வணிகர்களுக்காக 3D மாடல்களை உருவாக்குதல்
வணிகர் ஒருவரின் சார்பாக நீங்கள் தயாரிப்புகளின் 3D மாடல்களை உருவாக்கும்போது, அந்த மாடல் குறிப்பிட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் மாடல் அந்தத் தரநிலைகளைப் பூர்த்தி செய்தால், வணிகர் உயர்தரமான, பல்திறன் வாய்ந்த மாடலைப் பெறுவார், அதை ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), தயாரிப்பு ரெண்டரிங், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களுக்குப் பயன்படுத்தலாம். மாடல் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், வணிகர் மாடலை நிராகரிக்க வாய்ப்புள்ளது.
3D மாடல் பூர்த்தி செய்ய வேண்டிய மாடலிங் தரநிலைகளை இந்த வழிகாட்டி விளக்குகிறது, மேலும் வணிகர் ஒரு மாடலை நிராகரிக்கக் காரணமான சில பொதுவான குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் பக்கத்தில்
பொதுவாகப் பயன்படுத்தப்படும் 3D மாடலிங் மென்பொருள்
வணிகர்களுக்காக 3D மாடல்களை உருவாக்க பின்வரும் 3D மென்பொருள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது:
Maya
Autodesk Maya என்பது 3D மாடலிங்கிற்கான தொழில்துறை தரநிலையாகும். உயர்தர 3D மாடல்களை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளும் Maya-இல் உள்ளன.
Blender
Blender என்பது ஒரு இலவச மாற்றுமென்பொருளாகும், 3D மாடலிங்கைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த தேர்வாகும். 3D மாடல் கோப்புகளை முன்னோட்டமிடவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
3ds Max
3ds Max என்பது Autodesk-இலிருந்து வரும் மற்றொரு 3D மாடலிங் மென்பொருளாகும். 3ds Max, Maya அளவுக்கு மாடலிங்கை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், உங்களுக்குத் தேவைப்படும் அனைத்துக் கருவிகளும் இதில் உள்ளன.
ZBrush
Pixologic-இன் ZBrush என்பது ஓர் எளிமையான ஸ்கல்ப்டிங் நிரலாகும். ZBrush-இல் மென்மையான மேற்பரப்புகளையும் உயர்தர நுணுக்கங்களையும் எளிதாக உருவாக்கலாம், ஆனால் மேம்படுத்தப்பட்ட மெஷ்களை உருவாக்குவதற்கு இது உகந்தது அல்ல.
Substance Painter
Substance Painter என்பது உறுதியான கருவியாகும், 3D இடத்தில் நேரடியாக மாடல் மீது வண்ணம் தீட்டுவதன் மூலம் உயர்தர டெக்ஸ்ச்சர்களை உருவாக்க இது உங்களை அனுமதிக்கிறது. GLB வடிவமைப்பில் மாடல்களை ஏற்றுமதி செய்யவும் இதைப் பயன்படுத்தலாம்.
Photoshop
Adobe Photoshop என்பது மலிவான ஒரு விருப்பமாகும், ஆனால் 3D டெக்ஸ்ச்சர்களை உருவாக்குவதற்கு இது Substance Painter அளவுக்குச் சிறந்தது அல்ல.
உயர்தர மாடல்களின் சிறப்பியல்புகள்
ஒரு தயாரிப்பின் மாடலை உருவாக்கும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில சிறந்த நடைமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன. AR Quick Look, உலாவிகளில் உள்ள 3D வியூவர்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் தயாரிப்பு ரெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு துல்லியமான, உயர்தர மாடலை உருவாக்க இந்தச் சிறந்த நடைமுறைகள் உங்களுக்கு உதவுகின்றன.
காட்சித் துல்லியம்
மாடலானது குறிப்புப் படங்களைப் போலவே தோற்றமளிக்கிறது.
மாடல் நிஜ உலகின் அளவீட்டிற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. நிஜத் தயாரிப்பின் சரியான அளவிலேயே மாடலை உருவாக்க, மாடலை உருவாக்குபவர் சரியான யூனிட்களைப் பயன்படுத்த வேண்டும்:

மெஷ் தரம்
மாடலில் தேவையான அளவு ஜியோமெட்ரி மட்டுமே உள்ளது:

இடது: தேவையான அளவு ஜியோமெட்ரி உள்ள மாடல். வலது: அதிக அளவு ஜியோமெட்ரி உள்ள மாடல். மாடலில் கருப்புப் பலகோணங்கள் (polygons) இல்லை. கருப்புப் பலகோணங்கள் என்பது மாடலில் ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும், அதாவது இரண்டு முகங்கள் ஒன்றோடொன்று மேலெழுந்திருப்பது அல்லது விடுவிக்கப்பட வேண்டிய நார்மல்கள் இருப்பது போன்றவற்றைக் குறிக்கும்:

நிஜத் தயாரிப்பை அசெம்பிள் செய்வதுபோலவே, தனித்தனிப் பாகங்கள் தனித்தனியாக மாடல் செய்யப்பட்டுப் பிறகு ஒன்றிணைக்கப்படுகின்றன:

இடது: பையின் கூறுகள் தனித்தனியாக மாடல் செய்யப்பட்டுள்ளன. வலது: பையின் கூறுகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மென்மையான மாற்றங்களுக்காகத் தயாரிப்பின் விளிம்புகள் பெவல் செய்யப்பட்டுள்ளன (beveled):

இடது: சரியாகப் பெவல் செய்யப்பட்ட விளிம்புகளைக் கொண்ட கனசதுரம். வலது: பெவல் செய்யப்படாத விளிம்புகளைக் கொண்ட கனசதுரம்.
ஃபிசிக்கலி-பேஸ்டு ரெண்டரிங் (PBR)
ஃபிசிக்கலி-பேஸ்டு ரெண்டரிங் (PBR) பணிப்பாய்வைப் பயன்படுத்தி டெக்ஸ்ச்சர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒரு GLB கோப்பிற்கு, நீங்கள் பின்வரும் டெக்ஸ்ச்சர் மேப்களை (maps) ஏற்றுமதி செய்ய வேண்டும்:
- டிஃப்யூஸ் (diffuse)
- நார்மல் (normal)
- சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறச் சேனல்களுக்கு முறையே ஆக்லூஷன் (occlusion), ரஃப்னஸ் (roughness) மற்றும் மெட்டல்னஸ் (metalness) ஆகியவை மேப் செய்யப்பட்ட ஓர் ஒற்றை மேப் (map)
- எமிசிவ் (emissive) (விருப்பத்திற்குரியது)
மெட்டீரியல் தரம்
ஜியோமெட்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மெட்டீரியல்கள் தயாரிப்பின் குறிப்புப் படங்களுடன் பொருந்துகின்றன.
தரம் குறைந்த மாடல்களில் நுணுக்கங்களும் நுண்ணிய விவரங்களும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. சிறிய கீறல்கள், சிராய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் ஆகியவை ஒரு மாடலை இன்னும் நம்பகமானதாகத் தோற்றமளிக்க உதவுகின்றன:

டெக்ஸ்ச்சர் கோப்புகள் அவற்றின் தெளிவுத்திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், முடிந்தவரை சிறியதாக இருக்கும்.
மாடலின் ஒவ்வொரு பண்புக்கும் (ரஃப்னஸ், மெட்டல்னஸ் மற்றும் ஆம்பியன்ட் ஆக்லூஷன் போன்றவை) ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் மேப் மட்டுமே இருக்கும்:

ஒரு GLB கோப்பிற்கு, நீங்கள் பின்வரும் மேப்களைச் சேர்க்க வேண்டும்:
- டிஃப்யூஸ் (diffuse)
- நார்மல் (normal)
- சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறச் சேனல்களுக்கு முறையே ஆக்லூஷன் (occlusion), ரஃப்னஸ் (roughness) மற்றும் மெட்டல்னஸ் (metalness) ஆகியவை மேப் செய்யப்பட்ட ஓர் ஒற்றை மேப் (map)
- எமிசிவ் (emissive) (விருப்பத்திற்குரியது)
திருத்தங்களுக்கான மாடலிங்
மெஷ் குவாட்ராங்குலேட் (quadrangulated) செய்யப்பட்டுள்ளது, அதாவது இது நான்கு பக்க வடிவவியலைப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட கோப்பு வடிவத்திற்கு ட்ரையாங்குலேட் (triangulated) செய்யப்பட்ட (மூன்று பக்க) வடிவவியல் தேவைப்பட்டாலொழிய, குவாட்ராங்குலேட் செய்யப்பட்ட வடிவவியலே சிறந்ததாகும்:

இடது: குவாட்ராங்குலேட் செய்யப்பட்ட மாடல். வலது: ட்ரையாங்குலேட் செய்யப்பட்ட மாடல். மாடலை உருவாக்கியவர் சிறப்பான ஒரு பணிபுரியும் கோப்பைப் பராமரித்துள்ளார். மாற்றங்கள் முடக்கப்படுவதற்கு அல்லது வரலாறு நீக்கப்படுவதற்கு முன்பு மாடல் கோப்பின் ஒரு பதிப்பை வைத்திருப்பது பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
பாலிகான் எண்ணிக்கை
- தயாரிப்பின் அனைத்து நுணுக்கங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில் மாடலின் பாலிகான் எண்ணிக்கை முடிந்தவரை குறைவாக உள்ளது.
- Facebook 3D பதிவுகள், AR Quick Look மற்றும் VR போன்ற மாடல் பயன்படுத்தப்படக்கூடிய பல்வேறு மீடியா வடிவங்களின் பாலிகான் எண்ணிக்கை வரம்புகளுக்கு இந்த மாடல் இணங்குகிறது.
UV தளவமைப்பு
அனைத்து UV ஷெல்களும் ஒரு டெக்ஸ்ச்சர் மேப்பில் மேப் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து UV ஷெல்களும் 1:1 என்ற இடைவெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
எந்த UV ஷெல்லும் ஒன்றோடொன்று மேல்பொருந்தவில்லை.
3D மாடலின் இயற்கையான எல்லைகளில் UV சீம்கள் வைக்கப்பட்டுள்ளன.
சரியான அன்ராப்பிங் நுட்பங்களைப் பயன்படுத்தி UV ஷெல்கள் கைமுறையாக அன்ராப் செய்யப்பட்டுள்ளன. தானியங்கி அன்ராப்பிங் கருவிகள் பயன்படுத்தப்படவில்லை:

தயாரிப்பின் மூலப்புள்ளி
தயாரிப்பின் மூலப்புள்ளி தயாரிப்பின் அடிப்பகுதியில் மையப்படுத்தப்பட்டுள்ளது:

ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகள்
- அனைத்து ஆப்ஜெக்ட்களும் ஒரே ஆப்ஜெக்ட்டாக இணைக்கப்பட்டுள்ளன.
- அனைத்து விளிம்புகளும் மென்மையாக்கப்பட்டுள்ளன.
- கட்டத்தின் மூலப்புள்ளியில் மாடலின் அடிப்பகுதி வைக்கப்பட்டுள்ளது.
- அனைத்து உருமாற்றங்களும் முடக்கப்பட்டுள்ளன.
- வரலாறு அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.
- வேறுவிதமாக தேவைப்பட்டாலன்றி, மாடலுக்கு ஒரே ஒரு மெட்டீரியல் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் தேவைகள்
- மாடல் வணிகருக்கு GLB வடிவத்தில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அறிய, நிறைவடைந்த மாடல்களை வணிகருக்கு வழங்குதல் என்பதைப் பார்வையிடவும்.
- மொத்தக் கோப்பின் அளவு சுமார் 4 MB ஆக இருக்க வேண்டும். சில மீடியாக்களுக்கு இதைவிடச் சிறிய அளவு தேவைப்படலாம்.
- முடிந்தால், டெக்ஸ்ச்சர்கள் மேம்படுத்தப்பட்ட JPG கோப்புகளாக இருக்க வேண்டும்.
மாதிரி மாடல்கள்
பின்வரும் மாடல்கள் 3D மாடலிங் தரநிலைகள் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றன. வணிகருக்கு நீங்கள் வழங்கும் மாடல்களும் இதே போன்ற தரத்தில் இருக்க வேண்டும்.
மென்மையான தயாரிப்புகள் மற்றும் கடினமான தயாரிப்புகள்
மென்மையான தயாரிப்புகள் தொடுதல் மற்றும் புவியீர்ப்பு விசையால் பாதிக்கப்படக்கூடிய வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆடைகள், போர்வைகள் மற்றும் தலையணைகள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். மென்மையான தயாரிப்புகள் நெகிழ்வானதாகத் தோற்றமளிக்க வேண்டும். அவை யதார்த்தமாகத் தோற்றமளிக்க அவற்றில் மடிப்புகளும் சுருக்கங்களும் இருக்க வேண்டும். புவியீர்ப்பு விசை அவற்றின் மீது செயல்படுவதைக் காட்டும் வகையில் மென்மையான தயாரிப்புகள் மாடல் செய்யப்பட வேண்டும். நேர்த்தியாக மடிக்கப்பட்டிருக்க வேண்டுமா, ஹேங்கரில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டுமா அல்லது தட்டையாக வைக்கப்பட வேண்டுமா என, வணிகர் அந்த உருப்படியை எப்படிக் காட்ட விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளவும்.
தொடுதல் மற்றும் புவியீர்ப்பு விசையின் விளைவுகள் இருந்தாலும் கடினமான தயாரிப்புகள் அவற்றின் வடிவத்தை மாற்றிக்கொள்ளாது. பூச்சாடிகள், பாத்திரங்கள் மற்றும் மின்னணுவியல் பொருட்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். அவை தெளிவான விளிம்புகளையும் வடிவவியலையும் கொண்டிருக்க வேண்டும். மேற்பரப்புகள் பொதுவாகக் கச்சிதமான மென்மையைக் கொண்டிருக்கும், ஒளியை நன்றாகப் பிரதிபலிக்கும். டெக்ஸ்ச்சர்களில் குறைபாடுகள் இருக்கும் ஆனால் வடிவவியலில் இருக்காது. கூடுதல் யதார்த்தத்திற்காக விளிம்புகள் பெவல் (bevel) செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மிக நுணுக்கமான தயாரிப்புகள் மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புகள்
மிக நுணுக்கமான தயாரிப்புகளில் டெக்ஸ்ச்சர்கள், லேபிள்கள் அல்லது லோகோக்கள் இருக்கும், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவை. அந்தத் தயாரிப்புகள் பார்ப்பதற்குத் தெளிவாகவும் கச்சிதமாகவும் இருக்க வேண்டும். அவற்றின் டெக்ஸ்ச்சர் இடைவெளி முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது முக்கியமாகும். அவற்றின் டெக்ஸ்ச்சர்கள் நேர்த்தியாகப் பெயிண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதிகத் தெளிவுத்திறனுடன் டெக்ஸ்ச்சர்களைப் பெயிண்ட் செய்யத் தொடங்குங்கள், தேவைப்பட்டால் கோப்பைச் சுருக்கிக்கொள்ளவும். லோகோக்களும் உரையுமுள்ள வடிவவியலின் பகுதிகள் UV மேப்பில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும்படி, தேவையெனில் அனுமதிக்கவும்.
சராசரித் தயாரிப்பை விடப் பெரிய அளவிலான தயாரிப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன. சோஃபாக்கள், கார்கள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். இந்த வகையான தயாரிப்புகளின் டெக்ஸ்ச்சர்கள் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது முக்கியமாகும். இந்தத் தயாரிப்புகள் காட்சியில் மிகவும் பெரியதாக இருக்கும் என்பதால், நீட்டப்பட்ட அல்லது குறைந்த தெளிவுத்திறன் கொண்ட டெக்ஸ்ச்சர்கள் பயனருக்கு இன்னும் தெளிவாகத் தெரியும். பெரிய அளவிலான தயாரிப்புகளுக்கான டெக்ஸ்ச்சர்கள் பெரும்பாலும் குறைந்தபட்சம் 2K ஆக இருக்க வேண்டும். அதிகத் தெளிவுத்திறன் கொண்ட டெக்ஸ்ச்சருடன் பெயிண்ட் செய்யத் தொடங்குங்கள், தேவைப்பட்டால் கோப்பைச் சுருக்கிக்கொள்ளவும்.

நேர எதிர்பார்ப்புகள்
மாடலிங் செயல்முறை தொடங்குவதற்கு முன்பே வணிகருடன் மாடலுக்கான எதிர்பார்ப்புகளைப் பற்றி நீங்கள் விவாதிக்க வேண்டும். வணிகர் வழங்கும் புகைப்படங்களின் அடிப்படையில், மாடலை உருவாக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்ற உத்தேச மதிப்பீட்டை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். பின்வரும் காரணிகள் ஒரு மாடலை உருவாக்குவதற்கு ஆகும் நேரத்தைப் பாதிக்கலாம்:
- மாடலின் சிக்கல்தன்மை
- டெக்ஸ்ச்சரின் சிக்கல்தன்மை
- மாறுபாடு விருப்பங்களின் எண்ணிக்கை
- வணிகர்கள் வழங்கிய பரிமாணங்களின் துல்லியம்
- வணிகர் வழங்கிய தயாரிப்புப் புகைப்படங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை
தர மதிப்பாய்வு
மாடல் தயாராகிவிட்டது என நீங்கள் நினைக்கும் போது, நிறைவடைந்த அனைத்துக் கோப்புகளையும் வணிகருக்கு அனுப்பும் முன்பாக நீங்களும் வணிகரும் அதை மதிப்பாய்வு செய்ய வேண்டும். வணிகருக்குத்தான் அவருடைய தயாரிப்புகளைப் பற்றி நன்கு தெரியும், மேலும் மாடல் அவர்களின் தயாரிப்புகளைச் சரியாகப் பிரதிபலிக்கிறதா என்பதை அவர்களால் சொல்ல முடியும்.
உங்கள் மதிப்பாய்வை முடிக்க, தரநிலைகள் சரிபார்ப்புப் பட்டியலை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரிபார்ப்புப் பட்டியலைப் பயன்படுத்துவதன் மூலம், மாடலை வணிகருக்கு அனுப்பும் முன் அது முடிந்தவரை துல்லியமாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யலாம். நீங்கள் மாடலை வழங்கிய பிறகு அதைத் திருத்த வேண்டிய நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்பதை இது குறிக்கிறது, அத்துடன் மாடலை வழங்குவதற்கான நேரமும் குறைகிறது.
நீங்கள் மாடலை வணிகருக்கு அனுப்பும்போது, பின்வருவனவற்றைச் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:
- 360 டிகிரியில் பரிசோதிக்கக்கூடிய வடிவத்தில் மாடலை அனுப்பவும்.
- மாடலை முன்னோட்டமிடுவதற்கு வணிகரிடம் பொருத்தமான சாதனம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- பொருந்தக்கூடிய பட்சத்தில், தேவையான வடிவத்தில் கோப்பு செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
தரநிலைகள் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ள அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, 3D மாடல் குறித்து வணிகர் திருப்தியடையும் பட்சத்தில், மாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகக் கருதலாம்.
வணிகரால் மாடல் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் சில பொதுவான தரச் சிக்கல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தவறான அளவு
மாடல் உண்மையான தயாரிப்பின் அளவிலேயே இல்லை. உண்மையான தயாரிப்பின் அருகில் ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம் மாடலை வைக்கும்போது, அவை இரண்டும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
சமச்சீரற்ற கூறுகள்
3D மாடலில் உள்ள ஒரு கூறு அந்த மாடலின் பிற கூறுகளுடன் சமச்சீரற்றதாக உள்ளது. மாடலைத் தொடங்கும் முன்பு ஒரு தயாரிப்பின் பகுதிகள் குறித்த போதுமான தகவல்களைச் சேகரித்துவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்யவும். வெறும் அளவீடுகளை மட்டுமே கொண்டு பணியாற்றாமல், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நீங்கள் கூறுகளைப் பார்க்கப் பல கோணங்களிலான ரெஃபரன்ஸ் புகைப்படங்களை வைத்திருப்பது உதவும்.
மோசமான ஜியோமெட்ரி
மாடல் காட்டப்படும் விதத்தைப் பாதிக்கக்கூடிய ஜியோமெட்ரியில் தவறுகள் இருக்கலாம். கவனிக்க வேண்டிய பொதுவான தவறுகளாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகள் உள்ளன:
- மோசமான ஸ்மூத்திங்
- மோசமான சாம்ஃபரிங்
- நான்கு அளவுகளுக்குப் பதிலாக ஐந்து அளவுகளைக் கொண்ட பாலிகன்கள், இது பின்ச்சிங்கிற்கு வழிவகுக்கலாம்
- Z-ஃபைட்டிங் (ஒரே இடத்தில் பாலிகன்கள் நகலெடுக்கப்படுதல்)
- டெசிமேஷன் அல்லது ட்ரையாங்குலேஷன் (எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் குவாட்களைப் பயன்படுத்தவும்)
- கிளிப்பிங் அல்லது இன்டர்பெனிட்ரேஷன்
- பல UV செட்கள்
- ஏற்றுமதி செய்யும்போது பல மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
சீல் செய்யப்படாத ஜியோமெட்ரி
ஆக்மென்டட் ரியாலிட்டி அல்லது வேறு சில மீடியாவில், ஜியோமெட்ரியில் உள்ள துளைகள் மற்றும் இடைவெளிகளைப் பார்ப்பது எளிது. அனைத்து விளிம்புகளும் சீல் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் புள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
தவறான வடிவம்
மாடலின் வடிவம் தயாரிப்போடு பொருந்தவில்லை. அளவுகள் மற்றும் வடிவத்தைக் கவனமாகச் சரிபார்க்கவும். உங்கள் மாடலின் நிழற்படம் தயாரிப்பு ரெஃபரன்ஸ் புகைப்படங்களுடன் பொருந்த வேண்டும்.
துல்லியமற்ற மெட்டீரியல்கள்
மாடலின் மெட்டீரியல்கள் தயாரிப்புடன் பொருந்தவில்லை. விரிவான மெட்டீரியல்கள் தான் நம்பகத்தன்மைக்கு முக்கியமாகும். மெட்டீரியல்களில் சரியான அளவில் பிரதிபலிப்புத் தன்மை, மினுமினுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
குறைந்த ரெசல்யூஷன் மற்றும் தெளிவற்ற டெக்ஸ்சர்கள்
டெக்ஸ்சர் கோப்புகள் குறைந்த ரெசல்யூஷனைக் கொண்டுள்ளதோடு மங்கலாகவும் உள்ளன. டெக்ஸ்சர் கோப்புகளை உருவாக்கும்போது, அதிக ரெசல்யூஷனுடன் தொடங்கவும். உங்களுக்கு என்ன அளவிலான டெக்ஸ்சர் கோப்பு தேவை என்பதைப் பொறுத்து, நீங்கள் பின்னர் ரெசல்யூஷனைக் குறைக்கலாம். மொபைல் இணையத்திற்கு, டெக்ஸ்சர் கோப்புகள் 2048 x 2048 px ஐ விடப் பெரியதாக இருக்கக் கூடாது. அளவுக்கேற்ப மேம்படுத்த, வெவ்வேறு அளவிலான டெக்ஸ்சர்களின் கலவையைப் பயன்படுத்தலாம்.
சிதைந்த UVகள்
மாடலின் UVகள் சிதைந்துள்ளன. UVகளில் நீட்சி அல்லது சிதைவு உள்ளதா எனக் கவனிக்கவும். அதிக விவரங்கள் அல்லது கவனம் தேவைப்படும் உருப்படிகளுக்கு (காட்டப்பட வேண்டிய லோகோ மற்றும் உரை போன்றவை) சரியான அளவு இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
நிறைவடைந்த மாடல்களை வணிகரிடம் வழங்குதல்
மாடல் ஒன்று நிறைவடைந்து அங்கீகரிக்கப்பட்டதும், உங்களுக்கும் வணிகருக்கும் சிறப்பானதாக உள்ள ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி மாடல் கோப்புகள் அனைத்தையும் நீங்கள் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மின்னஞ்சல் அல்லது Dropbox ஐப் பயன்படுத்தலாம்.
அனைத்து 3D மாடல்களையும் GLB கோப்புகளாக வழங்கவும். GLB ஃபார்மெட், பெரும்பாலான 3D வியூவர்களால் பயன்படுத்தப்படுகிறது. GLB கோப்புகள் என்பவை மாடல் மற்றும் டெக்ஸ்சர்களை உள்ளடக்கிய ஒற்றைக் கோப்புகளாகும்.
பயன்பாட்டில் உள்ள மூன்று 3d மாடலிங் புரோகிராம்களைப் பயன்படுத்தி GLB கோப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பின்வரும் மூன்று வழிகாட்டிகள் விளக்குகின்றன: