப்பாய்வுகள் ஒரு தயாரிப்பின் தரத்தைப் பற்றிய நல்ல குறிப்பைத் தருகின்றன, ஆனால் நீங்களே அதைப் பார்க்கும் வரை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், தயாரிப்பின் பொதியாக்கத்தையும், சப்ளையர் தனது சொந்த விளம்பரப் பொருளைச் சேர்க்கிறாரா என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

  • பெரிய ஆர்டர்களை நீங்களே ஷிப்பிங் செய்வது: வாடிக்கையாளர் பல வேறுபட்ட சப்ளையர்களிடமிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்யும் சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு சப்ளையருக்கும் நீங்கள் ஒரு ஷிப்பிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உங்களிடம் ஏற்கனவே அந்தத் தயாரிப்புகள் இருந்தால், அவற்றை ஒரே பெட்டியில் வைத்து, தயாரிப்புகளை உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்ப ஒரே ஒரு ஷிப்பிங் செலவை மட்டும் செலுத்தலாம். இந்த முறையைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், உங்களுக்குத் தயாரிப்புகளை ஆர்டர் செய்யும்போது இலவச ஷிப்பிங்கை வழங்க முடியுமா எனப் பார்க்க உங்கள் சப்ளையரைத் தொடர்புகொள்வது ஒரு நல்ல உத்தியாகும்.

  • உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டர் செயல்முறையை அனுபவியுங்கள்: உங்கள் ஸ்டோரிலிருந்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும்போது அவர்கள் என்னென்ன அனுபவிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் சப்ளையர்கள் எவ்வளவு விரைவாக ஆர்டர்களைச் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது, வாடிக்கையாளர்களுக்கான உங்கள் ஆர்டர் அறிவிப்பு மின்னஞ்சல்களில் சரியான எதிர்பார்ப்புகளை அமைக்க உதவும்.

    உதாரணமாக, உங்கள் சப்ளையர் ஆர்டரைச் செயல்படுத்த 4-6 நாட்கள் ஆகும் என நீங்கள் பார்த்தால், உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களில் 4-6 நாட்களில் ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை எதிர்பார்க்கலாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தலாம். உங்கள் வணிகத்திலிருந்து நம்பிக்கையுடன் ஆர்டர் செய்ய, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆர்டர் பற்றிய பல தகவல்களை நீங்கள் எப்போதும் வழங்க வேண்டும்.