டிராப்ஷிப்பிங்கின் வகைகள்

சுருக்கமாகக் கூறினால், மற்றொரு நபர் அல்லது வணிகத்திடமிருந்து தயாரிப்புகளை வாங்கி அவற்றை வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் செய்வதன் மூலம் ஆர்டர்களை நிறைவேற்றும் எந்தவொரு வணிகத்தையும் டிராப்ஷிப்பிங் குறிக்கிறது. இந்த வரையறை மிகப் பரந்தது என்பதால், இது பல்வேறு வகையான டிராப்ஷிப்பிங்கிற்கு வழிவகுக்கிறது.

அவை என்ன என்பதையும் எந்தெந்த நபர்களுக்கும் வணிகங்களுக்கும் அவை சிறப்பாகச் செயல்படும் என்பதையும் அறிந்துகொள்ள, கீழே உள்ள வெவ்வேறு வகையான டிராப்ஷிப்பிங்கை மதிப்பாய்வு செய்யவும்.

தயாரிப்பு மறுவிற்பனை

இது என்ன

பலதரப்பட்ட மூலங்களிலிருந்து தயாரிப்புகளைக் கண்டறிந்து, ஆன்லைன் கொள்முதலுக்காக அவற்றை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வதே டிராப்ஷிப்பிங்கின் மிகவும் பொதுவான வகையாகும்.

பொதுமக்கள் இந்தத் தயாரிப்புகளைக் கண்டறிந்து வாங்குவதை இந்த வணிகங்கள் எளிதாக்குகின்றன. மேலும், இந்த வணிகங்கள் வழக்கமாகத் தயாரிப்புகளின் விரிவான மதிப்பாய்வுகள், தயாரிப்புகள் குறித்த பிரத்தியேக உள்ளடக்கம் அல்லது தயாரிப்புகளுக்கான க்யூரேட் செய்யப்பட்ட ஆதாரங்களின் லைப்ரரி போன்றவற்றின் மூலம் கூடுதல் மதிப்பை வழங்குகின்றன.

இது யாருக்கு ஏற்றது

ஒரு தொழில்துறை அல்லது குறிப்பிட்ட மக்கள் தொகை குறித்து நல்ல அறிவைக் கொண்ட ஒருவருக்கு நேரடியான தயாரிப்பு மறுவிற்பனை சிறந்தது. எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் வளர்ச்சி பற்றித் தெரிந்த ஒருவர், வெவ்வேறு வயதிலுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமான வெவ்வேறு பொம்மைகளை மையமாகக் கொண்ட ஒரு டிராப்ஷிப்பிங் வணிகத்தை உருவாக்கலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களைப் பற்றி அதிகம் தெரிந்த ஒருவர் மற்றொரு எடுத்துக்காட்டாக இருக்கலாம். வீட்டிலுள்ள அலுவலகத்துக்குப் பிரத்தியேகமான மற்றும் நடைமுறை அலுவலகப் பொருட்கள் நிறைந்த ஒரு ஸ்டோரை அவர்களால் உருவாக்க முடியும்.

மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்குபவர்களுக்கும் இந்த வகையான டிராப்ஷிப்பிங் ஏற்றது. தயாரிப்பு மறுவிற்பனை என்பது ஒரு பொதுவான வகை டிராப்ஷிப்பிங் என்பதால், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான வழியைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். உங்கள் வணிகத்தை மார்க்கெட்டிங் செய்யப் பிரத்தியேகமான ஐடியாக்களை உங்களால் வழங்க முடிந்தால், இந்த வகையான டிராப்ஷிப்பிங்கில் நீங்கள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வணிக விரிவாக்கங்கள்

இது என்ன

பல சில்லறை விற்பனை ஸ்டோர்கள் ஆன்லைனில் இயங்குவதில்லை. அவர்கள் விரும்பினாலும், பலருக்குத் தங்களின் வணிகத்தை ஆன்லைனிற்குக் கொண்டுவருவதற்கான நேரமோ நிதியோ அறிவோ இல்லை. சில டிராப்ஷிப்பிங் நிறுவனங்கள் இந்த வணிகங்களுடன் இணைந்து பணியாற்றுவதையும் அவர்களின் ஆன்லைன் முகமாக மாறுவதையும் தேர்வுசெய்கின்றன. ஒவ்வொரு முறையும் டிராப்ஷிப்பிங் வணிகத்தில் ஒரு விற்பனை நடக்கும்போது, அவர்கள் அந்த உருப்படியை வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் செய்யச் சில்லறை விற்பனை ஸ்டோரிடம் கேட்கிறார்கள்.

இது யாருக்கு ஏற்றது

ஒரு வணிகத்தின் விரிவாக்கமாக இருக்கத் தேர்வுசெய்யும் டிராப்ஷிப்பர்கள், சில்லறை விற்பனை ஸ்டோருடன் நிறுவப்பட்ட உறவைக் கொண்டுள்ளார்கள். நீங்கள் சரக்கு இருப்பு நிலைகள் மற்றும் தயாரிப்பு விவரங்களுக்கான அணுகலைப் பெற வேண்டும், அத்துடன் தயாரிப்புகளின் சிறந்த தரத்திலான புகைப்படங்களையும் எடுக்க வேண்டும். தங்களின் சந்தையை விரிவுபடுத்துவதில் வணிகங்கள் அதிக விருப்பம் காட்டக்கூடிய சிறிய நகரங்களில் இது நன்றாகச் செயல்படுகிறது, அதே சமயம் கிராமப்புறங்களில் இதைச் செய்வது கடினமாக இருக்கலாம்.

சில்லறை விற்பனை ஸ்டோருடன் நீங்கள் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், இந்த வகையான டிராப்ஷிப்பிங்கிற்கு அதிக முயற்சி தேவைப்படும். பொருத்தமான சரக்கு இருப்பு நிலைகளைப் பெறுதல், தயாரிப்பு விவரங்களை எழுதுதல் மற்றும் தயாரிப்புப் புகைப்படங்களை எடுத்தல் ஆகியவற்றிற்கு அதிக நேரம் ஆகலாம். இருப்பினும், சில்லறை விற்பனை ஸ்டோரின் தயாரிப்புகளுக்கான பிரத்யேக அணுகல் மூலம் உங்களுக்குக் குறைவான போட்டியே இருக்கும் என்பதும் பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங்கில் அவர்களுடன் நீங்கள் கூட்டாளராகலாம் என்பதும் இதன் நன்மையாகும்.

எடுத்துக்காட்டாக, கனடாவின் ஸ்மித்ஸ் ஃபால்ஸில் உள்ள ஒரு டிராப்ஷிப்பிங் வணிகம், அவர்களின் உள்ளூர் பூட்டிக் ஸ்டோர்களுடன் இணைந்து அவர்களுக்காகக் க்யூரேட் செய்யப்பட்ட ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க முடியும். சில்லறை விற்பனை ஸ்டோர்கள் அந்த இணையதளத்தைத் தங்களின் வணிக அட்டைகளில் சேர்க்கலாம், மேலும் அதைத் தங்களின் சொந்த மார்க்கெட்டிங்கிலும் சேர்க்கலாம்.

மற்றொரு எடுத்துக்காட்டு, ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு டிராப்ஷிப்பிங் வணிகம், தங்கள் நகரத்திலுள்ள வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்களின் கலைப்படைப்புகளை உலகம் முழுவதும் விற்க உதவுவதற்காக அவர்களுடன் இணையலாம். இது கலைஞர்கள் தங்களின் தயாரிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும், விற்பனையை அதிகரிக்க டிராப்ஷிப்பிங் வணிகம் உதவவும் அனுமதிக்கிறது.

தயாரிப்பு உருவாக்கம்

இது என்ன

சில டிராப்ஷிப்பிங் வணிகங்கள் தயாரிப்புகளை ஒன்றாகத் தொகுக்கவோ குழுவாக்கவோ தேர்வுசெய்து, அவற்றை ஒரு தயாரிப்பாக வாங்குவதற்குக் கிடைக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு டிராப்ஷிப்பிங் வணிகம் கைவினைப் பொருட்களின் பெரிய தயாரிப்பு வரிசையைக் கொண்ட ஒரு சப்ளையரைக் கண்டறிந்து, அந்தப் பொருட்களைப் பயன்படுத்தித் தங்களது சொந்தக் கைவினைப் பொருட்களை உருவாக்கலாம். புதிய கைவினை ஐடியாக்களை உருவாக்குவதன் மூலம், டிராப்ஷிப்பிங் நிறுவனம் கைவினைப் பொருட்களை ஒன்றாகத் தொகுத்து, "உங்கள் சொந்தக் கைவினையை உருவாக்குங்கள்" என்ற தொகுப்பை விற்கலாம். பின்னர் அவர்கள் அந்தப் பொருட்களை டிராப்ஷிப் செய்து, வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மூலம் வழிமுறைகளை அனுப்பலாம் அல்லது வாங்கிய பிறகு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு அந்த வழிமுறைகளைக் கிடைக்கச் செய்யலாம்.

இது யாருக்கு ஏற்றது

இருக்கும் தயாரிப்புகளை இணைத்துப் புதிய தயாரிப்புகளை உருவாக்குவது கடினமாக இருக்கலாம், மேலும் இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான படைப்பாற்றல் தேவைப்படும். இருப்பினும், நீங்கள் உருவாக்கக்கூடிய மற்றொரு பொதுவான தயாரிப்பு என்பது, ஒன்றாக வாங்குவதற்குப் பயனுள்ளதாக இருக்கும் தயாரிப்புகளின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, மீண்டும் பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தைக்குப் புதிய பள்ளிப் பொருட்கள் அனைத்தும் தேவைப்படலாம், எனவே பள்ளியின் ஒவ்வொரு வகுப்புக்கும் அல்லது ஆண்டிற்கும் பள்ளிப் பொருட்களின் தொகுப்புகளை நீங்கள் உருவாக்கலாம்.

வெவ்வேறு சப்ளையர்களிடமிருந்து டிராப்ஷிப் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட ஒரு தயாரிப்பை நீங்கள் உருவாக்கினால், அந்த வெவ்வேறு தயாரிப்புகள் வெவ்வேறு நேரங்களில் வாடிக்கையாளரைச் சென்றடையும் என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு ஆர்டரிலுள்ள அனைத்துத் தயாரிப்புகளையும் ஒரே பேக்கேஜில் ஒன்றாக பேக் செய்யும் ஒற்றைச் சப்ளையரிடமிருந்து வரும் தயாரிப்புகளிலிருந்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும்.

இது என்ன

தேவைக்கேற்ப அச்சிடுதல் என்பது ஒரு வகையான டிராப்ஷிப்பிங் ஆகும், இதில் ஒரு நிறுவனம் உரை அல்லது படம் அச்சிடப்பட்ட தயாரிப்புகளை விற்க விரும்புகிறது. ஷவர் கர்ட்டன்கள், மக்குகள், செல்லப் பிராணிகளின் உணவுக் கிண்ணங்கள் மற்றும் டி-ஷர்ட்கள் போன்ற அச்சிடுவதற்கான பலதரப்பட்ட தயாரிப்புகளைப் பெரும்பாலான அச்சிடல் சேவைகள் வழங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு இசைக் குழு, இசைக்குழுவின் படங்கள் அல்லது இசைக்குழுவின் பெயரை மட்டும் அச்சிட்ட தயாரிப்புகளை விற்பதன் மூலம் தங்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க விரும்பலாம். ஒரு தேவைக்கேற்ப அச்சிடுதல் சேவையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், அவர்கள் தங்களின் படங்களைப் பதிவேற்றலாம், மேலும் ஒவ்வொரு முறை விற்பனை செய்யும்போதும், சேவை தயாரிப்பை அச்சிட்டு இசைக்குழுவின் சார்பாக வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் செய்கிறது.

இது யாருக்கு ஏற்றது

தேவைக்கேற்ப அச்சிடுதல் விற்பனைக்கு, நீங்கள் தயாரிப்புகளில் எதை அச்சிட விரும்புகிறீர்கள் என்பதற்கான ஐடியா உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் ஐடியாவைப் பெற்ற பிறகு, அச்சிடல் சேவை ஏற்கக்கூடிய வடிவத்தில் அதை நீங்கள் அமைக்க வேண்டும், இது வழக்கமாகக் குறிப்பிட்ட அளவுத் தேவைகளைக் கொண்ட ஒரு படப் பதிவேற்றம் மூலமாகச் செய்யப்படும்.

தயாரிப்பு மறுவிற்பனையைப் போலவே, நீங்கள் உருவாக்கும் தயாரிப்பை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்று தெரிந்திருப்பது உதவும். தேவைக்கேற்ப அச்சிடுதல் என்பது டிராப்ஷிப்பிங்கின் மற்றொரு பொதுவான வடிவமாகும், மேலும் பல வணிகங்கள் மக்குகள் மற்றும் டி-சர்ட்டுகள் போன்ற பொதுவான பொருட்களில் அச்சிடுகின்றன. பொதுவான ஆர்வத்தைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவினரை நீங்கள் அணுக முடிந்தால், தேவைக்கேற்ப அச்சிடும் டிராப்ஷிப்பிங் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

தேவைக்கேற்ப அச்சிடும் ஸ்டோரை உருவாக்குவது எப்படி என்பது குறித்த சரிபார்ப்புப் பட்டியலுக்கு, Shopify இல் தேவைக்கேற்ப அச்சிடும் ஸ்டோரை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.