சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்குதல்

சந்தைப்படுத்தல் திட்டம் என்பது வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கும் விற்பனையை அதிகரிப்பதற்குமான உங்களின் அணுகுமுறையைக் குறிக்கிறது. உங்கள் ஸ்டோருக்குச் சரியான உத்திகள் மற்றும் சேனல்களைத் தேர்வுசெய்யவும் நீங்கள் தடமறியக்கூடிய இலக்குகளை அமைக்கவும் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் சந்தைப்படுத்தல் உத்தியை மாற்றியமைக்கவும் இது உதவுகிறது.

சொந்தமாகச் சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் ஒரு Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம். சந்தைப்படுத்தல் திட்டம் என்றால் என்ன, அதை எப்படி எழுதுவது என்பதை Shopify வலைப்பதிவிலும் நீங்கள் படிக்கலாம்.

சந்தைப்படுத்தல் புனலைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்குவதற்கான படிகளுக்குள் செல்வதற்கு முன், சந்தைப்படுத்தல் புனலைப் புரிந்துகொள்வது உதவியாக இருக்கும். சந்தைப்படுத்தல் புனல் என்பது உங்கள் வணிகத்தில் ஆரம்ப ஆர்வத்தைக் காட்டுவது முதல் விசுவாசமான ஆதரவாளராக மாறுவது வரை வாடிக்கையாளர் கடந்துசெல்லும் வெவ்வேறு கட்டங்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு கட்டமும் வெற்றிபெறுவதற்கான அதற்கான சொந்த இலக்குகள் மற்றும் அளவீடுகளைக் கொண்டுள்ளது. உங்கள் வணிகத்தின் பயணத்தைப் பொறுத்து உங்கள் சந்தைப்படுத்தல் திட்டம் வெவ்வேறு கட்டங்களில் கவனம் செலுத்தக்கூடும்.

சந்தைப்படுத்தல் புனலில் ஐந்து கட்டங்கள் உள்ளன:

  1. வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை ஈர்த்தல்: ஆர்வத்தை உருவாக்குவது, கவனத்தை ஈர்ப்பது ஆகியவற்றில் இக்கட்டம் கவனம் செலுத்துகிறது. உங்கள் இலக்கு பார்வையாளர்களை அடையாளம் கண்டு, யாருக்கெல்லாம் உங்கள் தயாரிப்புகள் அதிக அளவில் தேவைப்படலாம் என்பதைத் தீர்மானிக்கவும். பக்கப் பார்வைகள், உள்வரும் இணைப்புகள், சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள் ஆகியவை முக்கிய அளவீடுகளில் அடங்கும்.

  2. உறவுகளை வளர்த்தல்: வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, நீங்கள் நம்பிக்கையை வளர்த்து அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டத்தில் SEO, மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் மற்றும் சமூக ஊடக ஈடுபாடு ஆகியவை அடங்கும். ஈடுபாட்டு அளவீடுகள் மற்றும் உங்கள் தளத்தில் செலவிடும் நேரம் ஆகியவற்றின் மூலம் வெற்றி அளவிடப்படுகிறது.

  3. ஆர்வத்தை விற்பனையாக மாற்றுதல்: இங்குதான் நீங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைக் கொள்முதல்களாக மாற்றுவீர்கள். குறிப்பாக மொபைல் சாதனங்களில் உங்கள் ஸ்டோரின் செயல்பாட்டையும் வழிகாட்டுதலையும் எளிதாக்குவதில் கவனம் செலுத்தவும். இங்கு உங்களின் முக்கிய அளவீடு மாற்று வீதமாகும்.

  4. வாங்கிய பிறகு வாடிக்கையாளர்களை ஈடுபடுத்துதல்: புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதை விடவும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும். வாடிக்கையாளர் கருத்து மற்றும் மறுஇலக்கிடல் பிரச்சாரங்களின் மூலம் மீண்டும் வாங்குதலை ஊக்குவிப்பது இந்தக் கட்டத்தில் அடங்கும். வெற்றியை அளவிட மீண்டும் வரும் வாடிக்கையாளர்களின் வீதத்தைத் தடமறியவும்.

  5. பிராண்ட் ஆதரவாளர்களை உருவாக்குதல்: உங்களின் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்கள், தங்கள் அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் பிராண்ட் வெற்றியாளர்களாக மாறக்கூடும். வாய்மொழிச் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கப் பரிந்துரைத் திட்டங்கள் மற்றும் சமூக ஊடகப் போட்டிகளில் கவனம் செலுத்தவும். பரிந்துரை விற்பனை மற்றும் சமூக ஊடக ஈடுபாட்டின் மூலம் வெற்றியை அளவிடவும்.

உங்கள் வணிகம் ஒரு கட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம் அல்லது ஒரே நேரத்தில் பல கட்டங்களில் செயல்படலாம். உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்கும்போது, உங்களின் தற்போதைய வணிக இலக்குகளுக்கு எந்தக் கட்டங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

படி 1: உங்கள் செய்தியை வரையறுத்தல்

உங்கள் ஸ்டோரின் பிராண்ட் செய்தியை வரையறுப்பது, உங்கள் தயாரிப்புகளை வாங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் முடிவெடுக்க உதவும் தகவல்களை அவர்களுக்கு வழங்கும். ஒவ்வொரு முறையும் விளம்பரம் அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கும்போதும் அது உங்கள் பிராண்டைப் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

பிராண்ட் செய்தியை உருவாக்க, இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்கும் வகையில் சில வார்த்தைகளை எழுதவும்:

  • உங்கள் ஸ்டோரின் சிறப்பு என்ன?
  • உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து நீங்கள் எந்த வகையில் வேறுபடுகிறீர்கள்?
  • வாடிக்கையாளர்களுக்கு வழங்க உங்களிடம் என்ன உள்ளது?
  • உங்களின் நிலைப்பாடு என்ன?

சிந்தித்துத் திட்டமிட்ட பிறகு, உங்கள் பதில்களில் உள்ள சில சொற்களைப் பயன்படுத்தி ஒரு செய்தியை நீங்கள் எழுதலாம். உதாரணமாக, உங்களின் தயாரிப்பு சுற்றுச்சூழல் சார்ந்ததாக இருப்பதால் போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுகிறது என்றால், உங்கள் செய்தியில் green மற்றும் recyclable போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

படி 2: உங்கள் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ளுதல்

எந்த வகையான வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளைத் தேடுவார்கள் என கற்பனை செய்து, அவர்களின் வயது, பாலினம், பங்கு, பொருளாதார நிலை, இடம் போன்ற மக்கள்தொகை சார்ந்த குணநலன்களைப் பற்றிச் சிந்திக்கவும். உங்கள் வாடிக்கையாளர் தீர்க்க முயலும் ஒரு பிரச்சனையையும் குறிப்பிட்ட தனிப்பட்ட குணநலன்களையும் கருத்தில் கொள்ளவும். உங்கள் தயாரிப்புகளை வாங்கக்கூடிய வாடிக்கையாளர் வகையைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறீர்களோ, அந்தளவுக்குச் சிறப்பாக உங்கள் சந்தைப்படுத்தலை அவர்களுக்கேற்ப வடிவமைக்க முடியும். உங்கள் சந்தைப்படுத்தலின் மூலம் நீங்கள் அனைவரையும் சென்றடைய முடியாது, ஆனால் உங்கள் தயாரிப்புகளை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள்.

ஆன்லைன் ஸ்டோர் டிராஃபிக்கைப் பகுப்பாய்வு செய்தல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு ஏற்கனவே பார்வையாளர்கள் வருகிறார்கள் என்றால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் டிராஃபிக்கை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம். உங்கள் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்து மிகவும் விரிவாக அறிய Shopify அறிக்கைகளைப் பயன்படுத்தலாம்.

Google Analytics போன்ற பகுப்பாய்வுச் சேவைகளையும் நீங்கள் அமைக்கலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோருடன் வாடிக்கையாளர்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

படி 3: சந்தைப்படுத்தல் உத்திகளைத் தேர்ந்தெடுத்தல்

நீங்கள் பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் உத்திகள் உங்கள் ஸ்டோருக்குத் தனித்துவமானவை; மேலும் அவை நீங்கள் விற்கும் தயாரிப்புகள், உங்கள் வாடிக்கையாளர்கள், உங்கள் பிராண்ட் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அனைத்தையும் முயற்சி செய்வதற்குப் பதிலாக, உங்கள் வணிகத்துக்குப் பொருத்தமான உத்திகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்தில் பின்வரும் சில உத்திகள் அடங்கியிருக்கலாம்:

படி 4: இலக்குகளை அமைத்தல்

நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு சந்தைப்படுத்தல் முயற்சியும் ஒரு குறிப்பிட்ட, அளவிடக்கூடிய இலக்குடன் தொடங்க வேண்டும். நீங்கள் ஒரு இலக்கை அமைத்தால், உங்கள் சந்தைப்படுத்தல் உத்திகள் வெற்றிகரமாக உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதோடு, தேவைக்கேற்ப அவற்றை மாற்றியமைக்கவும் முடியும். இலக்கானது குறுகிய கால அல்லது நீண்ட கால இலக்காக இருக்கலாம். புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, மீண்டும் வரும் வாடிக்கையாளர்களைப் பெறுவது அல்லது குறிப்பிட்ட அளவிலான தயாரிப்பை விற்பனை செய்வது போன்றவற்றில் அது கவனம் செலுத்தலாம், எடுத்துக்காட்டாக:

  • 6 மாதங்களில் 250 புதிய வாடிக்கையாளர்கள்
  • ஒரு விளம்பரக் காலத்தின்போது தயாரிப்பு விற்பனையில் $5000 USD
  • 75 மின்னஞ்சல் சந்தாக்கள்
  • கைவிடப்பட்ட கார்ட் மீட்பில் 20% முன்னேற்றம்
  • கடந்த ஆண்டை விட விற்பனையில் 10% அதிகரிப்பு

விற்பனைக்குப் புதியவராக இருக்கும்போது, இலக்குகளை அமைப்பது சவாலானதாக இருக்கலாம். குறுகிய கால இலக்குகளுடன் தொடங்கினால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா என்பதை விரைவாகத் தீர்மானிக்க முடியும். ஒரு சிறிய, குறுகிய கால இலக்கில் சந்தைப்படுத்தலின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்வது எளிதானது. உங்கள் சந்தைப்படுத்தல் இலக்குகளை அடைவதில் உங்களுக்குச் சிரமம் இருந்தால், சற்று கடினமானதாக இருக்கும் ஒரு சிறிய இலக்கையும் நீட்டிக்கப்பட்ட இலக்கையும் திட்டமிட முயற்சிக்கவும். உங்கள் ஸ்டோர் இலக்கை அடைந்தால், நீட்டிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு நீங்கள் உழைக்கலாம்.

படி 5: உங்கள் சந்தைப்படுத்தல் சேனல்களைத் தேர்ந்தெடுத்தல்

கட்டண விளம்பரம், வலைப்பதிவு இடுகைகள், செய்தி வெளியீடுகள், சமூக ஊடகம் மற்றும் மின்னஞ்சல் உட்பட உங்கள் ஸ்டோரைச் சந்தைப்படுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. சில சந்தைப்படுத்தல் சேனல்கள் குறுகிய கால இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமானவை, மற்றவை நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளரைத் தக்கவைப்பதற்குச் சிறந்தவை. பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு பிரிவுகளைச் சென்றடைவதற்கும் நீங்கள் சேனல்களின் கலவையை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆன்லைன் விளம்பரங்களுக்குப் பணம் செலுத்தலாம், மேலும் உங்கள் ஸ்டோருக்கு வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவதை ஈர்க்க வலைப்பதிவைப் பராமரிக்கலாம்.

உங்கள் சந்தைப்படுத்தல் உத்திகளுக்காக நீங்கள் நேரத்தையோ பணத்தையோ முதலீடு செய்தாலும், உங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கு ஒரு செலவு இருக்கிறது. உங்கள் சந்தைப்படுத்தல் சேனல்களைத் தேர்ந்தெடுத்து, விளம்பரம் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்கத் தொடங்குவதற்கு முன்பு பட்ஜெட்டை அமைப்பதை உறுதிசெய்யவும்.

Growth பக்கத்திலிருந்து உங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகளை நிர்வகிப்பதற்கு கேம்பெயின்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக விளம்பரங்களை உருவாக்கித் தடமறியலாம். நீங்கள் முதல்முறையாகக் கட்டண விளம்பரங்களைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர் வாங்கும்போது மட்டுமே நீங்கள் பணம் செலுத்துகின்ற குறைவான ஆபத்து கொண்ட ஒரு விருப்பமாக Shop Campaigns இருக்கும். Facebook மற்றும் Instagram-இல் சந்தைப்படுத்துதல் அல்லது பிற சந்தைப்படுத்தல் செயலிகள் மூலமாகவும் நீங்கள் விளம்பரங்களை இயக்கலாம்.

படி 6: தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்தல்

உங்கள் சந்தைப்படுத்தலின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்வது எதிர்காலச் சந்தைப்படுத்தல் முயற்சிகள் குறித்த முடிவுகளை எடுக்க உதவுவதோடு, வேலை செய்யாத சந்தைப்படுத்தல்களில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதையும் தடுக்கும். உங்களின் செய்தியில் உள்ள சிக்கலை நீங்கள் உணரலாம் அல்லது ஒரு சந்தைப்படுத்தல் சேனல் உங்கள் ஸ்டோருக்குப் பொருந்தவில்லை என்பதைத் தீர்மானிக்கலாம்.

ஒரு விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் போது, உங்கள் இலக்கை மைல்கற்களாகப் பிரிப்பதன் மூலம் முன்னேற்றத்தைத் தடமறியவும். எடுத்துக்காட்டாக, ஒரு மாதத்தில் உங்கள் ஸ்டோரின் டிராஃபிக்கை 500 புதிய பார்வைகளாக அதிகரிக்க நீங்கள் முயற்சித்தால், முன்னேற்றத்தைத் தடமறிவதற்கு அதை ஒவ்வொரு நாள் அல்லது வாரமாகப் பிரிக்க வேண்டும். உங்கள் ஸ்டோர் இலக்கை அடைய அல்லது கடந்து செல்லத் தயார்நிலையில் இருந்தால், உங்கள் சந்தைப்படுத்தலை விரிவுபடுத்தவோ மற்றொரு இலக்கைச் சேர்க்கவோ நீங்கள் பரிசீலிக்கலாம். உங்கள் ஸ்டோர் மைல்கற்களை எட்டவில்லை எனில், பிரச்சாரம் முடிவதற்குள் முடிவுகளை மேம்படுத்துவதற்கான மாற்றங்களை உங்களால் செய்ய முடியும்.

ஒரு விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் முடிவில், நீங்கள் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஸ்டோர் டிராஃபிக் மற்றும் தயாரிப்பு விற்பனையில் உள்ள போக்குகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். ஒரு பிரச்சாரம் அல்லது விளம்பரத்தின் போது நீங்கள் செய்த முன்னேற்றத்தைத் தடமறிந்து, மாற்றங்களைச் செய்திருந்தால், ஒவ்வொரு மாற்றத்தின் தாக்கத்தையும் நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம். உங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ய, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சந்தைப்படுத்தல் செயல்திறன் அறிக்கைகளைப் பயன்படுத்தலாம்.

சந்தைப்படுத்தலுக்கான திட்டமிடலும் உங்கள் உத்தியை உருவாக்குவதும் ஒருபோதும் முடிவடையாது. உங்கள் சந்தைப்படுத்தல் உத்திகள், தயாரிப்புகள், ஸ்டோர் அல்லது பிராண்டில் நீங்கள் மாற்றத்தைச் செய்யும் ஒவ்வொரு முறையும், ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும். நீங்கள் அதிக அனுபவத்தைப் பெறும்போது, உங்கள் ஸ்டோரில் எவை விற்பனையை அதிகரிக்கும் என்பதைப் பற்றி அதிகமாகப் புரிந்துகொள்வதால் முடிவுகளை விரைவாகவும் எளிதாகவும் எடுக்க முடியும்.

மாற்றங்களுக்காக உங்கள் ஸ்டோரை மேம்படுத்துதல்

உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்தை அமைத்த பிறகு, அதிகமான பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கு உங்கள் ஸ்டோரை மேம்படுத்தலாம். பின்வரும் பகுதிகள் உங்கள் மாற்று வீதத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்:

  • ஸ்டோர் செயல்திறன்: வேகமான ஸ்டோர், அதிகமான பார்வையாளர்களை மாற்றும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் இணையச் செயல்திறனை எப்படி மேம்படுத்துவது என்பதை அறிக.
  • வழிசெலுத்தல் மற்றும் வடிவமைப்பு: உங்கள் மெனுக்களை எளிமையாகவும், சாதனங்கள் முழுவதிலும் உங்கள் தளவமைப்பை ஒரே மாதிரியாகவும் வைத்திருக்கவும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் மொபைலில் உங்கள் ஸ்டோரைச் சோதிக்கவும்.
  • தயாரிப்புத் தகவல்: உயர்தரப் புகைப்படங்கள், ஸ்கேன் செய்யக்கூடிய விளக்கங்கள் மற்றும் தயாரிப்பு மதிப்பாய்வுகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் நம்பிக்கையான கொள்முதல் முடிவுகளை எடுக்க உதவலாம்.
  • செலவு வெளிப்படைத்தன்மை: ஷாப்பிங் அனுபவத்தின் தொடக்கத்திலேயே ஷிப்பிங் செலவுகளைக் காட்டவும், கார்ட் கைவிடப்படுவதைக் குறைக்க தெளிவான திருப்பியளிப்புக் கொள்கையை எழுதவும்.
  • நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை: ஒரு எங்களைப் பற்றி பக்கத்தை உருவாக்கவும், தொடர்புகொள்வதற்கான பக்கத்தைச் சேர்க்கவும் மற்றும் நேரலை அரட்டை ஆதரவுக்கு Shopify Inbox-ஐப் பயன்படுத்தவும்.
  • சமூகச் சான்று: தயாரிப்பு மதிப்பாய்வுகளைச் சேகரித்துக் காட்டவும், அதிக விற்பனையாகும் சேகரிப்புகளை முன்னிலைப்படுத்தவும், மேலும் கிரியேட்டர்களுடன் கூட்டாளராக இணைய Shopify Collabs-ஐப் பயன்படுத்தவும்.
  • சர்வதேச வாடிக்கையாளர்கள்: வெவ்வேறு பிராந்தியங்களுக்கான மொழி, விலை நிர்ணயம் மற்றும் வரிகளைத் தனிப்பயனாக்க Shopify Markets-ஐப் பயன்படுத்தவும்.

வாடிக்கையாளர்கள் எங்கு விலகுகிறார்கள் என்பதைக் கண்டறியவும் உங்கள் மாற்றங்களின் தாக்கத்தை அளவிடவும் ஆன்லைன் ஸ்டோர் மாற்று வீத அறிக்கையைப் பயன்படுத்தவும்.