இரு-படி அங்கீகாரத்தின் மூலம் உங்கள் கணக்கைப் பாதுகாத்தல்

இரு-படி அங்கீகாரம் (இரு காரணி அங்கீகாரம் அல்லது பலகாரணி அங்கீகாரம் என்றும் அழைக்கப்படுகிறது) மிகவும் பாதுகாப்பான உள்நுழைவுச் செயல்முறையை வழங்குகிறது. உங்களைத் தவிர வேறு எவரும் உங்கள் கணக்கைப் பயன்படுத்தி உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழைய முயன்றால் இரு-படி அங்கீகாரம் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். நீங்கள் உள்நுழைய முயலும்போது, இரண்டு தனித்தனிப் படிகளை நீங்கள் நிறைவு செய்ய வேண்டும்:

  1. மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகிய உங்கள் கணக்குச் சான்றுகளை உள்ளிடவும்.
  2. மொபைல் சாதனம் அல்லது பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தி உங்களின் உள்நுழைவு முயற்சியை அங்கீகரிக்கவும்.

அங்கீகரிக்கப்படாத நபர் உங்கள் கணக்கை அணுகுவதை இரு-படி அங்கீகாரம் மிகவும் கடினமாக்குகிறது. வேறொருவர் உங்கள் கடவுச்சொல்லைத் தெரிந்துகொண்டாலும், இரண்டாவது படி இல்லாமல் அவர்களால் உள்நுழைய முடியாது.

இரு-படி அங்கீகாரம் என்பது பாதுகாப்பான உள்நுழைவு முறையில் ஒரு வகையாகும். பாதுகாப்பான உள்நுழைவு முறைகளில் பாஸ்கீகள் மற்றும் இரு-படி அங்கீகாரம் ஆகியவை அடங்கும். SMS குறுஞ்செய்திகளைப் புதிய இரு-படி அங்கீகார முறையாக அமைக்க முடியாது, ஆனால் உங்கள் கணக்கில் ஏற்கெனவே SMS குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தினால், நீங்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான இரு-படி அங்கீகாரம் என்பது இரண்டு காரணிகளை இணைப்பதையே சார்ந்துள்ளது. இவை உங்களுக்குத் தெரிந்த ஒன்றாகவோ (உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றின் சேர்க்கை போன்றவை), உங்களிடம் உள்ள ஒன்றாகவோ (அங்கீகாரச் செயலியால் வழங்கப்படும் ஒருமுறை-பயன்பாட்டுக் குறியீடு அல்லது பாதுகாப்பு விசை போன்றவை) அல்லது உங்களுடைய ஒரு விஷயமாகவோ (கைரேகை போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரம்) இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, வங்கியில் நீங்கள் ரொக்கத்தைத் திரும்பப் பெறும்போது உங்களிடம் உள்ள ஒன்று (டெபிட் கார்டு) மற்றும் உங்களுக்குத் தெரிந்த ஒன்று (PIN) உங்களுக்குத் தேவைப்படும். இரு-படி அங்கீகாரமும் அதைப் போன்றதே, ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் Shopify கணக்கில் உள்நுழையும்போதும் ஒருமுறை-பயன்பாட்டுக் குறியீடு போன்ற அங்கீகார முறையையும் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை-பயன்பாட்டுக் குறியீட்டைப் பொறுத்தவரையில், பயன்படுத்திய பிறகு குறியீடு காலாவதியாகிவிடும், மேலும் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது.

பணியாளர்கள் தங்களின் சொந்தத் தனிப்பட்ட கணக்குகளுக்கு இரு-படி அங்கீகாரத்தை அமைத்துக்கொள்ளலாம். கடையின் உரிமையாளர் வேறு எந்தப் பணியாளருக்கும் இரு-படி அங்கீகாரத்தைச் செயல்படுத்த முடியாது.

உங்கள் ஸ்டோர் அல்லது பயனர் கணக்கிற்கு இரு-படி அங்கீகாரம் தேவைப்படும்போது, Shopify POS இல் உள்நுழையும்போது இரு-படி அங்கீகாரத்தை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டியிருக்கலாம். Shopify POS ஆனது இரு-படி அங்கீகார எச்சரிக்கை உரையாடல் அல்லது பேனரைக் காட்டினால், உங்கள் Shopify POS அமைப்பைப் பாதுகாத்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் இரு-படி அங்கீகாரம் மற்றும் கணக்கில் உள்நுழைவதில் சிக்கல்கள் இருந்தால், உள்நுழைவுச் சிக்கல்களைத் தீர்த்தல் என்பதை நீங்கள் முயலலாம்.

நீங்கள் இரு-படி அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என Shopify ஏன் கோரலாம்

சில இரு-படி அங்கீகாரத் தேவைகளை உங்கள் நிறுவனம் அமைக்கிறது. பிற சந்தர்ப்பங்களில், உங்கள் தனிநபர் கணக்கின் பாதுகாப்பைப் பேணுவதற்கு, நீங்களாகவே அதை இயக்காவிட்டாலும் இரு-படி அங்கீகாரம் தேவை என Shopify கோரும். Shopify கோரும்பட்சத்தில், நீங்கள் அடுத்தமுறை உள்நுழையும்போது இரு-படி அங்கீகார முறையை அமைக்குமாறு கேட்கப்படுவீர்கள், மேலும் Shopify நிர்வாகிக்குத் தொடர்வதற்கு முன்பு அமைவை நிறைவுசெய்ய வேண்டும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, இத்தேவைக்குப் பின்னணியிலுள்ள குறிப்பிட்ட காரணிகளை Shopify பகிர்வதில்லை, மேலும் இது செயல்பாட்டில் இருக்கும்போது இதை முடக்க முடியாது. இரு-படி அங்கீகாரத்தை அமைப்பது, வேறு யாருக்காவது உங்கள் கடவுச்சொல் தெரிந்தாலும்கூட உங்கள் கணக்கையும் ஸ்டோரையும் பாதுகாக்க உதவும்.

ஒரு முறையைத் தேர்வுசெய்யவும் அமைக்கவும் உங்களுக்கு உதவி தேவையெனில், இப்பிரிவிலுள்ள அங்கீகார முறைகளைப் பார்க்கவும். உங்களால் அமைப்பை நிறைவுசெய்யவோ உள்நுழையவோ முடியாவிட்டால், உள்நுழைவுச் சிக்கல்களைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

இந்தப் பிரிவில்