பிக்சல்கள் மேலோட்டம்

வாடிக்கையாளர் நிகழ்வுகளைத் தடமறியும் பிக்சல்களைச் சேர்க்கவும் நிர்வகிக்கவும் Shopify பிக்சல்கள் நிர்வாகியைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர் நிகழ்வுகள் என்பவை வாடிக்கையாளரின் உலாவியில் நடைபெறும் நடவடிக்கைகளாகும் (எடுத்துக்காட்டாக, இணைப்பைக் கிளிக் செய்வது அல்லது கார்ட்டில் தயாரிப்பைச் சேர்ப்பது). உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர் நிகழ்வுகள் பிரிவில் பிக்சல்களைச் சேர்க்கவும் நிர்வகிக்கவும் முடியும்.

முன்பெல்லாம் வணிகர்களால், தங்களின் ஆன்லைன் ஸ்டோரின் பல இடங்களில் (ஆன்லைன் விருப்பத்தேர்வுகள், செக்அவுட் ஸ்கிரிப்டுகள் மற்றும் செயலிகளில்) JavaScript துணுக்குகளை மேனுவலாகச் சேர்க்க முடிந்தது. இந்த ஸ்கிரிப்டுகள் வழக்கமாகத் தரக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை அல்ல. மேலும் இவற்றை நிர்வகிப்பதற்கு நீண்ட நேரமும் தேவைப்பட்டது. பிக்சல்கள் நிர்வாகி மூலம், உங்கள் ஸ்கிரிப்டுகள் ஒரே நிர்வாகக் கருவியில் சேமிக்கப்பட்டு சாண்ட்பாக்ஸ் சூழலில் (sandbox environment) இயக்கப்படும். உங்கள் ஸ்டோரில் செயலி பிக்சல்கள் அல்லது பிரத்தியேக பிக்சல்களைச் சேர்ப்பது பின்வரும் பலன்களை வழங்கும்:

  • உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் நடக்கும் செக்அவுட் நிகழ்வுகள் உட்பட தொடர் வாடிக்கையாளர் நிகழ்வுகளுக்கான அணுகல்.
  • உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு அடுக்கு, அத்துடன் மூன்றாம் தரப்புச் சேவைகளுடன் நீங்கள் பகிரும் வாடிக்கையாளர் தரவின் மீதான கூடுதல் கட்டுப்பாடு.
  • மோசமாகச் செயல்படும் Javascript-ஐ மூன்றாம் தரப்புக் குறியீடு இயக்குவதைத் தடுத்தல் அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் செக்அவுட்டில் குறுக்கிடுவதைத் தடுத்தல்.
  • தனியுரிமை இணக்கத்துக்கான உள்ளமைக்கப்பட்ட கருவிகள்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பிக்சல்களை 2 வழிகளில் சேர்க்கலாம்: சந்தைப்படுத்தல் மற்றும் தரவு சேகரிப்புச் செயலிகள் மூலம் நிறுவப்படும் செயலி பிக்சல்கள், மேலும் உங்கள் Shopify நிர்வாகியின் பிக்சல்கள் நிர்வாகியில் டெவலப்பர் மூலம் மேனுவலாகச் சேர்க்கப்படும் பிரத்தியேக பிக்சல்கள்.

ஸ்டோர்ஃபிரண்ட், செக்அவுட், நன்றிப் பக்கம் மற்றும் ஆர்டர் நிலை பக்கம் ஆகியவற்றில் பிக்சல்கள் தானாகவே ஏற்றப்படும். வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களில், வாடிக்கையாளர் கணக்குகளுக்கான பிரத்தியேக துணை டொமைனை நீங்கள் இணைத்த பின்னரே பிக்சல்கள் ஏற்றப்படும், மேலும் அவை அந்தப் பக்கங்களில் page_viewed வாடிக்கையாளர் நிகழ்வை மட்டுமே தடமறியும்.

பிக்சல்களுக்கான சாண்ட்பாக்ஸ் சூழல்

செயலி பிக்சல்கள் மற்றும் பிரத்தியேக பிக்சல்களுக்கு Shopify பாதுகாப்பானதொரு சாண்ட்பாக்ஸைப் பயன்படுத்துகிறது. சாண்ட்பாக்ஸ் என்பது, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பிற பகுதிகளைப் பாதிக்காமல் ஸ்கிரிப்டுகளை இயக்க அனுமதிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலாகும். சாண்ட்பாக்ஸ் செய்யப்பட்ட பிக்சலை உங்கள் இணையதளத்தில் எங்கு வேண்டுமானாலும் இயக்கும் சுதந்திரம் இருந்தாலும், சாண்ட்பாக்ஸிற்குள் கிடைக்கும் தரவை அணுகுவதற்கு மட்டுமே அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பிக்சல்கள் நிர்வாகியில் நிறுவப்படும் அல்லது உருவாக்கப்படும் எந்தவொரு பிக்சல்களும் அவற்றின் குறிப்பிட்ட நோக்கத்திற்கு வெளியே தரவைச் சேகரிக்கவோ மீட்டெடுக்கவோ முடியாது என்பதை இந்தச் சாண்ட்பாக்ஸ் உறுதிசெய்கிறது, இல்லையெனில் இது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம்.

பிக்சல்கள் தொடர்புடைய சாத்தியமான அபாயங்கள் குறித்து மேலும் அறிக.

பிக்சல்கள் சாண்ட்பாக்ஸின் வரம்புகள்

பிக்சல்கள் பாதுகாப்பான சாண்ட்பாக்ஸ் சூழலில் இயங்குவதால், எந்தெந்தத் தகவல்களை அணுகலாம் என்பதில் சில வரம்புகள் உள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, மூன்றாம் தரப்பினர் எந்தத் தரவை அணுகலாம் என்பதன் மீது உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்த வரம்புகள் சில மூன்றாம் தரப்புப் பிக்சல்களுடன் இணக்கமாக இருக்காது. எந்தெந்தப் பிக்சல்கள் இணக்கமானவை என்பதை உறுதிப்படுத்த, மூன்றாம் தரப்புப் பிக்சல் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

பிக்சல்கள் சாண்ட்பாக்ஸ்களின் பின்வரும் அறியப்பட்ட வரம்புகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • பொத்தான்கள், படிவங்கள், பேனர்கள் அல்லது மாடல்கள் போன்ற பயனர் இடைமுகக் கூறுகளைப் பிக்சல்கள் சாண்ட்பாக்ஸ்களால் ரெண்டர் செய்ய முடியாது.
  • பின்வரும் தகவல்களைப் பிக்சல்கள் சாண்ட்பாக்ஸ்களால் தானாகவே கண்டறிய முடியாது:
    • DOM (Document Object Model) ஸ்கிராப்பிங்கிலிருந்து கிடைக்கும் நிகழ்வுகள்.
    • DOM ஸ்கிராப்பிங்கிலிருந்து கிடைக்கும் மெட்டாடேட்டா.
    • DOM ஸ்கிராப்பிங்கிலிருந்து கிடைக்கும் மின்னஞ்சல் மற்றும் ஃபோன் போன்ற பயனர் தகவல்கள்.
    • DOM ஸ்கிராப்பிங்கிலிருந்து கிடைக்கும் வெளிச்செல்லும் இணைப்பைக் கிளிக் செய்த விவரங்கள்.
    • பக்க ஸ்க்ரோலிங்.
    • DOM ஸ்கிராப்பிங்கிலிருந்து வெப்ப வரைபடங்களை உருவாக்குவதற்கான கிளிக்குகள் மற்றும் மவுஸ் அசைவுகள்.

Lax சாண்ட்பாக்ஸில் பக்க URL-களைத் தானாகக் கண்டறியும் செயலில் சாண்ட்பாக்ஸ் பதிப்பு சேர்க்கப்பட்டிருக்கும், மேலும் அது முதன்மைச் சாளரத்தின் URL-ஐச் சரியாகப் பிரதிபலிக்காது. முதன்மைச் சாளரத்தின் URL-ஐ page_viewed நிகழ்விலிருந்து பெறலாம்.

DOM ஸ்கிராப்பிங்கிலிருந்து நிகழ்வுகள், மெட்டாடேட்டா, பயனர் தகவல் மற்றும் வெளிச்செல்லும் இணைப்புகளைத் தானாகக் கண்டறிவதற்கு, மாற்றாகப் பிரத்தியேக நிகழ்வுகளை நீங்கள் வெளியிடலாம். பிரத்தியேக நிகழ்வுகளை வெளியிடுவதை எல்லாச் செயலி பிக்சல்களும் ஆதரிக்காது.

பிக்சல் தடமறியும் திறன்கள்

ஒவ்வொரு பிக்சல் வகையிலும் எவற்றையெல்லாம் நீங்கள் பொதுவாகத் தடமறிய முடியும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது:

  • மாற்ற மற்றும் சந்தைப்படுத்தல் பிக்சல்கள்: பெரும்பாலான மாற்றத்தைத் தடமறிதலுக்கு, வழக்கமான செக்அவுட் நிகழ்வுகள் மற்றும் வாடிக்கையாளர் நடவடிக்கைகள் வேலை செய்யும். மின்னஞ்சல் முகவரிகள் அல்லது ஃபோன் எண்களுக்குப் படிவங்களைத் தானாகவே ஸ்கிராப் செய்யும் அம்சங்கள் சாண்ட்பாக்ஸில் வேலை செய்யாமல் போகலாம். பெரும்பாலான பிக்சல் வழங்குநர்கள், இதற்குப் பதிலாக இந்தத் தரவை மேனுவலாக அனுப்புவதை ஆதரிக்கின்றனர்.
  • பகுப்பாய்வு பிக்சல்கள்: பக்கப் பார்வைகள், தயாரிப்புப் பார்வைகள், கார்ட் புதுப்பிப்புகள், கொள்முதல்கள் மற்றும் தேடல்கள் போன்ற வழக்கமான வாடிக்கையாளர் நிகழ்வுகள் அனைத்தும் வேலை செய்யும். Shopify.analytics.publish() முறையைப் பயன்படுத்திப் பிரத்தியேக நிகழ்வுகளையும் நீங்கள் தடமறியலாம். படிவத் தொடர்புகள் மற்றும் இணைப்பைக் கிளிக் செய்த விவரங்களைத் தடமறிவதற்கு, அவற்றைப் பிரத்தியேக நிகழ்வுகளாக வெளியிட வேண்டும்.
  • Google Tag Manager: நீங்கள் Google Tag Manager-ஐப் பிரத்தியேக பிக்சலாக இயக்கலாம். இருப்பினும், Google Tag Manager ஏற்றும் பிக்சல்கள் Shopify சாண்ட்பாக்ஸிற்குள்தான் இயங்குகின்றன, எனவே அதே தடமறியும் திறன்களும் வரம்புகளுமே பொருந்தும். Google Tag Manager-ஐப் பிரத்தியேக பிக்சலாகப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

வாடிக்கையாளர் தனியுரிமை

சம்மதம் தேவைப்படும் வகையில் உள்ளமைக்கப்பட்டுள்ள சந்தைகளில் (வழக்கமாக ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) மற்றும் ஐக்கிய ராச்சியம்), பிக்சல் உள்ளமைவில் தேவையான அனுமதிகளைப் பார்வையாளர்கள் வழங்கியிருந்தால் மட்டுமே வெப் பிக்சல்கள் இயங்கும். இயல்பாக, புதிய பிக்சல்களுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு அனுமதிகள் தேவைப்படும்.

அதேபோல், பிக்சலானது வரையறுக்கப்பட்ட தரவுப் பயன்பாட்டை ஆதரித்தால் ஒழிய, தரவு விற்பனையாக உள்ளமைக்கப்பட்டுள்ள பிக்சல்கள் தரவு விற்பனை அல்லது பகிர்தலில் இருந்து விலகிய வாடிக்கையாளர்களுக்கு இயங்காது.

பிரத்தியேக பிக்சல்களின் டெவலப்பர்கள் சம்மதத்தைச் சேகரிப்பது மற்றும் பதிவு செய்வது குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.

சாத்தியமான அபாயங்கள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோர் அல்லது ஸ்டோர் செக்அவுட்டில் நீங்கள் சேர்க்கும் குறியீடு எப்போதும் உங்களுக்குப் புரிந்திருப்பதை உறுதிசெய்யவும் அல்லது பிரத்தியேக பிக்சல்கள் தொடர்பான உதவிக்குச் Shopify பார்ட்னரைப் பணியமர்த்தவும்.

செயல்திறன் அபாயங்கள்

பிக்சல்கள் என்பவை வாடிக்கையாளர் நிகழ்வுகளைத் தடமறிய உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பின்னணியில் இயங்கும் ஸ்கிரிப்டுகளாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு மெதுவாக உங்கள் ஸ்டோர் இயங்கும். மேலும், சேர்க்கப்பட்ட ஸ்கிரிப்ட் உடைந்திருந்தாலோ தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தாலோ, அந்தச் செயல்பாடு காலவரையின்றி இயங்கலாம், இதனால் உங்கள் தளம் மெதுவாக ஏற்றப்படலாம் அல்லது ஏற்றப்படாமல் போகலாம்.

தனியுரிமை அபாயங்கள்

வாடிக்கையாளர் தகவல்கள் ஆன்லைனில் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய பயனர் தனியுரிமை கடுமையாக ஒழுங்குபடுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் ஒப்புதல் தேவைகளைத் தவிர்க்க குறியீட்டுத் துணுக்குகள் பயன்படுத்தப்படலாம், இது Shopify சேவை விதிமுறைகளை மீறுவதோடு, சட்டரீதியான பொறுப்புகளுக்கும் வழிவகுக்கும். சில US மாகாணங்கள் அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி போன்ற கடுமையான தனியுரிமை விதிமுறைகளைக் கொண்ட இடங்களில் நீங்கள் வசித்தாலோ அல்லது அங்குள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையளித்தாலோ இது மிகவும் பொருந்தும். வாடிக்கையாளர் தரவைச் சேகரிக்கப் பிக்சல்களைப் பயன்படுத்தும்போது, பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவதற்கும் தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறுவதற்கும் நீங்களே பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளவும். உங்களுக்குப் பொருந்தும் தேவைகள் குறித்து உறுதியாகத் தெரியவில்லை எனில், சட்ட நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.