Shopify இல் அடையாளச் சரிபார்ப்பு
அடையாளச் சரிபார்ப்பானது உங்கள் வணிகத்தை ஆள்மாறாட்டம், கணக்கு கையகப்படுத்தல்கள் மற்றும் மோசடியான செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கிறது. நிதி சார்ந்த ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படவும், உங்கள் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் Shopify-க்கு இந்தச் செயல்முறை உதவுகிறது.
இந்தப் பக்கத்தில்
அடையாளச் சரிபார்ப்புக்கான தேவைகள்
சரியான நபர் அல்லது வணிகம்தான் ஈடுபட்டுள்ளதை உறுதிசெய்ய அடையாளச் சரிபார்ப்பு உதவுகிறது. சரிபார்ப்பை யார் நிறைவு செய்வது, எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன, தரவு எப்படிப் பாதுகாக்கப்படுகிறது ஆகிய தகவல்கள் இதில் அடங்கும்.
அடையாளச் சரிபார்ப்புக் கோரிக்கையை யார் நிறைவுசெய்ய வேண்டும்
பெரும்பாலான நேரங்களில், கடையின் உரிமையாளர் அடையாளச் சரிபார்ப்புக் கோரிக்கையை நிறைவுசெய்ய வேண்டியிருக்கும். கணக்கு விவரங்கள் மாறும்போதோ குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடக்கும் மதிப்பாய்வுகளின்போதோ மீண்டும் சரிபார்ப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படலாம்.
கடையின் நிர்வாகிகளைத் தவிர்த்து வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட தனிநபருக்கு அடையாளச் சரிபார்ப்புக் கோரிக்கை அனுப்பப்படலாம். ஒரு வணிகர் மீது புகாரளிப்பது போன்ற சில படிவங்களைச் சமர்ப்பிக்கும்போதோ ஒருவர் தன் கணக்கில் உள்ள விவரங்களைப் புதுப்பிப்பதற்குக் கோரிக்கை விடுக்கும்போதோ இது நிகழும்.
அடையாளச் சரிபார்ப்புக் கோரிக்கைக்குத் தேவையானவை
அடையாளச் சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய, பின்வருபவை தேவைப்படுகின்றன:
- பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது தேசிய அடையாள அட்டை போன்ற அரசு வழங்கிய செல்லுபடியாகக்கூடிய புகைப்படத்துடன் கூடிய ID.
- உங்கள் சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஒரு செல்ஃபி அல்லது சிறிய நேரலைச் சரிபார்ப்பு.
- வேலை செய்யும் கேமரா, நல்ல வெளிச்சம் மற்றும் சீரான இணைய இணைப்பு உள்ள ஒரு சாதனம்.
அடையாளச் சரிபார்ப்பு எப்போது தேவைப்படும்
பின்வரும் சூழ்நிலைகளில் அடையாளச் சரிபார்ப்பு கோரப்படலாம்:
- உங்கள் Shopify Payments கணக்கை அமைக்கும்போது அல்லது புதுப்பிக்கும்போது
- Shopify Capital அல்லது Credit-க்கு விண்ணப்பிக்கும்போது
- ஏஜென்டிக் திட்டத்தில் பதிவுசெய்யும்போது
- சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்படும்போது
- உங்களின் இரு-படி அங்கீகார முறையையோ மின்னஞ்சலுக்கான அணுகலையோ இழந்திருக்கையில் உங்கள் கணக்கிற்கான அணுகலை மீட்டெடுக்கும்போது
உங்கள் கணக்கிற்கான அணுகலை மீட்டெடுக்கிறீர்கள் என்றால், உங்களின் கணக்குப் பாதுகாப்பு அமைப்புகளில் Shopify மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு நீங்கள்தான் முறையான கணக்குதாரர் என்பதை உறுதிசெய்ய அடையாளச் சரிபார்ப்பு கோரப்படலாம். மீட்டெடுப்புக்கான கோரிக்கையை நீங்களே தொடங்கியிருந்தாலும் இது தேவைப்படலாம்.
கணக்கு மீட்டெடுப்பின்போது உங்களுக்குப் புதிய சரிபார்ப்பு அமர்வு தேவைப்பட்டால், accounts.shopify.com இலிருந்து கணக்கு மீட்டெடுப்பை மீண்டும் தொடங்கி, திரையில் தோன்றும் பிராம்ட்களைப் பின்பற்றவும். அந்த மீட்டெடுப்பு அமர்வுக்கெனத் தனியாக அடையாளச் சரிபார்ப்பு இணைப்பை Shopify ஆதரவால் அனுப்ப முடியாது.
அடையாளச் சரிபார்ப்புக் கோரிக்கையை நிறைவுசெய்தல்
அடையாளச் சரிபார்ப்புச் செய்யச் சில நிமிடங்களே ஆகும், ஆனால் தகவல்களை மனிதர்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருந்தால் அதிக நேரமாகலாம். கூடுதல் தகவல்களுக்கான ஏதேனும் கோரிக்கைகள் Shopify நிர்வாகி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும். சரிபார்ப்பு நிறைவடையும் வரை சில Shopify கணக்கு அம்சங்கள் கட்டுப்படுத்தப்படலாம்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில், சரிபார்ப்புச் செயல்முறையைத் தொடங்க அடையாளச் சரிபார்ப்புப் பிராம்ட்டைக் கிளிக் செய்யவும். அல்லது, சரிபார்ப்பு மின்னஞ்சலில் உள்ள பாதுகாப்பான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- “உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்” சாளரத்தில் உள்ள தகவல்களை மதிப்பாய்வு செய்துவிட்டு, ஏற்றுத் தொடரு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் சாதனத்தில் சரிபார்ப்புச் செயல்முறையைத் தொடரவும் அல்லது வேறு சாதனத்தைப் பயன்படுத்த பிற விருப்பங்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- உங்கள் அசல் ID ஆவணத்தை (நேரடி ஆவணம்) புகைப்படம் எடுக்கவும். ஸ்கேன் செய்யப்பட்டவை, நகல்கள், திரைக்காட்சிகள் ஆகியவை ஏற்கப்பட மாட்டாது. ஆவணத்தின் நான்கு மூலைகளும் தெரிவதையும் எந்தவொரு தகவலையும் உங்கள் விரல்கள் மறைக்கவில்லை என்பதையும் உறுதிசெய்யவும்.
- உங்கள் ஆவணத்தில் இரண்டு பக்கங்கள் இருந்தால், முன்பக்கமும் பின்பக்கமும் புகைப்படம் எடுக்கவும்.
- திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றிச் செல்ஃபி அல்லது நேரலைச் சரிபார்ப்பை நிறைவுசெய்யவும். உங்கள் முகத்தில் போதுமான வெளிச்சம் படுவதை உறுதிசெய்யவும், தொப்பிகள், முகமூடிகள் அல்லது கறுப்புக்கண்ணாடிகளை அகற்றிவிடவும்.
- அனைத்துப் புகைப்படங்களும் எடுக்கப்பட்ட பிறகு, சரிபார்ப்புத் தானாகவே சமர்ப்பிக்கப்பட்டு கோரிக்கை நிறைவடையும்.
ஆவணப் பதிவேற்றப் பரிந்துரைகள்
ஆவணங்களைப் பதிவேற்றும்போது இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றவும்:
- ஆவணத்தின் தரம்:
- செல்லுபடியாகக்கூடிய, காலாவதியாகாத ஆவணத்தைப் பயன்படுத்தவும்.
- கண்ணைக் கூசும் ஒளி, நிழல்கள், பிரதிபலிப்புகளைத் தவிர்க்க, பிரகாசமான, மறைமுகமான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும்.
- ID-ஐச் சமதளமான, வேறுபட்ட நிறமுடைய பின்புலத்தில் வைக்கவும், மேலும் படமெடுக்கும் முன் கேமரா லென்ஸைச் சுத்தப்படுத்தவும்.
- அனைத்து விளிம்புகளும் முழுமையாகத் தெரியும்படி, படம் மங்கலாக இல்லாமல் தெளிவாக இருப்பதை உறுதிசெய்யவும்.
- தகவல் பொருத்தம்:
- ஆவணத்தில் உள்ள பெயரானது Shopify கணக்கில் உள்ள பெயருடன் சரியாகப் பொருந்த வேண்டும்.
- ஆவணத்தில் உள்ள பிறந்த தேதியும் கணக்கு விவரங்களுடன் பொருந்த வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட தனிநபருடன் தொடர்புடைய சரிபார்ப்புக் கோரிக்கைகளுக்கு, செயல்முறையின் முதல் படியில் அவர்களின் பெயர் காட்டப்படும். அந்தப் பெயருக்குப் பொருந்தும் வகையில் ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்யவும்.
- சாதனம், உலாவி மற்றும் வலையமைப்பு:
- உலாவி அல்லது மொபைல் சாதன அமைப்புகளில் கேமராவுக்கான அனுமதிகள் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
- Chrome, Safari அல்லது Firefox உலாவியின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தவும். டெஸ்க்டாப் மூலம் நடக்கும் சரிபார்ப்பு தோல்வியடைந்தால், மொபைல் சாதனத்தைப் பயன்படுத்த முயலவும்.
- பதிவேற்றத்தின்போது VPN-கள் அல்லது ப்ராக்ஸிகளை முடக்கிவிட்டு, சீரான இணைய இணைப்பு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
IDV கோரிக்கைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
IDV ஓட்டத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
உங்களால் சரிபார்ப்பு ஓட்டத்தைத் திறக்க முடியவில்லை என்றால், சிக்கல் தீர்ப்பதற்கான இந்தப் படிகளை முயலவும்:
- உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து வெளியேறி மீண்டும் உள்நுழையவும். உங்களுக்கு உள்நுழைவதில் சிக்கல் இருந்தால், உள்நுழைவுச் சிக்கல் தீர்த்தல் வழிகாட்டியை மதிப்பாய்வு செய்யவும்.
- மறைநிலைப் பயன்முறை (incognito) அல்லது வேறு சாதனத்தில் முயலவும்.
- உங்கள் உலாவியின் தேக்ககத்தையும் (cache) குக்கீகளையும் அழிக்கவும்.
- அனைத்துக் குக்கீகளையும் தடுக்கும்படி உலாவி அமைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யவும்.
- மொபைல் டேட்டா அல்லது வேறொரு இணைய இணைப்பைப் பயன்படுத்த முயலவும்.
- உங்கள் உலாவி புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
- நீங்கள் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) எதையும் பயன்படுத்தவில்லை என்பதையோ Shopify-ஐத் தடுக்கும் ஃபயர்வால் எதுவும் இயக்கப்படவில்லை என்பதையோ உறுதிசெய்யவும்.
உங்கள் கேமராவில் சிக்கல் தீர்த்தல்
உங்கள் கேமராவைக் கண்டறிய முடியவில்லை அல்லது அது முடக்கப்பட்டிருந்தால், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை முயலவும்:
- உங்கள் உலாவி அமைப்புகளில் கேமரா அனுமதிகளைச் சரிபார்த்து அனுமதிக்கவும்:
- பெரும்பாலான உலாவிகளின் முகவரிப் பட்டியில் கேமரா அல்லது பூட்டு ஐகான் காண்பிக்கப்படும்
- உங்கள் உலாவியின் தள அமைப்புகளில் கேமரா அனுமதிகளைக் கண்டறியவும்
- கேமரா அனுமதிகளில் Shopify-க்கு அணுகல் வழங்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்
- உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்புகளில் கேமரா அனுமதிகளைச் சரிபார்க்கவும்:
- உங்கள் சிஸ்டத்தின் தனியுரிமை அல்லது பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கவும்
- கேமரா அல்லது மீடியா அனுமதிகளைத் தேடவும்
- உங்கள் உலாவி கேமராவை அணுக அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்
- கேமராவைப் பயன்படுத்தக்கூடிய பிற செயலிகள் அனைத்தையும் மூடவும்.
- சரிபார்ப்புப் பக்கத்தைப் புதுப்பித்து மீண்டும் முயலவும்.
உங்கள் ஆவணங்களில் சிக்கல் தீர்த்தல்
உங்கள் ஆவணம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இந்தச் சிக்கல் தீர்க்கும் படிகளை முயலவும்:
- வேறு செல்லுபடியாகும் அரசு ID-ஐப் பயன்படுத்தவும் (பாஸ்போர்ட்டுகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன).
- படமெடுக்கும்போது வெளிச்சம் நன்றாக இருப்பதை உறுதிசெய்யவும்.
- ஆவணத்திலிருந்து உறைகள் அல்லது கவர்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றவும்.
- ஃபிரேமில் முழு ஆவணமும் தெரியும்படி காட்டவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவண வகை மற்றும் நாடு ஆகியவை உங்களின் உண்மையான ஆவணத்துடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும்.
சரிபார்ப்பு முயற்சிகள் அல்லது "எங்களால் உங்களைச் சரிபார்க்க முடியவில்லை" என்ற பிழைச் செய்தியில் சிக்கல் தீர்த்தல்
உங்கள் முயற்சிகள் தீர்ந்துவிட்டாலோ “எங்களால் உங்களைச் சரிபார்க்க முடியவில்லை” என்ற பிழைச் செய்தியைப் பெற்றாலோ, இந்தச் சிக்கல் தீர்க்கும் படிகளை முயலவும்:
- மீண்டும் முயல்வதற்கு முன் சிறிது நேரம் காத்திருக்கவும்.
- இந்தச் சிக்கல் குறித்த ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.
- சிக்கல் தொடர்ந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
ஆவணத்தில் வேறு பெயர் இருப்பதற்கான சிக்கலைத் தீர்த்தல்
சரிபார்ப்புக் கோரிக்கையில் உள்ள பெயருடன் உங்கள் ஆவணங்கள் பொருந்தவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் Shopify Payments பிரதிநிதி விவரங்களைப் புதுப்பிக்க அவர்கள் உதவலாம்.