கனடாவில் அடிப்படை வரிச் சேவை
இந்தப் பக்கத்தில் உள்ளவை
- உங்கள் வரி அமைப்புகளைப் புதுப்பித்தல்
- வரி எண்ணுக்கு நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானித்தல்
- மாகாண அளவில் நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானித்தல்
- பதிவுசெய்து உங்கள் வரி எண்ணைச் சேர்த்தல்
- வரி அமைப்புகளை ஓவர்ரைடு செய்தல்
- வரைவு ஆர்டர் மூலம் உங்கள் வரி அமைப்புகளைச் சரிபார்த்தல்
- பொதுவான வரி அமைப்புச் சிக்கல்களுக்கான தீர்வுகாணுதல்
- பிற பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- கனடிய வரிச் சிக்கல்கள் தொடர்பாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளத் தயாராகுதல்
- தொடர்புடைய இணைப்புகள்
உங்கள் வரி அமைப்புகளைப் புதுப்பிக்கவும்
நீங்கள் ஏற்கனவே கனடாவில் விற்பனை செய்ய Shopifyஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், புதிய கனடிய விற்பனை வரி அம்சங்களைப் பயன்படுத்த, உங்கள் ஸ்டோரைப் புதுப்பிக்கலாம். உங்கள் ஸ்டோரைப் புதுப்பிக்கத் தகுதி இருந்தால், உங்கள் வரி அமைப்புகளைப் புதுப்பிக்க வலியுறுத்தி வரிகளும் சுங்க வரிகளும் பக்கத்தில் ஒரு பேனர் காட்டப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகளும் சுங்க வரிகளும் என்பதற்குச் செல்லவும்.
புதுப்பிக்க வலியுறுத்தும் பேனர் காட்டப்பட்டால், வரி அமைப்புகளைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
கனடா பக்கத்தில், விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்து, பொருந்தக்கூடிய பிராந்தியத்தைத் தேர்ந்தெடுத்து, உங்களிடம் இருந்தால் உங்கள் பதிவுசெய்யப்பட்ட வரி எண்ணை உள்ளிடவும்.
விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: கூடுதல் விற்பனை வரிப் பிராந்தியங்களைச் சேர்க்க, விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்து, பொருந்தக்கூடிய மாகாண வரிப் பிராந்தியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
வரி எண்ணுக்கு நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும்
வரி எண்ணுக்கு நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பது உங்கள் தொழில் சூழ்நிலைகளைப் பொறுத்தது.
உங்கள் ஸ்டோர் கனடாவைச் சேர்ந்ததாக இருந்து பின்வரும் இரண்டுமே உண்மையாக இருந்தால், பொதுவாக நீங்கள் ஒரு GST/HST கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டும்:
- நீங்கள் வரிக்குரிய தயாரிப்புகளையோ சேவைகளையோ விற்கிறீர்கள் அல்லது குத்தகைக்கு விடுகிறீர்கள்.
- கனடாவில் வரிக்குரிய விற்பனையிலிருந்து நீங்கள் ஈட்டும் வருவாய் கடந்த நான்கு முழுமையான தொடர்ச்சியான நாள்காட்டி காலாண்டுகளில் 30,000 CADக்கு அதிகமாக உள்ளது அல்லது நடப்பு நாள்காட்டி காலாண்டில் 30,000 CADக்கு அதிகமாக உள்ளது.
உங்கள் ஸ்டோர் கனடாவைச் சேர்ந்ததாக இல்லாமல் இருந்து பின்வரும் இரண்டுமே உண்மையாக இருந்தால், பொதுவாக நீங்கள் ஒரு GST/HST கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டும்:
- நீங்கள் கனடாவிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வரிக்குரிய தயாரிப்புகளையோ சேவைகளையோ விற்று, கனடாவில் அமைந்துள்ள ஒரு கிடங்கிலிருந்து அந்த ஆர்டர்களை நிறைவேற்றுகிறீர்கள்.
- கனடாவில் வரிக்குரிய விற்பனையிலிருந்து நீங்கள் ஈட்டும் வருவாய் கடந்த பன்னிரண்டு மாதங்களில் 30,000 CADக்கு அதிகமாக உள்ளது.
மேற்கண்ட சூழல்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் உங்கள் விற்பனைக்கு வரிகளை வசூலிக்க வேண்டியிருக்கலாம், அந்த வரிகளைத் தொடர்புடைய வரி அதிகாரியிடம் பணம் அனுப்ப வேண்டியிருக்கலாம், மேலும் வரி அதிகாரியிடம் வழக்கமான அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் விற்பனை வரம்பை விடக் குறைவாக இருந்தால், நீங்கள் ஒரு GST/HST கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டியதில்லை, வரிகளை வசூலிக்கவோ பணம் அனுப்பவோ வேண்டியதில்லை.
தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் விற்கும் ஒரு மாகாணம் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (GST) தனித்து மாகாண விற்பனை வரியை (PST) விதித்தால், நீங்கள் அந்த மாகாணத்திலும் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம்.
விற்பனை வரி விதிக்க வேண்டுமா என்பது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், உள்ளூர் வரி கணக்காளர் அல்லது பிற வரி நிபுணர் மற்றும் மாகாண, கூட்டாட்சி வரி முகமைகளிடம் கலந்தாலோசிக்கவும்.
மாகாண அளவில் நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும்
தனி மாகாண வரியை விதிக்கும் மாகாணங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, மானிட்டோபா, கியூபெக் மற்றும் சஸ்காட்செவன் ஆகியவை ஆகும். இந்தத் தேவைகள் மாகாணத்தைப் பொறுத்து மாறுபடும். கூடுதல் விவரங்களுக்கு, கனடிய வரிகளுக்கான குறிப்பைப் பார்க்கவும்.
எடுத்துக்காட்டாக, அந்த மாகாணங்களில் நீங்கள் செயல்பட்டாலோ விளம்பரம் செய்தாலோ பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம்.
பதிவுசெய்து உங்கள் வரி எண்ணைச் சேர்க்கவும்
GST/HST-க்கு, CRA (கனடா வருவாய் முகமை) இணையதளத்தில் நீங்கள் பதிவுசெய்யலாம். மாகாண அடிப்படையில் நீங்கள் பதிவுசெய்ய வேண்டும் எனில், குறிப்பிட்ட மாகாண இணையதளத்தில் அவ்வாறு செய்யலாம். கனடிய வரி முகமைகளிடம் பதிவுசெய்தல் என்பதன் பட்டியலைப் பார்க்கவும்.
நீங்கள் பதிவுசெய்த பிறகு, வரிகளும் சுங்க வரிகளும் பக்கத்தில் உங்கள் வரிப் பதிவு எண்ணைச் சேர்க்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகளும் சுங்க வரிகளும் என்பதற்குச் செல்லவும்.
வரிப் பிராந்தியங்கள் பிரிவில், கனடா என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய பிராந்தியத்தில் வசூலி என்பதைக் கிளிக் செய்து, பொருந்தக்கூடிய பிராந்தியத்தைத் தேர்ந்தெடுத்து, உங்களிடம் இருந்தால் உங்கள் பதிவுசெய்யப்பட்ட வரி எண்ணை உள்ளிடவும்.
விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: கூடுதல் விற்பனை வரிப் பிராந்தியங்களைச் சேர்க்க, புதிய பிராந்தியத்தில் வசூலி என்பதைக் கிளிக் செய்து, பொருந்தக்கூடிய மாகாண வரிப் பிராந்தியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
வரி அமைப்புகளை ஓவர்ரைடு செய்யவும்
உங்கள் ஸ்டோருக்குப் பிரத்தியேகமாகப் பொருந்தும் அமைப்புகளை, அதாவது நீங்கள் பதிவு எண்களை உள்ளிட்டுள்ளவற்றை மட்டும் ஓவர்ரைடு செய்யலாம். நீங்கள் புதுப்பிக்கும்போது கனடிய வரி ஓவர்ரைடுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் தகவலுக்கு, கனடிய வரி ஓவர்ரைடுத் தேவைகளைப் பார்க்கவும்.
வரைவு ஆர்டர் மூலம் உங்கள் வரி அமைப்புகளைச் சரிபார்க்கவும்
நேரலை ஆர்டர்களைச் செயல்படுத்துவதற்கு முன், ஒரு வரைவு ஆர்டரை உருவாக்குவதன் மூலம் உங்கள் வரி அமைப்புகள் சரியாகக் கணக்கிடப்படுகின்றனவா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். உண்மையான பரிவர்த்தனைகளைப் பாதிக்காமல் வரி கணக்கீடுகளைச் சோதிக்க இது உங்களை அனுமதிக்கிறது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரில் ஒரு தயாரிப்பைச் சேர்க்கவும்.
நீங்கள் வரி வசூலிப்பதற்குப் பதிவுசெய்துள்ள மாகாணத்திலுள்ள கனேடிய ஷிப்பிங் முகவரியைக் கொண்ட வாடிக்கையாளரைச் சேர்க்கவும்.
சரியான வரி வீதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய, வரிப் பிரிவை மதிப்பாய்வு செய்யவும்.
வரிக் கணக்கீடு சரியாக இருந்தால், நீங்கள் வரைவு ஆர்டரை நீக்கலாம். வரிக் கணக்கீடு தவறாக இருந்தால், உங்கள் வரி அமைப்புகளையும் பதிவுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.
பொதுவான வரி அமைப்புகள் தொடர்பான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்
உங்களின் கனடா வரி அமைப்புகளில் சிக்கல்களை எதிர்கொண்டால், பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.
வரி அமைப்புகள் சேமிக்கப்படாததைப் பிழையறிந்து திருத்துதல்
உங்கள் வரி அமைப்புகள் சேமிக்கப்படவில்லை எனில், சாத்தியமான பின்வரும் காரணங்களைச் சரிபார்க்கவும்:
உலாவியின் தற்காலிக நினைவகச் சிக்கல்கள்
- வேறொரு உலாவி அல்லது மறைநிலைச் சாளரத்தில் இதே செயலை முயன்று பார்க்கவும்.
- அங்கு வேலை செய்தால், உங்கள் உலாவியின் தற்காலிக நினைவகம் மற்றும் குக்கீகளை அழித்துவிட்டு, மீண்டும் முயலவும்.
உலாவி நீட்டிப்புகளின் குறுக்கீடு
- உலாவி நீட்டிப்புகளைத் தற்காலிகமாக முடக்கவும்.
- நீட்டிப்புகள் இல்லாத உலாவி அல்லது மறைநிலைச் சாளரத்தைப் பயன்படுத்தவும்.
நெட்வொர்க் இணைப்பு
- மற்ற நிர்வாகிப் பக்கங்கள் சரியாக ஏற்றப்படுகிறதா எனச் சரிபார்க்கவும்.
- பக்கத்தைப் புதுப்பிக்கவும் அல்லது வேறு நெட்வொர்க் இணைப்பில் முயலவும்.
வரிப் பதிவு காட்டப்படாததைப் பிழையறிந்து திருத்துதல்
வரிப் பதிவைச் சேர்த்த பிறகும் அது காட்டப்படவில்லை எனில், சாத்தியமான பின்வரும் காரணங்களைச் சரிபார்க்கவும்:
தவறான வரி எண் வடிவமைப்பு
- CRA வடிவமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் எண்ணை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
- உங்களின் GST/HST எண்ணை
123456789RT0001என்ற வடிவமைப்பில் உள்ளிடவும்.
தவறான பிராந்தியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
- பிராந்தியக் கீழ்தோன்றும் மெனுவில் தேர்ந்தெடுத்ததை மதிப்பாய்வு செய்யவும்.
- GST/HST-க்கு Canada என்பதையும் PST/QST/RST-க்குக் குறிப்பிட்ட மாகாணத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
மாகாணப் பதிவு விடுபட்டுள்ளது
- BC, MB, QC அல்லது SK ஆகியவற்றுக்கான மாகாணக் கணக்குகளைச் சேர்த்துள்ளீர்களா எனச் சரிபார்க்கவும்.
- நீங்கள் மாகாண வரி வசூலிக்க வேண்டிய ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனிப் பதிவுகளைச் சேர்க்கவும்.
தவறான வரி வீதங்களைப் பிழையறிந்து திருத்துதல்
உங்கள் வரி வீதங்கள் தவறாக இருப்பதாகத் தோன்றினால், சாத்தியமான பின்வரும் காரணங்களைச் சரிபார்க்கவும்:
தயாரிப்பு வகைகள் ஒதுக்கப்படவில்லை
- தயாரிப்புகள் பக்கத்திற்குச் சென்று, வகை புலத்தைச் சரிபார்க்கவும்.
- உங்கள் தயாரிப்புகளுக்குப் பொருத்தமான தயாரிப்பு வகைகளை ஒதுக்கவும்.
வரி ஓவர்ரைடுகள் பயன்பாட்டில் உள்ளன
- அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் > கனடா > வரி ஓவர்ரைடுகள் என்பதற்குச் செல்லவும்.
- பயன்படுத்தக் கூடாத ஓவர்ரைடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை மதிப்பாய்வு செய்து அகற்றவும்.
வாடிக்கையாளருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
- வரி விலக்கு அமைப்புகளுக்கு வாடிக்கையாளர் சுயவிவரத்தைச் சரிபார்க்கவும்.
- வரி விலக்கு அமைப்புகளை மதிப்பாய்வு செய்து, பொருத்தமானதாக இல்லை எனில் அகற்றவும்.
தயாரிப்புகளுக்கு வரி வசூலிக்க வேண்டாம் என அமைக்கப்பட்டுள்ளது
- இந்தத் தயாரிப்புக்கு வரி வசூலி அமைப்புக்காகத் தயாரிப்பின் விலை நிர்ணயம் பிரிவைச் சரிபார்க்கவும்.
- தயாரிப்புக்கு வரி விதிக்கப்பட வேண்டும் எனில், இந்தத் தயாரிப்புக்கு வரி வசூலி விருப்பத்தைச் செயல்படுத்தவும்.
செக்அவுட்டில் வரி வசூலிக்கப்படாததைப் பிழையறிந்து திருத்துதல்
செக்அவுட்டில் வரி வசூலிக்கப்படவில்லை எனில், சாத்தியமான பின்வரும் காரணங்களைச் சரிபார்க்கவும்:
பிராந்தியத்திற்குப் பதிவு எதுவும் சேர்க்கப்படவில்லை
- உங்கள் வரி அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்.
- உங்கள் GST/HST மற்றும் மாகாண வரிப் பதிவுகளைச் சேர்க்கவும்.
வாடிக்கையாளர் முகவரி பதிவுசெய்யப்பட்ட பிராந்தியத்தில் இல்லை
- வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரி மாகாணத்தைச் சரிபார்க்கவும்.
- அந்த மாகாணத்தில் நீங்கள் வரி வசூலிக்க வேண்டும் எனில், அதற்கான பதிவைச் சேர்க்கவும்.
ஸ்டோர் "வசூலிக்கப் பதிவுசெய்யப்படவில்லை" என அமைக்கப்பட்டுள்ளது
- இந்த நிலைக்காக உங்கள் கனடா வரி அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
- நீங்கள் வரி வசூலிக்க வேண்டும் எனில், உங்கள் பதிவு எண்களைச் சேர்க்கவும்.
பிற பிராந்தியங்களிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல்
கனடாவுக்கு வெளியேயுள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், அந்தப் பிராந்தியங்களில் நீங்கள் VAT-க்குப் பதிவுசெய்து அதை வசூலிக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் எங்கு விற்பனை செய்கிறீர்கள் என்பதையும் உங்கள் ஆர்டர்களின் மதிப்பையும் பொறுத்துத் தேவைகள் மாறுபடும்.
யுனைடெட் கிங்டமிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல்
யுனைடெட் கிங்டமிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், உங்கள் விற்பனையின் மதிப்பைப் பொறுத்து UK VAT-க்குப் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம். ஆர்டர் மதிப்பு £135 GBP-க்கு அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா என்பதன் அடிப்படையில் VAT தேவைகள் மாறுபடும்.
UK VAT தேவைகள், EORI எண்கள், வரம்புகள் மற்றும் VAT மற்றும் சுங்க வரிகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்த முழுமையான விவரங்களுக்கு, UK வரிகள் குறிப்பைப் பார்க்கவும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல்
ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை ஷிப்பிங் செய்யும்போது, ஆர்டர் மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி மற்றும் சுங்க விதிமுறைகள் பொருந்தும். €150 EUR-க்குச் சமமான அல்லது குறைவான ஆர்டர்களுக்கு VAT விதிக்கப்படும், அதேவேளையில் €150 EUR-க்கு அதிகமான ஆர்டர்களுக்கு இறக்குமதி VAT மற்றும் சுங்க வரிகள் விதிக்கப்படும்.
செக்அவுட்டின் போது நீங்கள் VAT மற்றும் சுங்க வரிகளை வசூலிக்கவில்லை எனில், உங்கள் வாடிக்கையாளர் டெலிவரியின் போது அவற்றை ஷிப்பிங் கேரியரிடம் செலுத்துவார். செக்அவுட்டில் VAT-ஐ வசூலிக்க, Import One-Stop Shop (IOSS) திட்டத்தில் நீங்கள் பதிவுசெய்யலாம்.
EU VAT தேவைகள், பதிவு விருப்பங்கள், வரம்புகள் மற்றும் IOSS அமைவு குறித்த முழுமையான விவரங்களுக்கு, EU வரிகள் குறிப்பைப் பார்க்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
GST மற்றும் HST ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன?
GST (சரக்கு மற்றும் சேவை வரி) என்பது கனடா முழுவதும் பொருந்தும் 5% கூட்டாட்சி வரியாகும். கூட்டாட்சி GST உடன் மாகாண விற்பனை வரியையும் இணைத்து ஒற்றை வரியாகப் பங்கேற்கும் மாகாணங்களில் (ஒன்டாரியோ, நியூ பிரன்சுவிக், நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர், நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு) HST (ஒருங்கிணைந்த விற்பனை வரி) வசூலிக்கப்படுகிறது. நீங்கள் GST-க்குப் பதிவுசெய்திருந்தால், HST-க்கும் தானாகவே பதிவுசெய்யப்படுவீர்கள். கனேடிய வரிகள் குறித்து மேலும் அறிக.
எனக்குத் தனித்தனி மாகாணப் பதிவுகள் ஏன் தேவை?
பிரிட்டிஷ் கொலம்பியா, மானிட்டோபா, கியூபெக் மற்றும் சஸ்காட்செவன் ஆகியவை GST-யிலிருந்து தனித்தனியாக மாகாண விற்பனை வரியை வசூலிக்கின்றன. நீங்கள் இந்த மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்று, அவர்களின் பதிவு வரம்புகளைப் பூர்த்திசெய்தால், ஒவ்வொரு மாகாணத்திலும் தனித்தனியாகப் பதிவுசெய்து, GST உடன் சேர்த்து அவர்களின் அந்தந்த மாகாண வரிகளையும் (PST, RST அல்லது QST) வசூலிக்க வேண்டும்.
புதுப்பித்த பிறகு, என்னிடம் உள்ள வரி ஓவர்ரைடுகளைப் பயன்படுத்தலாமா?
ஆம், ஆனால் சில கட்டுப்பாடுகள் உள்ளன. நீங்கள் பதிவு எண்களை உள்ளிட்டுள்ள பிராந்தியங்களுக்கு மட்டுமே ஓவர்ரைடுகள் பொருந்தும். விரிவான தேவைகளுக்கு, கனடிய வரி ஓவர்ரைடு தேவைகள் என்பதைப் பார்க்கவும்.
எனது வரி வீதங்கள் சரியானவையா என்பதை நான் எப்படி அறிவது?
நீங்கள் பதிவுசெய்துள்ள பிராந்தியங்களில் தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் முகவரியுடன் வரைவு ஆர்டரை உருவாக்கி உங்கள் வரி வீதங்களைச் சரிபார்க்கலாம். கணக்கிடப்பட்ட வரி வீதங்களை, கனடிய வரிகளுக்கான குறிப்பு என்பதில் பட்டியலிடப்பட்டுள்ள தற்போதைய வீதங்களுடன் ஒப்பிடவும்.
புதுப்பித்த பிறகு, எனது மொத்த வரித் தொகைகள் ஏன் சற்று வித்தியாசமாக உள்ளன?
புதிய வரி அம்சங்களுக்குப் புதுப்பித்த பிறகு, வரித் தொகைகள் விலைப்பட்டியல் அளவில் இல்லாமல் தனித்தனி உருப்படி அளவிலேயே ரவுண்ட்-ஆஃப் செய்யப்படுகின்றன. இதனால் மொத்த வரித் தொகைகளில் சிறிய மாறுபாடுகள் (பொதுவாக சில சென்ட்கள்) ஏற்படலாம். வரி ரவுண்ட்-ஆஃப் செய்தல் பற்றி மேலும் அறிக.
கனடிய வரி அமைப்புகள் தொடர்பான உதவியைப் பெறுங்கள்
கனடிய வரிகள் தொடர்பான கேள்விகளுக்கு, உங்களுக்குத் தேவைப்படும் உதவியின் வகையைப் பொறுத்தே யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
பின்வருபவை தொடர்பான உதவிக்கு, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்:
- உங்கள் Shopify நிர்வாகியில் வரிப் பதிவுகளை எவ்வாறு சேர்ப்பது அல்லது மாற்றுவது
- வரிக் கணக்கீடுகள் அல்லது அமைப்புகளில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள்
- Shopify-இன் வரி அம்சங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்
- வரி அமைப்புகள் தொடர்பான பிழைச் செய்திகளுக்குச் சிக்கல் தீர்த்தல்
பின்வருபவை தொடர்பான உதவிக்கு, வரி நிபுணர் அல்லது உள்ளூர் வரி அதிகார அமைப்பைத் தொடர்புகொள்ளவும்:
- GST/HST அல்லது மாகாண விற்பனை வரிக்காக நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா
- உங்களின் வரிப் பொறுப்புகள் மற்றும் இணக்கத் தேவைகளைத் தீர்மானித்தல்
- வரிக் கணக்குத் தாக்கல் செய்தல் அல்லது வரிப் பணம் அனுப்புதல் தொடர்பான கேள்விகள்
- உங்களின் குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிச் சட்டங்களைப் புரிந்துகொள்ளுதல்
கனடிய வரிச் சிக்கல்கள் தொடர்பாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளத் தயாராகுதல்
உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க, Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன் பின்வரும் தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்:
- என்ன நடக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது என்பதற்கான விளக்கம்
- சிக்கலைக் காட்டும் ஆர்டரின் நிர்வாகி இணைப்பு (ஆர்டர்கள் என்பதற்குச் சென்று, ஆர்டரைக் கிளிக் செய்து, உங்கள் உலாவியிலிருந்து URL-ஐ நகலெடுக்கவும்)
- முடிந்தால், ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வரிகள் சரியாகக் கணக்கிடப்பட்ட ஒரு ஆர்டரின் நிர்வாகி இணைப்பு
- உங்கள் GST/HST பதிவு எண் மற்றும் மாகாண வரிப் பதிவு எண்கள் (PST, QST, RST) ஏதேனும் இருப்பின் அவை
- வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரி (மாகாணம் மற்றும் அஞ்சல் குறியீடு)
- சிக்கல் எப்போது ஏற்படத் தொடங்கியது
- சிக்கல் தீர்த்தல் பிரிவிலிருந்து நீங்கள் ஏற்கனவே முயன்றுபார்த்த படிகள்